தமிழையும் வள்ளுவரையும் முன்னெடுக்கும் புது முயற்சி!

உலகப் பொதுமறையான  திருக்குறள், உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகத் தமிழர்களிடம் மட்டுமல்லாது, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணிகளும் ஒருபுறம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

இது போன்ற முயற்சிகளை, அரசு, தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மட்டுமல்லாமல் தனி நபர்களும் பல்வேறு விதங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளியுமான திவ்யா கிருஷ்ணன்  ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் புடவை, மேலாடை உள்ளிட்ட ஆடைகளிலும் வளையல் உள்ளிட்ட அணிகலன்களிலும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் வடிவமைத்து அதை காட்சிப்படுத்தியுள்ளார்.

அதோடு, நகங்களில் திருவள்ளுவரையும் தமிழ் எழுத்துக்களையும் வரைந்து திருவள்ளுவரையும் தமிழையும் கொண்டு சேர்க்கும் விதமாக ஒரு புது முயற்சி மேற்கொண்டுள்ளார் திவ்யா கிருஷ்ணன்.

அவரது இந்த முயற்சி தனி கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே 1330 திருக்குறளையும் நாள்தோறும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் காணொளியாகப் பதிவிட்டு வந்த இவர், தற்போது நாலடியார் பாடலையும் அதற்கான விளக்கத்தையும் கூறி வருகிறார்.

தொடர்ந்து தமிழின் மிக முக்கியமான அற இலக்கய நூல்களான இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, பழமொழி நானூறு உள்ளிட்டவற்றைப் பதிவிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

தமிழையும் தமிழ் நூல்களையும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதே தனது தலையாயப் பணி என தன்னடக்கத்துடன் சொல்கிறார் திவ்யா கிருஷ்ணன்.

இதற்கு முன்பு இதே போல் அகோரி வேடம் அணிந்து தனிக் கவனம் பெற்றார்.

ஆண்கள் மட்டுமே அகோரியாக வேடமணிந்திருந்த சமயங்களில் பெண் ஒருவர் அகோரியாக வேடம் அணிந்தது தனிக் கவனத்தை பெற்றது.

அதே வகையில், இப்போது இந்த திருக்குறள், திருவள்ளுவர், தமிழ் எழுத்துக்களை ஆடைகளில் வடிவமைத்து, அதன் மூலம் மக்களிடையே தமிழையும் வள்ளுவரையும், குறளையும் கொண்டு போய்ச் சேர்க்கும் புது முயற்சி சிறப்பான கவனத்தைப் பெறும் என தான் நம்புவதாகக் கூறியுள்ளார் திவ்யா கிருஷ்ணன்.

அதோடு, இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நயம் சிந்துஜா, ரசாந்த் ஆர்வின், ஹெலன் புனிதா, சாய், பரணி, லோகேஷ், மும்தாஜ், கவிதா, பானுமதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

யார் இந்த திவ்யா கிருஷ்ணன்?

தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கத் துவங்கிய திவ்யா கிருஷ்ணன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வந்து புகழ் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு நடிகையாக சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து, சதுரங்க வேட்டை, பூலோகம், இனிமே இப்படித்தான், ஜாம்பி, கண்ணை நம்பாதே, கால் டாக்ஸி, குலேபகாவலி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி, வம்சம், அருவி உள்ளிட்ட சீரியல்களிலும் விஜய் தொலைக்காட்சியில் வேலைக்காரன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.

தற்போது கானல், யூ ஆர் த நெக்ஸ்ட் உள்ளிட்ட படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

திவ்யா கிருஷ்ணனின் எல்லா  முயற்சிகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

 

Comments (0)
Add Comment