நெடுநாட்களுக்கு மனதில் தங்கும் கதைகள்!

கவிஞர் சுபியின் அனுபவப் பதிவு

வாசிப்பனுபவம்: 

நான் வாசிக்கும் கா.பாவின் (கார்த்திகைப் பாண்டியன்) முதல் நூல். இந்தத் தொகுப்பில் ஒரு சிறப்பு எல்லா கதைகளும் வெவ்வேறு களங்கள்.

துயரம், குரோதம், பயம், குற்றவுணர்வு, வைராக்கியம், மாயத்தின் மயக்கம் இப்படி பல்வேறு கதைக்களங்களில் பல்வேறு உணர்வுகளை கொண்டுள்ளன.

ஆனால், ஒவ்வொரு மனிதனையும் ஏதோவொரு உணர்வு மிகையாக ஆட்டுவிக்கிறது. அதை சூழலோ, அவர்கள் குணமோ, தனிமையோ, கையறு நிலையோ இப்படி ஏதோவொன்றுதான் தீர்மானிக்கிறது. அவர்கள் கையில் தீர்மானங்கள் இல்லை.

தீவிர மன அழுத்தத்தின் தொடக்கத்திற்கும், அது வெளியே அவ்வளவாகத் தெரியாத முடிவிற்கும் இடைப்பட்ட ஊசலாட்டத்தில் கா.பாவின் கதாபாத்திரங்கள் அல்லாடுகின்றன.

ஒரே உடலின் துண்டாக்கப்பட்ட பாகங்கள் தனித்தனியே சிதறிக் கிடப்பது போல குறிப்புகள், குறியீடுகள் சொற்களிலோ, சொற்றொடர்களிலோ, கதையின் போக்கிலோ தெளித்து விடப்பட்டவற்றை நாம் தேடிக்கண்டடைந்து ஒன்றாக சரியான இடத்தில் பொருத்திப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்.

சரியான இடத்தில் பொருத்தவில்லை எனில் மீண்டும் சரியான இடத்தில் பொருத்திப் பார்க்க முயற்சிக்க வேண்டும்.

அது கதையின் ஆரம்பத்தில், முடிவில், நடுவில், உபதலைப்புகளில் எங்கே வேண்டுமானாலும் ஒளிந்திருக்கும் என்பதுதான் மேஜிக். அதனால் கதையை மேலோட்டமாக அசட்டையாக சிரத்தையற்று வாசிக்க முடியாது.

ஆழமாக வாசித்தாலும் அந்த கதையின் முடிவு பக்கத்தில் இருந்து முதல் பக்கத்தை, எங்கேயோ இதை படித்த மாதிரி இருப்பதை புரிந்து திரும்பி கதைக்குள் தேடி.. ‘ஓ, இதனால் இது இங்கே நடக்கிறது’ என்பதைக் கண்டடைய வேண்டும்.

வாசகனுக்கு நிறைய வேலைகள் தருகிறார்.

கதையின் பிரதான பாத்திரத்தில் ஒருவர் மட்டும் இருக்க மீதமுள்ள அனைவரும் தேவையான அளவு மட்டுமே வந்து போகின்றனர்.

பிரதான கதாபாத்திரத்தின் குணங்கள், சிதறல்கள், வெடிப்புகள் இவற்றுடன் கூட இருப்பவர்களாக, வேடிக்கை பார்ப்பவர்களாக மற்றவர்கள் இருப்பதால் பிரதான கதாபாத்திரத்தின் சித்திரம் ஆசிரியரின் பெரிய மெனக்கெடலின்றி நம்முள் ஆழமாகப் பதிகிறது. அதைத் திறம்பட செய்திருக்கிறார்.

‘எல்லா வண்ணத்துப்பூச்சிக்கும் ஒரே நிறம்’ கதையில் தொடங்குகிறது தொகுப்பு. முதல் கதையிலேயே முதல் பாராவில் சடலமாக பிரதான பாத்திரத்தின் துணை பாத்திரமும் (ஆனால் அது பிணம் என்ற உறுதிப்படுத்தலும் இல்லாமல் வாசகனுக்கு விடப் பட்டிருக்கிறது). அதன் முடிவில் பிரதான பாத்திரத்தின் பிணமும் இருப்பது போல கதையமைக்கப்பட்டுள்ளது.

கதையின் நாயகனை ஒரு பயணியாக, ஓவியராக, வண்ணத்துப் பூச்சியின் மீது அளவற்ற அன்பு சொரியும் விடலைப் பருவப்பெண்ணின் வயது வித்யாசம் அதிகம் கொண்ட ஒரு திடீர் காதலனாக, வண்ணத்துப் பூச்சியாக மாறும் மாயனாக நேர்த்தியான வடிவமைப்பு.

அவர்கள் இருவருக்குள்ளும் அன்பு மலரும் இடத்தில் அந்த அறையே வனமாகவும், அவன் ராட்சத வண்ணத்துப் பூச்சியாகவும், அவள் தன்னை அவனுக்குள் ஒப்படைக்கும் இடமும் ரசனையின் உச்சம். மனதை நெடுநேரம் கலங்க வைத்த கதை.

அடுத்த கதையான ‘பிளவு’ அதிகாரத்தின் கோரச் சித்திரத்தை அப்பட்டமாக காட்டுகிறது. நாம் பேசுகிற சொற்களுக்கு சக்தி உண்டு என்பார்கள் அது நல்லது தீயது என்று எப்படி எடுத்தாலும்.

கடுமையான உழைப்பால் முன்னேறும் மாரி அண்ணணுக்கு பிட்டுப் படம் ரொம்ப காலங்களாக பார்க்கும் பழக்கம் கொண்டுபோய் நிறுத்தும் இடமாக இருப்பது அவரின் செயலா, போலிசின் செயலா, மகள் வாணியின் செயலா காலத்திடம் தான் பதில் இருக்கிறது.

போலிஸ் பேசும் சொற்களால் அவர் அடையும் தீவிர மன அழுத்தத்திற்கு விலையாக இறுதியில் மகளைத்தர வேண்டியிருப்பது தான் வேதனை.

சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பை, தலைவெடித்துச் சிதறிய படி பிட்டு படத்தில் மகள் தோன்றுவதாக வரும் தனிமையின் தோற்றமாயை காட்சிகள் நம்மை நடுங்க விடுகின்றன.

அய்யய்யோ, இப்படியா நடந்திருக்கும் என்று யோசிக்கையில் அவரால் ‘பெண்ணை இனி பெண்ணாக பார்க்க முடியவில்லை’ எனும் அளவுக்கு, பேசிய அசிங்கமான வசைச்சொற்கள் அவரை வாழ்வின் படுகுழியில் தள்ளிவிடுகிறது.

மனித மன எண்ணங்களின் குரூரமும், அசிங்கமான சொற்களும், ஒரு வகை ஆறுதலுக்காக பார்க்கும் பிட்டு படமும் அவர்கள் வாழ்வை எப்படி சீரழிக்கிறது. காலத்தின் சில தீர்ப்புகளை தங்கள் செயலாலே சிலர் எழுதிக் கொள்கிறார்கள்.

அடுத்த கதை தொகுப்பின் தலைப்புக்கதையான ‘ஒரு சாகசக் காரனின் கதை’ ஒரு சிறுவன் கோமாளியுடன் இணைந்து வித்தைகள் கற்று பெரியவனாகிறான்.

தனியே இருக்கும் போது நாடோடியாகத் திரிந்தவன் திருமணம் செய்து குடும்ப சுமைகள்‌ அழுத்த புதிதாக செல்லும் வேலை அவனை இன்னும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

ஊர்களில் ஒரு சொலவடை உண்டு… புதிதாக தொழில் செய்பவன் தன் மூத்தோர் தொழிலை செய்தால் தப்பித்து கொள்வான்.

புதுசா ஒன்றை செய்யும் போது அவனுக்கு தெரிந்த தொழிலை விட பன்மடங்கு கவனமாக இருக்க வேண்டும் என்பது. அந்த நிலையில் தான் இருக்கிறான் சாகசக்காரன். அவனுக்கு சாகசம் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

இறுதியாக அந்தரத்தில் தொங்கியபடி ‘அதுவொரு நாரையாய் இருக்கலாம்’ எனும் கதையின் ஆரம்பத்தில் வரும் வரி முடிவில் வருகிறது. அது துர்சகுன குறீயீடாக அவன் புதிய வேலை தேடி செல்லும் இடத்தில் வருகிறது.

சிறுவனாக இருக்கையில் கோமாளியின் பின் எந்த தயக்கமும் இல்லாமல் முழு நம்பிக்கையுடன் போகும் போது சாகசம் அவனை வாழ வைக்கிறது.

இறுதியில் தொங்கியபடி அதே வரிகள் வருகிறது அந்த பாதையில் போகலாமா வேண்டாமா எனும் குழப்பம் வரும் போது அவன் கழுத்தெழும்பு முறிகிறது.

நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டு வெவ்வேறு நிலைகளில் மனித மனத்தின் நிலை எப்படி செயல்படும் என்பது நன்றாக வந்திருக்கிறது.

தொழிலுக்காக கன்றுக்குட்டியை கொல்வது இறுதியில் அந்த கன்றுக்குட்டிகளின் தீனமான கண்கள் ஒலிகள் நினைவில் வருவது முன்வினை பின்வரும் என்பதற்கு அடையாளம். வேறென்ன சொல்ல.

கடைசி கதையான ‘சாமி’ கதை ஒரு தனி மனிதனின் முழு வாழ்வை அலசுகிறது. பள்ளிப் பருவம் தொடங்கி நம்மோடு கழித்து கழித்து கடைசியில் இரண்டொரு நண்பர்களே வாழ்வு முழுவதும் தொடர்ந்து வருகிறார்கள்.

கார்த்தியும், கார்த்தியாக இருந்து பின் பட்டப் பெயரால் மாறும் சாமியும். மதுரையின் ரயில்வே காலனிகள் அதன் சீரான ஒரே வடிவத்தில் கட்டப்பட்ட வீடுகள் என்று அதனை அதன் அழகியலோடு ஒரு விஷீவல் எஃபெக்ட் எழுத்தில் வருகிறது.

நான்கு நண்பர்கள் அவர்கள் விடலைப் பருவ வாழ்வு, கல்லூரி வாழ்வு, வேலை சார்ந்த வாழ்வு, திருமண வாழ்வு என்று வரிசையாக எல்லா இடங்களிலும் நாமும் அவர்களின் நண்பர்களாக சுற்றுகிறோம்.

அதில் ஆண் வாசகர்கள் இன்னும் தங்களை துல்லியமாக பொருத்திக் கொள்ள முடியும். ராஜி நல்லவர்களுக்குள் இருக்கும் கெட்ட தன்மையோடும் கெட்டவர்களுக்குள் இருக்கும் நல்ல தன்மையோடும்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று.

அவ்வளவாக குடும்ப வாழ்வில் விருப்பம் இல்லாத சாமியும் அவளை மறைமுகமாக ஏமாற்றியதாகத்தானே அர்த்தம் .

நானும் மனுசி தானே என நாயகனிடம் அவள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?. ஒரு நாவலாக உருவாக அதிகம் சாத்தியக்கூறுகளை கொண்ட கதை இது. ஆசிரியர் மீண்டும் யோசிக்கலாம். நெடு நாட்களுக்கு மனதில் தங்கும் கதைகளைத் தந்ததற்கு கா.பா விற்கு நன்றிகள்.

ஒரு சாகசக்காரனின் கதை!
சிறுகதைத் தொகுப்பு
கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment