இயக்குநர் ஷங்கர். கடந்த முப்பதாண்டுகளில் தமிழ் திரையுலகில் இவரால் ஏற்பட்ட மாற்றங்கள் அனேகம். ஹீரோயிசத்தை மையப்படுத்திய கதைகளைச் சிந்திப்பது முதல் ஒரு படத்திற்கான சந்தைப்படுத்துதல் மதிப்பை உயர வைப்பது வரை பலவற்றில் முத்திரை பதித்தவர்.
அதனாலேயே, சினிமா வியாபாரத்தில் இன்றும் அவரது பெயர் முக்கியமானதொன்றாக இருக்கிறது.
ஆனாலும் சிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பிறகு அவரது படங்களுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் முன்பிருந்தது போன்றில்லை.
இத்தனைக்கும் தனது ஆக்கத்தின் ப்ளஸ், மைனஸ் இரண்டையும் நன்றாகத் தெரிந்தவர் ஷங்கர். தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி பார்வையாளர்களுக்கும் ஏற்றதொரு திரைமொழியை அவரது படங்கள் கொண்டிருக்கும். அதனாலேயே பிற மொழிகளில் படம் இயக்குகிற வாய்ப்புகளும் துரத்தின.
இப்போது ஷங்கரின் இயக்கத்தில், ராம்சரண் நாயகனாக நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படம் எப்படியிருக்கிறது?
பழைய படக் கதை!
விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக மாற்றலாகி வருகிரார் ராம் நந்தன் (ராம் சரண்). நேர்மையான ஆட்சியர் என்று பெயரெடுத்தவர். அவரது வருகையினால், மாவட்டத்தில் ஊழல், மோசடிகள், குற்றங்கள் வெகுவாகக் குறைகின்றன.
அதனால், சட்டவிரோதமாகத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலரை அவர் சிறையிலும் அடைக்கிறார்.
மாநில அமைச்சர் பொப்பிலி, மொப்பிதேவி (எஸ்.ஜே.சூர்யா) அவர்களின் பின்னணியில் இருக்கிறார். ‘எனது ஆட்களை விட்டுவிடு’ என்று மொப்பிதேவி சொல்லியும், அதனை ராம் நந்தன் கேட்பதாக இல்லை.
மொப்பிதேவியின் தந்தையும் முதலமைச்சருமான சத்யமூர்த்தி (ஸ்ரீகாந்த்) சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
அவை அனைத்தும் மொப்பிதேவியை எரிச்சலில் தள்ளுகின்றன. அது மட்டுமல்லாமல், அந்தப் பதவி மீதான அவரது வெறியையும் அதிகப்படுத்துகிறது.
இந்த நிலையில், தனது காதலி தீபிகாவை (கியாரா அத்வானி) தேடிச் செல்கிறார் ராம் நந்தன். அவர் பணியாற்றும் மனநலக் காப்பகத்தில் பார்வதி (அஞ்சலி) என்ற பெண்மணி இருக்கிறார். தற்செயலாக, அவரைச் சந்திக்கிறார் ராம்.
அப்போது, சத்யமூர்த்தி பங்கேற்கும் கட்சிப் பொதுக்கூட்டம் பற்றி தீபிகாவிடம் சொல்கிறார் ராம். அதனைக் கேட்டதும், அங்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார் பார்வதி.
அடுத்த நாள், சொன்னபடியே அந்த கூட்டத்திற்கு தீபிகா, பார்வதியுடன் செல்கிறார் ராம். அங்கு, பார்வதியைப் பார்த்ததுமே சத்யமூர்த்தியும் அவரது உயிர் நண்பர் சபாபதியும் மிரள்கின்றனர். அடுத்த நொடியே சத்யமூர்த்தி மயங்கிச் சரிகிறார்.
பார்வதி யார்? ராம் நந்தனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? இருவரையும் பார்த்து மாநில முதலமைச்சரான சத்யமூர்த்தி ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? அதன்பின் அவருக்கு என்னவானது? இப்படிச் சில கேள்விகளுக்குச் சாவகாசமாக இரண்டாம் பாதியில் பதிலளிக்கிறது ‘கேம் சேஞ்சர்’.
இந்தக் கதையில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் இருக்கின்றன.
சத்யமூர்த்தியை ஒரு பிளாஷ்பேக் வாட்டுகிறது. அதுவே, பார்வதி யார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் பதிலளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ராம் நந்தன் – தீபிகா காதலுக்கென்று ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஷங்கரின் பழைய படமொன்றைப் பார்த்த அனுபவத்தையே தருகிறது. சமீபகாலத்தில் அட்லீயின் படங்களில் அதனைக் காண முடிந்தது. இந்த முறை, அவரது குருவான ஷங்கரே அதனைச் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் யுஎஸ்பி ஆகவும் அதுவே இருக்கிறது.
உழைப்பின் குவியல்!
ராம்சரண் இதில் இரட்டை வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். கமர்ஷியல் சினிமாவுக்குரிய க்ளிஷேக்களுடன் அவரது பாத்திர வார்ப்பு அமைந்துள்ளது. அதனைத் திறம்படத் திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கியாரா அத்வானி இதில் நாயகி. ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன்னில் மதுபாலா தொடங்கி எமி ஜாக்சன், பிரியா பவானிசங்கர் வரை, திரையில் அவர்களுக்கு என்ன முக்கியத்துவம் கிடைத்ததோ அதுவே இதில் அவருக்கும் கிடைத்துள்ளது.
தெலுங்கு படம் என்பதால், அவரை ‘ரொம்பவே’ கவர்ச்சியாகக் காட்ட விரும்பியிருக்கிறார் ஷங்கர்.
பிளாஷ்பேக் கதைகளில் நாயகிகள் எப்படிக் காட்டப்படுவார்களோ, அப்படியே இப்படத்தில் வந்து போயிருக்கிறார் அஞ்சலி.
சுனிலின் நகைச்சுவை நடிப்பு ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா பல இடங்களில் கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பரித்து தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருக்குப் போட்டியாக ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இதில் இருக்கின்றனர்.
சமுத்திரக்கனி இதில் வருகிறார், போகிறார். அவ்வளவுதான். அதே போன்றே நரேஷ், பிரவீணா ஜோடியும் திரையில் காட்டப்பட்டிருக்கின்றனர்.
பிரம்மானந்தம், ராஜிவ் கனகலா, வெண்ணிலா கிஷோர், அச்யுத் குமார், சுபலேக சுதாகர், பிருத்விராஜ் தொடங்கி ராம்சரணின் நண்பர்களாகக் காட்டப்பட்ட சத்யா, பிரியதர்ஷி, சைதன்யா கிருஷ்ணா உட்படப் பலர் திரையில் ‘சும்மா’ வந்து போயிருக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து இன்னும் சுமார் 2 டஜன் கலைஞர்கள் இதில் வந்து போயிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே சில படங்களில் நல்லதொரு நடிப்பைத் தந்தவர்கள் தான். ஷங்கர் படங்களில் மட்டும்தான் இது போன்ற விஷயங்கள் நிகழும்.
திருவின் ஒளிப்பதிவு இப்படத்தின் பெரும்பலம். குட்டிச் சாக்கினுள் ஒரு ட்ராகனை அடைப்பது போன்ற மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
சுமார் நான்கு மணி நேரம் ஓடுகிற உள்ளடக்கத்தினைச் சுருக்கி இரண்டே முக்கால் மணி நேரம் திரையில் ஓடுமாறு செய்திருக்கிறது படத்தொகுப்பாளர்கள் ஷமீர் முகம்மது – ரூபன் இணை.
கலை இயக்குனர் அவினாஷ் கொல்லா, ஏற்கனவே நாம் பார்த்த ஷங்கர் பட பிரமாண்டத்தை இதிலும் காட்ட உதவியிருக்கிறார்.
இன்னும் இதில் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு ‘குவியலாக’ இடம்பெற்றுள்ளது.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலை நினைவூட்டுகிறது ‘ஜரகண்டி’.
அது போக ’ரா மச்சான் ரா’, ‘கொண்டதேவரா’ பாடல்கள் கவர்கின்றன. ஆடியோவில் கேட்ட ’லைரானா’ திரைப்படத்தில் இடம்பெறாதது ஏனோ?
பின்னணி இசையில் பரபரப்பை வாரியிறைக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் தமன். சில இடங்களில் அது அளவுக்கு அதிகமாக உள்ளது.
இந்தப் படத்தின் கதையை எழுதியவர் கார்த்திக் சுப்புராஜ். ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையே இதிலிருக்கிறது. அதற்கு பாடலாசிரியர் விவேக் உடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் ஷங்கர்.
கிட்டத்தட்ட ‘சிவாஜி’ படத்தில், முதல்வன், அஜித்தின் சிட்டிசன் படங்களை எல்லாம் கலந்தாற் போன்றதொரு அனுபவத்தைத் தருகிறது திரைக்கதை.
வழக்கமாக ஷங்கரின் படங்களைப் பார்த்து முடித்தபின்னர் தான் லாஜிக் மீறல்கள் நம் மூளைக்குள் ஊற்றெடுக்கும்.
‘கேம் சேஞ்சர்’ படத்திலோ, அது தியேட்டரில் இருக்கும்போதே நிகழ்கிறது.
உண்மையைச் சொன்னால், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சிரஞ்சீவியை நாயகனாகக் கொண்டு இப்படத்தை ஷங்கர் உருவாக்கியிருக்க வேண்டும்.
அந்த ஏக்கம் அவருக்குள்ளும் இருந்திருக்க வேண்டும். அதனால், அப்படியொரு ‘அக்மார்க்’ தெலுங்கு படமாக இதனை ஆக்கியிருக்கிறார்.
ராம் சரண் பாத்திரத்தின் பெற்றோராக வரும் நரேஷ், பிரவீணா குறித்த விளக்கமே இத்திரைக்கதையில் இல்லை. இது போன்ற பெரிய குறைகள் இதிலிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் அச்யுத்குமார் போன்ற நடிகர்கள் எல்லாம் இதில் வீணடிக்கப்பட்டிருக்கின்றனர்.
அது போன்ற விஷயங்கள் நம் நினைவுக்கு வரும்போது, இப்படத்தின் பிரமாண்டம் கானல் நீர் ஆகிவிடுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘இது வழக்கமானதொரு ஷங்கர் படம்’ என்ற பிம்பமே காணக் கிடைக்கும். அது போதும் என்கிற ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும். புதுவிதமான திரையனுபவத்தை விரும்பி வருபவர்களுக்கு இப்படம் ‘பூமர் அங்கிளாக’த்தான் தெரியும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்