“திரு. ஈ.வெ.ரா. அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும், ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை என்று அலையும் அரசியல்வாதிகள் எங்கும் பரந்து கிடக்கும் சூழ்நிலையில், திரு.ஈ.வெ.ரா மட்டும் தனது கொள்கைகளில் கடைசி வரையில் அசையாத பிடிப்புக் கொண்டிருந்தார்.
ஊருக்குத் தகுந்தாற் போல், மேடைக்குத் தகுந்தாற் போல் தங்கள் பேச்சுக்களைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் பேச்சாளர்கள் நிறைந்த நம் நாட்டில், எங்கு பேசினாலும் சரி, எவர் வந்தாலும் சரி, தனது கருத்தை மண்டையில் அடித்தாற்போல் கூறும் துணிவு கொண்டிருந்தவர் ஈ.வெ.ரா.
இந்த நாட்டில் பெருவாரியான மக்கள், ஒன்று – தனக்கென எந்தவித அபிப்பிராயமும் இல்லாதவர்கள்.
இரண்டு – அப்படி இருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சுபவர்கள்.
அப்படிப்பட்ட கோழைகள் நிறைந்த சமுதாயத்தில் தன் அபிப்பிராயங்களைச் சிறிதும் தயங்காமல், திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் அவர்.
ஒரு தனிப்பட்ட மனிதர் என்ற முறையில், இவர் மற்றவர்களுக்குக் காட்டிய மரியாதையைக் கேள்விப்பட்டால் வியப்பு மேலிடுகிறது!
வயது, அந்தஸ்து, பிறப்பு.. இந்த மாதிரி அடிப்படைகளில் எல்லாம் சற்றும் வித்தியாசம் பாராமல், எந்த மனிதனையும் மனிதன் என்று உணர்ந்து மதிப்பதிலும், மரியாதை அளிப்பதிலும் இவருக்கு நிகராக யாருமே இல்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும், யாரிடமும் திரு.ஈ.வெ.ராவுக்கு வெறுப்புணர்ச்சி இருந்தது இல்லை.”
– துக்ளக் இதழில் அதன் ஆசிரியரான ‘சோ’ 01.01.1974-ல் எழுதிய தலையங்கம். (துக்ளக் பொன் விழா மலரிலிருந்து…)