‘காமெடி ஒரு சீரியஸ் பிசினஸ்’ என்பார்கள். எந்த ஒரு கலையையும் தீவிரத்தன்மையோடு வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும், அதில் கொஞ்சம் நகைச்சுவை கலக்கும்போது அதன் வீச்சு தானாகவே விரிவடையும்.
நகைச்சுவை, நையாண்டி, பகடி போன்ற விஷயங்கள், அப்படி எக்காலத்துக்கும் தேவையானதாகவே இருக்கிறது. அதிலும், சினிமா போன்ற வெகுஜனத்தை பெரும்பான்மையைக் கொண்ட கலைக்கு, ரொம்பவே தேவைப்படுகிறது.
அந்தத் தேவையை அகமறிந்து பூர்த்தி செய்த நகைச்சுவை நடிகர்களின் பெரும் பட்டியலைக் கொண்டது தமிழ் சினிமா.
என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என அசாத்திய கலைஞர்கள் நம் தமிழ் திரையுலகை அலங்கரித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. அந்த உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து, அதில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞன் சந்தானம்.
சந்தானத்தின் நகைச்சுவை அத்தியாயங்களுக்கு பலம் சேர்ப்பவை அவரின் வசனங்களும் பாத்திர வடிவமைப்பும்தான். எந்த ஒரு பெரும் பிரயத்தனமும் இல்லாமல், அலட்டல் இல்லாத வசனங்கள் அவரிடம் வந்துவிழும்.
அவர் பாணி கவுன்டரில் கலக்குவதுதான். ஆனால், அதிலும் அறிவுஜீவியான பாத்திரம் என்றால் ஒருவகை, அப்பாவியான பாத்திரம் என்றால் இன்னொரு வகை என இரு வேறு கதாபாத்திரங்களுக்கும் அதற்கு தக்க அதன் மாடுலேஷனில், அதன் முதிர்ச்சி அளவில் கவுன்டர்களைப் பயன்படுத்துவார்.
‘பார்த்ததும் வர்றதுக்கு காதல் என்ன ‘மெட்ராஜ் ஐ’யா?’,
‘ஊருக்குள்ள அஞ்சாறு ஃபிரெண்டு வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஃப்ரெண்ட வெச்சிக்கிட்டு நான் படுற இம்சை இருக்கே’,
‘புன்னகை அரசிதான்பா. நான் என்ன புழுங்கல் அரிசினா சொன்னேன்?’,
‘சாகப்போற நேரத்துல தேங்காய் எண்ணெய வெச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது?’, ‘அவ ஸாரி கேட்டா, நீ பிளவுஸூம் சேர்த்து வாங்கித் தர வேண்டியதுதானே’ என இயல்பாக இவர் கொடுத்த கவுன்டர்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு கேங்கிலும் ஒரு சந்தானத்தை உருவாக்கியது.
படத்தின் மையத்திலிருந்து விலகி, தனி டிராக்கில் காமெடி காட்சிகள் வந்துகொண்டிருந்த சமயத்தில், `சிவா மனசுல சக்தி’, `பாஸ் என்கிற பாஸ்கரன்’, `ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களில் நாயகனுடன் பயணித்து கதைக்குள்ளேயே காமெடி சேர்த்துக்கொண்டிருந்தார்.
அதில் `பொல்லாதவன்’, அதிகம் கவனிக்கபடாத, அதேநேரம் மிக முக்கியமான படம். அவரின் கதபாத்திரமும் வசனங்களும், காமெடியனுக்கான செயற்கையான கோமாளித்தன்மை இன்றி இயல்பாக எழுதபட்டிருக்கும்.
கதையில் இருந்து அல்ல, வசனங்களில் இருந்துகூட விலகாமல் அதனுள்ளேயே விளையாடியிருப்பார்.
அவரது வசனங்களைப் போலவே, கதாபாத்திரங்களும் அலட்டலின்றி அத்தனை இயல்பாய் இருக்கும்.
பார்த்தாவைப் போல நட்புக்காக தன் காதலை பிரேக்கப் செய்யும் நண்பன், நண்பனின் எல்லா நிலையிலும் துணையிருக்கும் நல்லதம்பி, அக்கா பெண்ணை கல்யாணம் செய்ய உரிமை கொண்டாடி பல்பு வாங்கும் மொக்க ராசு போன்றவர்களை நம் நிஜ வாழ்க்கையிலும் சந்தித்திருப்போம்.
வசனங்களிலும் பாத்திரங்களிலும் ரசிகனுக்கு அவ்வளவு நெருக்கமாக வந்து அமர்வார் அவர்.
படத்தில் ஹீரோவுக்கு நண்பன் கதாபாத்திரத்தில் சந்தானத்தை புக் செய்துவிட்டு, ஹீரோக்களை அப்ரோச் செய்தது எனத் தமிழ் சினிமாவில் சந்தானம் அலை பெரும் காட்டு காட்டிவிட்டுத்தான் போனது.
`எத்தனை நாளைக்குதான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது. எங்களுக்கு ஊட்டிக்கு போய் டூயட்லாம் பாட கூடாதா’ என ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். ஹீரோவானாலும், அந்தக் கலாய் மட்டும் கலையவே இல்லை. அவர் காமெடியனாக நடிக்கும்போது ஹீரோவுக்கு நண்பனாக இருப்பவன், அவனுக்கான வாழ்க்கையில் ஹீரோவாக மாறுவான் இல்லையா. அந்தக் கதைகளைதான் அவர் படங்கள் சொல்கின்றன.
அன்று நகைச்சுவை கலைஞனாக நச்சென நங்கூரம் பாய்ச்சி விட்டு, இன்று ‘சர்வர் சுந்தரம்’, ‘டகால்டி’ என தான் ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருக்கின்றன. `தில்லுக்கு துட்டு 1, 2′, `ஏ1′ என ஹீரோவாக அவர் முன்னேற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், காமெடியனாக அவர் பயணித்த அந்த வெற்றிபாதை அப்படியேதான் இருக்கிறது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவையில் 70′-களின் அடையாளம் நாகேஷ், 80′-களின் அடையாளம் கவுண்டமணி, 90′-களின் அடையாளம் வடிவேலு என்பதுபோல இந்த மில்லினியத்தின் அடையாளம் சந்தானம்.
தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் சந்தானம் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.
12 ஆண்டுகளுக்கு முன்னதாக சந்தானம் காமெடியனாக நடித்த மத கஜ ராஜா படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி 50 கோடி வசூலை நெருங்கிவிட்டது.
காமெடி நடிகராக இருக்கும் போதே ஒரு நாளைக்கு 1 கோடி வரை சந்தானம் சம்பளம் வாங்கும் அளவுக்கு சந்தானத்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.
ஹீரோவான பின்னர் ஏற்ற இறக்கங்களுடன் அவரது திரை வாழ்க்கை வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து வருகின்றன.
ஆனால், வடிவேலுக்கு பின் யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், நகைச்சுவைக்கான சந்தானத்தின் இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும் என்பதால் அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ச. ஆனந்தப் பிரியா
நன்றி : விகடன்