சங்கராந்திக்கு வஸ்துன்னாம் – பொங்கல் பரிசாகக் கொள்ளலாமா?

வெங்கடேஷ். தெலுங்கு திரையுலகில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர்.

தொடக்க காலத்திலும் சரி, இப்போதும் சரி, தனது படங்களின் மாபெரும் வெற்றிகளைக் கருத்தில் கொண்டு அதிக வாய்ப்புகளை ஏற்க வேண்டுமென்று எண்ணமில்லாதவர்.

அதனாலேயே, தனக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிகக் கவனத்தைச் செலவிடுபவர்.

அப்படிப்பட்டவர் ‘ஃபன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன்’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி உடன் மூன்றாவது முறையாக இணைகிறார் எனும்போது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருக்கும்? அதுவே ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ படத்தின் யுஎஸ்பி.

நம்மூரில் ‘தைப்பொங்கல்’ என்றால், அக்கட தேசத்தில் ‘சங்கராந்தி’. இரண்டுமே அறுவடைப் பண்டிகைதான்.

அந்த வகையில் ‘பொங்கலுக்கு வர்றோம்’ என்று உறவினர்கள், நண்பர்களிடம் சொல்வதைப் போல அமைந்திருக்கிறது இப்படத்தின் டைட்டில்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, விடிவி கணேஷ், நரேஷ், சாய்குமார், உபேந்திர லிமாயே, ஸ்ரீனிவாஸ் அவச்ரலா, முரளிதர் கவுட், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘சங்கராந்திக்கு வஸ்துன்னாம்’ தரும் திரையனுபவம் எத்தகையது?

காதலி, மனைவிக்கு நடுவே..!

இப்படத்தின் கதை மிக மிக மெலிதானது.

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஒரு தொழிலதிபர் சில ரவுடிகளால் கடத்தப்படுகிறார்.

சிறையில் இருக்கும் தங்களது தலைவரை விடுவிக்காவிட்டால், அந்த தொழிலதிபரைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டுகின்றனர் அந்த ரவுடிகள்.

இது ஒரு மாநில முதலமைச்சருக்குத் தலைவலி தரும் பிரச்சனை. ஏனென்றால், அந்த அமெரிக்க வாழ் தொழிலதிபரை இந்தியாவுக்கு அழைத்து வந்தவர் அவரே.

அதனால், கடத்தப்பட்ட தொழிலதிபரை விடுவிக்க ஒரு ‘சின்சியர்’ சிகாமணி அதிகாரியை நியமிக்க முடிவு செய்கிறார் முதலமைச்சர். அந்த நேரத்தில், ‘நம்மாள் ஒருத்தன் இருக்கான் சார்’ என்கிறார் காவல் துறை தலைமை அதிகாரி.

‘எங்க இருக்கான்’ என்று முதலமைச்சர் கேட்க, ‘அவன் வேலைய ராஜினாமா பண்ணிட்டு போய்ட்டான்’ என்கிறார் அவர்.

‘அப்புறம் அவனை எப்படிய்யா கூட்டிட்டு வருவீங்க’ என்று முதலமைச்சர் கேட்க, ‘என்னால முடியும் சார்.

ஏன்னா அவன் தான் என்னோட எக்ஸ் பாய்ப்ரெண்ட்’ என்கிறார் ஒரு பெண் போலீஸ் அதிகாரி. தொழிலதிபர் கடத்தப்பட்டபோது, சம்பவ இடத்தில் பாதுகாப்பு பொறுப்பினை வகித்தவர் அவரே.

இவ்வளவும் சொன்னபிறகு, அவரது காதலர் தான் படத்தின் நாயகன் என்று புரிந்துகொண்டிருப்பீர்கள்.

காதலியைப் பிரிந்த ஏக்கத்தில், தாடி வளர்த்து, ‘தண்ணீர்’ அருந்தி அவர் ‘தேவதாஸ்’ போல எங்கோ ஓரிடத்தில் சோகத்துடன் இருப்பார் என அந்தப் பெண் போலீஸ் அதிகாரி நினைக்கிறார்.

மாறாக, அவரோ மனைவி, நான்கு குழந்தைகள் (?) மற்றும் மனைவி தரப்பு உறவினர்களுடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

அதனைப் பார்த்ததும் அந்தப் பெண் அதிகாரிக்கு ‘பொறாமை’ ஏற்பட்டதா? கணவனுக்கு ஒரு காதலி இருப்பது தெரிந்ததும், கல்வியறிவு பெறாத அவரது மனைவி என்ன செய்தார்?

அனைத்துக்கும் மேலே, ரவுடிக் கும்பலின் தலைவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாரா?

ஊடகங்களுக்கு தெரியாமல் கைதி – தொழிலதிபர் பரிமாற்ற ‘ஆபரேஷன்’ வெற்றிகரமாக நடத்தப்பட்டதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

கதை என்ற ஒன்று தேவையில்லை என்கிற முடிவோடு களமிறங்கியிருக்கும் இயக்குநர் அனில் ரவிபுடி,

‘முன்னாள் காதலிக்கும் இந்நாள் மனைவிக்கும் நடுவே மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிற ஒரு நடுத்தர வயது நாயகன் மீண்டும் ஆக்‌ஷனில் இறங்கினாரா இல்லையா’ என்கிற ‘ஒருவரிக் கதையை’ சிரிக்கச் சிரிக்கத் திரையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

சில காட்சிகளில் அவருக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

பல காட்சிகள் கிச்சுகிச்சு மூட்டினாலும் நமக்குச் சிரிப்பு வருவதாக இல்லை.

ஆனாலும், கடந்த ஒரு வார காலத்தில் ‘இமாலய’ வசூலைப் பெற்றிருக்கிறது ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’.

அதுவே, இப்படிப்பட்ட படங்களுக்கு எப்பேர்ப்பட்ட பஞ்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது.

ஓகே ‘பேக்கேஜ்’!

இந்தப் படத்தில் ராஜு எனும் பாத்திரத்தில் வெங்கடேஷ், பாக்யலட்சுமி எனும் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி எனும் போலீஸ் அதிகாரியாக மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

மூவரது பாத்திரங்களே பிரதானம் என்பதால், அவர்களுக்குத் திரையில் ‘போதும்.. போதும்..’ என்கிற அளவுக்கு இடம் தரப்பட்டிருக்கிறது.

இதில் நாயகிகள் ஐஸ்வர்யா, மீனாட்சி உடனான வெங்கடேஷின் ‘கெமிஸ்ட்ரி’ அனர்த்தமாகத் தெரியவில்லை.

மிகக்கவனமாக அக்காட்சிகளைக் கையாண்டிருப்பதும், மூவரது இருப்பும் திரையில் ‘பிளசண்ட்’ ஆக தெரிவதும் இப்படத்தின் சிறப்பு.

நகைச்சுவையைப் பொறுத்தவரை வெங்கடேஷும் ஐஸுவும் ‘அன்லிமிடெட்’ விருந்தைத் தந்திருக்கின்றனர். ‘குல்பி’ ஐஸ் போல திரையில் வந்து போயிருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.

சிறை அதிகாரியாக வரும் உபேந்திர லிமாயே, சிறைக்காவலராக வரும் சாய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.

குறிப்பாக, ‘பேஸ் வாய்ஸ்ல பேச மாட்டியா’ என்று சாய்குமாரிடம் உபேந்திரா பேசுகிற வசனங்கள் அந்த மாயஜாலத்தை சிறப்புறச் செய்கின்றன.

இவர்கள் போதாதென்று நரேஷ், விடிவி கணேஷ் வேறு கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.

இப்படத்தில் இவர்கள் இருவரும் முறையே முதலமைச்சர், கட்சித்தலைவர் பாத்திரங்களில் தோன்றியிருக்கின்றனர்.

இதுபோக ஸ்ரீனிவாஸ் அவசரலா, முரளிதர் கவுட், மாஸ்டர் ரேவந்த், சர்வதமன் பானர்ஜி, பப்லு பிருத்விராஜ், ஸ்ரீகாந்த் ஐயங்கார், பம்மி சாய் உட்படப் பலர் இதிலுண்டு.

‘ரசிகர்கள் சிரிப்பது மட்டுமே எங்களது குறிக்கோள்’ என்று இயக்குநர் அனில் ரவிபுடி நினைத்திருக்கிறார்.

அதற்கேற்ப கிருஷ்ணா, ஆதி நாராயணா உடன் இணைந்து திரைக்கதை வசனத்தை அமைத்திருக்கிறார். அதனால், லாஜிக் மீறல்களைத் தேடுவது தேவையில்லாத வேலை.

‘இப்படித்தான் அடுத்த சீன் இருக்கும்’ என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிற வகையிலேயே பல காட்சிகள் உள்ளன. ஆனாலும், சிறப்பான ‘காஸ்ட்டிங்’ அந்தக் குறையை இல்லாதாக்குகிறது.

ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி, படத்தொகுப்பாளர் தம்மிராஜு, தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ.எஸ்.பிரகாஷ் கூட்டணி இப்படத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை வலுவானதாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘கோடாரி கட்டு’ பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகிவிட்டது.

அந்த சூடு கொஞ்சமும் குறையாத வகையில் ‘மீனு’, ‘பிளாக்பஸ்டர் பொங்கல்’ உள்ளிட்ட நான்கு பாடல்களைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ.

‘ஒரு காமெடி படத்தில் இப்படித்தான் பின்னணி இசை இருக்க வேண்டும்’ என்கிற எதிர்பார்ப்பைப் பூர்த்தியாக்குகிற வகையில் அவரது உழைப்பு இப்படத்தில் அமைந்திருக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சிகளில் விஎஃப்எக்ஸ் தரம் கொஞ்சம் சுமார் ரகம் தான்.

ஆனாலும், ‘ஓகே பேக்கேஜ்’ என்று சொல்லும்விதமாக ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அனில் ரவிபுடி.

அவர் தந்த ‘ஃபன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன்’ இரண்டு பாகங்கள், ‘பகவந்த் கேசரி’, ‘சரிலேரு நீக்கெவரு’ போன்று இப்படம் முழுமையான காமெடி ஆக்‌ஷன் சித்திரம் அல்ல.

குறிப்பாக, சில காட்சிகளில் வரும் ஆபாச சைகைகள், வசை வார்த்தைகள் அருவெருப்பை ஊட்டுகின்றன.

குழந்தைகளை அழைத்துக்கொண்டு படம் பார்க்க வரும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், இக்குறையைச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அக்காட்சிகள் நிச்சயம் அக்குழந்தைகளின் மனதில் பதிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

விஜய் தனது 69வது படத்தை இயக்குவதற்காக அனில் ரவிபுடியை நாடியதாக ஒரு தகவல் உண்டு.

‘அரசியலுக்கு நுழைவதற்கு முன்பாகத் தான் தரும் கடைசி படத்தை இவர்தான் இயக்க வேண்டும்’ என்று ஒரு கமர்ஷியல் ஹீரோ விரும்பியிருந்தால், அவர் எப்படிப்பட்ட கமர்ஷியல் இயக்குனராகத் திகழ வேண்டும்?

அப்படியொரு புகழைக் கொண்டிருக்கும் அனில் ரவிபுடி, அடுத்த படத்திலாவது இக்குறைகளைத் தவிர்க்க வேண்டும்.

சரி, இப்படத்தில் வரும் ஒரு பாடலில் சொல்லப்படுவது போன்று இதனைப் பொங்கல் பரிசாகக் கருதலாமா?

மேற்சொன்ன குறைகளைத் தவிர்த்துவிட்டால், இதன் திரைக்கதையில் இருக்கும் சில சறுக்கல்களைப் பொறுத்துக்கொண்டால், விழாக்காலத்தில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ரசிக்கிற ஒரு படமாக ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’மை கொண்டாடலாம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்.

Comments (0)
Add Comment