பட விழாக்களில், விவகாரமாகவோ, சர்ச்சையாகவோ பேசினால்தான் விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பது மார்க்கெட் இழந்த சில இயக்குநர்களின், ’பாணி’யாக உள்ளது. அந்த பட்டியலில், தரமான இயக்குநர் என தமிழகம் நம்பும் மிஷ்கினும் சேர்ந்திருப்பது, கோடம்பாக்கத்தை முகம் சுளிக்க வைத்துள்ளது.
நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், அருண் பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் ஆகிய இரு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பாட்டல் ராதா’. தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார்.
ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடிக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி, அமீர் உள்ளிட்ட டைரக்டர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
வெற்றிமாறன் போன்ற டைரக்டர்கள், ‘இது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படம் – வெற்றி பெற வாழ்த்துகள்’ என சம்பிரதாயமாகப் புகழ்ந்து விட்டு, இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
ஆனால் மிஷ்கின், விழா மேடையை ‘கலகலக்க வைப்பதாக நினைத்துக்கொண்டு, ‘நாற’ அடித்து விட்டார்.
எனக்கு சாராயம் காய்ச்சத் தெரியும்:
மிஷ்கின் பேச்சின் ஆரம்பமே மேடை நாகரீகத்தை உடைத்து நொறுக்கும் வகையில் இருந்தது. ‘அமீரையும், வெற்றிமாறனையும் தவிர இங்கு மேடையில் இருக்கும் அனைவருமே குடிகாரர்கள்தான்‘ என மிளகாய்ப் பொடி தூவியவர், தானும் ஒரு பெருங்குடிகாரன் என பெருமையாக ‘தம்பட்டம்’ அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்.
’தமிழ் சினிமாவில் அதிமாகக் குடித்தவனும், குடித்துக் கொண்டிருப்பவனும், குடிக்கப் போறவனும் நான்தான்.
தமிழ்நாட்டின் ஆதியில் இருந்து குடிப்பழக்கம் இருக்கிறது – எனக்கு அதைப் பற்றி அனைத்தும் தெரியும் – சாராயமே காய்ச்சும் அளவுக்கு தொழில்நுட்பம் தெரியும்’ என்றார்.
ஆனால், தனது உளறல் உரையில் அவர் இளையராஜாவையும், ‘சைடிஷ்’ ஆக தொட்டுக் கொண்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதோ, மிஷ்கினின் மிச்சமுள்ள ‘சரக்குத் துளிகள்’ :
உதவி இயக்குநராக இருந்தபொழுது குவாட்டர் வாங்கத்தான் பணம் இருக்கும் – குடித்துக் கொண்டே சினிமா பற்றி பேச ஆரம்பித்துவிடுவோம் – அப்படி பேசும்போது ஒரு கட்டத்தில் பாட ஆரம்பித்துவிடுவேன் – எங்கிருந்தாவது எனக்கு ஒரு குவார்ட்டர் வந்துவிடும்.
குடிக்கு அடிமையானவர்கள் பலரும் நல்ல மனிதர்களாகவே இருப்பார்கள் – மன வருத்தம் அதிகமுள்ளவர்கள் மது அருந்துகிறார்கள் – நான் குடிகாரன் என்றாலும், எப்போதும் குடி என்னை அடிமையாக்கியது இல்லை.
எனக்கு வாழ்க்கை மீது அதிக நம்பிக்கை இருக்கிறது – குடிபோதையைவிட மிகப்பெரிய போதை, சினிமா – அதைவிட இளையராஜாதான் எனக்கு மிகப்பெரிய போதை. நான் குடிக்கும்போது சைட்டிஷ்ஷாக அவருடைய பாடல்களைத்தான் கேட்பேன்.
அவருடைய பாடல்கள் தான் எங்களுக்கு எல்லாம் சைட் டிஷ் – மனிதர்களை அதிக குடிகாரர்கள் ஆக்கியதும் அவர்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று தன்னைத்தானே மெச்சிக்கொண்டார் மிஷ்கின்.
மது பழக்கத்துடன், இளையராஜா குறித்த மிஷ்கினின் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆங்காங்கே கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி, மேடை நாகரீகம் இல்லாமல் அவர் பேசியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், நெட்டிசன்களும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
சின்னதா, ஒரு சாரி சொன்னா, பிரச்சினை முடிஞ்சுப்போச்சு. அவ்வளவு தானே மிஷ்கின் சார்.?
– பாப்பாங்குளம் பாரதி.