எம்.ஜி.ஆரின் கட்சியும் ஆட்சியும் மக்களுக்கானது!

தமிழ்த் திரையுலகில் ‘புரட்சி நடிகர்’ என்றும் ‘மக்கள் திலகம்’ என்றும் அனைவராலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், அரசியலில் பிற்காலத்தில் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். என்று அவரது கட்சியினரால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

தமிழக அரசியலில் தான் ஆரம்பித்த கட்சியை 18 ஆண்டுகளில் ஆட்சியில் அமரச் செய்தவர் பேரறிஞர் அண்ணா என்றால், அவரது வழியில் வந்த எம்.ஜி.ஆர் தான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சியை ஆறு ஆண்டுகளில் ஆட்சியில் அமரச் செய்தவர்.

தி.மு.க.வில் இருந்த காலத்தில் லட்சோப லட்சம் ரசிகர்களும், ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களும் தமிழ்நாடு முழுவதும் இவருக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரறிஞர் அண்ணா தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் பேசும்போது (எம்.ஜி.ஆர் ஒரு லட்சம் ரூபாய் நிதியளிக்க முன் வந்தபோது) “தம்பி நீ லட்சம் ரூபாய் நிதி தருவதைவிட உன் முகத்தைக் காட்டி லட்சக்கணக்கான வாக்குகள் பெற்றுக் கொடுப்பதையே, பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

பெருந்தலைவர் காமராஜர் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் குறித்து கூறும்போது “வேட்டைக்காரன் வருவானேன் உங்க ஓட்டுகளை வேட்டையாட… நீங்க அட்டகத்தியை நம்பி எல்லாம் ஓட்டு போடாதீங்கன்னேன்” என்று கூறினார்.

இந்த இரண்டு நிகழ்வுகள் மூலம் எம்.ஜி.ஆர். தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக இருந்தார் என்பது புலப்படுகிறது.

1967-ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் காலகட்டத்திற்கு சில மாதங்கள் முன்னால் எம்.ஜி.ஆருக்கும், நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கும், ஏற்பட்ட தகராறு காரணமாக எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர் சுடப்பட்டார்.

எம்.ஆர்.ராதா திராவிடக் கழக ஆதரவாளர் என்ற முறையில் அந்தக் கட்சி காங்கிரஸை ஆதரித்து வந்த சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்ததால், தமிழக அரசியலில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியது.

எம்.ஜி.ஆர் கழுத்தில் குண்டு பாய்ந்த காயத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 1967-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. எம்.ஜி.ஆரை, சென்னையை அடுத்துள்ள பரங்கிமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது.

இந்தத் தொகுதியில் எம்.ஜி.ஆரை எதிர்த்து பிரதான வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பாக டி.எல்.ரகுபதி களத்தில் இருந்தார்.

டி.எல்.ரகுபதி இந்தப் பகுதியில் தனிச் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுப் போட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படம் போட்ட சுவரொட்டிகள் பரங்கிமலைத் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது.

தேர்தல் முடிவில் எம்.ஜி.ஆர் 27,674 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எம்.ஜி.ஆர் சிறுசேமிப்புத்துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

1971-ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறையும் இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் டி.எல்.ரகுபதியே போட்டியிட்டார்.

தேர்தல் முடிவில் எம்.ஜி.ஆர் 24,632 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் டி.எல்.ரகுபதியைத் தோற்கடித்தார்.

இந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தி.மு.க.வின் பொருளாளராக பதவி வகித்தார். திமுக மாநாடு வரவு, செலவு கணக்கு சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமையை பொதுக்கூட்டம் வாயிலாக பேசியதால், இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியசெயல் என்ற காரணம் காட்டி எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து 10-10-1972-ல் நீக்கப்பட்டார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் தனது ஆதரவாளர்களுடன் 1972 அக்டோபரில் ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்தார்.

இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆறு மாத காலத்தில் நடைபெற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல், கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் இவைகளில் வெற்றி பெற்றதுடன், பாண்டிச்சேரி மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிகழ்வுகள் அடுத்த தமிழக ஆட்சியைக் கைப்பற்றுவது அ.தி.மு.க.தான் என்று ஆரூடம் கூறுவது போல் அமைந்துள்ளது. இந்த நிலையில் 1977-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.

1977-ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவருடன் களத்தில் திமுக, ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் நின்றார்கள்.

இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தமிழகம் முழுவதும் தன் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டைத் தொகுதியில் இவர் அதிக கவனம் செலுத்தவில்லை, இருந்தபோதிலும் இந்தத் தொகுதியில் இவருக்கு அமோக ஆதரவு இருந்ததால், இவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், தொகுதிகளில் நடந்த மற்றக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் யாருக்கு இரண்டாவது இடம் என்பதில் மட்டுமே நடந்து கொண்டு இருந்தது.

தேர்தல் முடிவில் எம்.ஜி.ஆர் 29,378 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை அடுத்து வந்த ஜனதா வேட்பாளர் முத்துவேல் சேர்வையைத் தோற்கடித்ததுடன், அனைத்து வேட்பாளர்களையும் ஜாமீன் தொகை இழக்கவும் செய்தார்.

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணா.தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழகத்தின் 16-வது முதல்வராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 30.6.1977-ல் பதவியேற்றார். இவரது ஆட்சியில் ஏழைக் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு இலவச சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தார்.

இதன்மூலம் 3 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (பாலர் பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை) மதிய உணவுடன் கல்வியும் பெற்றார்கள். இந்த நிலையில் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அ.தி.மு.க. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது.

அடுத்து ஆறு மாத காலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார்.

இம்முறை மதுரை மேற்குத் தொகுதியில் எம்.ஜி.ஆருக்கு கடும் போட்டியைத் திமுக உருவாக்கியது. அனல் பறக்கும் பிரச்சாரமும், பரபரப்பும் காணப்பட்டது. தேர்தல் முடிவு வெளியானபோது எம்.ஜி.ஆர் 21,066 வாக்குகள் கூடுதலாகப்பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், தமிழகத்தில் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். (இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.)

1984-ம் ஆண்டுப் பொதுதேர்தல் நடைபெற்றபோது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தேர்தலைச் சந்தித்தது. (எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் அவரது கட்சி சந்திக்கும் தேர்தல்) எம்.ஜி.ஆர் சார்பில் போட்டியிட ஆண்டிப்பட்டித் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இவரை எதிர்த்து பார்வர்டு பிளாக் கட்சியைச் சார்ந்த பி.என்.வல்லரசு திமுக வேட்டபாளராக ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படங்கள் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளாக தமிழகமெங்கும் ஒட்டப்பட்டது.

இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு போட்டியிட்டது. இந்திராகாந்தி படுகொலைக்கு பின்னர் ராஜீவ்காந்தி தலைமைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவந்தது. தேர்தல் முடிவில் எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டித் தொகுதியில் 32,484 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து உடல்நலம் தேறி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த எம்.ஜி.ஆர் மூன்றாவது முறையாக முதல்வரானார்.

தமிழக முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் 24-12-1987-ல் எம்ஜிஆர். காலமானார். இதன்பின்னர் இவரது துணைவியார் வி.என்.ஜானகி அம்மையார் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

தமிழக அரசியல் வரலாற்றில் ‘எம்.ஜி.ஆர்’ ஒரு ‘மாமனிதர்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் போட்டியிட்ட ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் இடைவிடாது வெற்றி பெற்றது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் (இருபது ஆயிரம் வாக்குகளுக்கு கூடுதலாகப் பெற்று) வெற்றி பெற்றார்.

1972-ல் கட்சியை ஆரம்பித்து 1977-ல் ஆட்சியில் அமர வைத்தவர். 1977-ல் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் தனது இறுதிக் காலம் வரை தொடர்ந்து முதல்வராக இருந்தவர்.

இன்றும் மக்கள் பேசிக் கொள்வது “எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தால் வேறு யாரும் முதல்வராக இன்று வரை பதவியேற்றிருக்க முடியாது” என்பது தான்.

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் என்ற அடைமொழியுடன் திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர், அரசியல் அரங்கத்திலும் அதே புகழுடன் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தார் என்பதை அவரது தேர்தல் களங்களைத் திரும்பிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

  • பா.ஆரிச்சனின் ‘கடும்போட்டியில் தேர்தல் களம் கண்டவர்கள்’ (2005) நூலிலிருந்து ஒரு பகுதி…
Comments (0)
Add Comment