நம்ம ஊர் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர், நேரடியாக முதலில் இயக்கிய தெலுங்கு படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நாயகனாக நடித்திருந்தார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார்.
கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக மிரட்டி இருந்தார். சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நான்கு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் 6,600 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
தெலுங்கில் உருவான ‘கேம் சேஞ்சர்’ தமிழ், இந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ‘டப் செய்து வெளியிடப்பட்டது.
மொத்த பட்ஜெட் 400 கோடி ரூபாய். முதல் நாளில் 223 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்குடன் உற்சாகமாய் படத்தை வெளியிட்டார்கள்.
ஆனால், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்விப் படமாக இது அமைந்தது. முதல் நாளிலேயே பல தியேட்டர்கள் இரவு காட்சிகளில் கூட்டம் இல்லாமல் ஈ அடித்தது.
கடந்த 10 நாட்களில் இந்தப் படம் உலகம் முழுவதும் மொத்தமாக வெறும் 176 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் அண்மையில் வெளியான படங்களில் பெரும் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற பெயரை ‘கேம் சேஞ்சர்’ எடுத்துள்ளது.
இந்தியன்-2 வைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கிய இரண்டாவது படமும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. உறைந்து போய் இருக்கிறார் ஷங்கர். படம் வெளியான இரண்டு நாட்களிலேயே ‘கேம் சேஞ்சர்’ தோல்வி என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
‘எடிட் செய்த வெர்ஷனே 5 மணி நேரம் ஓடியது – இதனால் அதில் இருந்து பாதி படத்தை மீண்டும் எடிட் செய்து, மீதி படத்தை ரிலீஸ் செய்தோம் – எடிட் செய்த காட்சிகளில், ரசிகர்கள் விரும்பிய காட்சிகள் இருந்திருக்கலாம்‘ என மனம் நொந்து பேட்டி அளித்துள்ளார் ஷங்கர்.
அவரைவிட நொந்து நூலாகி இருப்பவர் தயாரிப்பாளர் தில் ராஜு. போட்ட பணத்தில் பாதிகூட வரவில்லை. படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால், ஹீரோ ராம் சரண், தனது சம்பளத்தில் பெரும்பகுதியைக் குறைத்து வாங்கி இருந்தார்.
படம் ‘வாஷ் அவுட்’ ஆகி விட்டதால், அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய மீண்டும் தில் ராஜு தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ராம் சரண்.
அந்த படத்துக்கு வழக்கமான சம்பளத்தைவிட மிகக் குறைவாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இப்போது, ராம் சரண், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்தை முடித்து விட்டு, தில் ராஜுக்கு கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டுள்ளார் சரண்.
– பாப்பாங்குளம் பாரதி.