சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமான பபாசி சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, 48-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் பிற்பகல் 2 முதல் இரவு 8.30 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடைபெற்றது.

தொடர்ந்து 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சி நேற்றுடன் (13.01.2025) நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த நிலையில், 48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் சுமார் 20 லட்சம் பேர் வந்து சென்றுள்ளதாகவும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமான பபாசி அறிவித்துள்ளது.

நடப்பாண்டு குழந்தைகளுக்கான சிறுகதைகள், அறிவியல் நூல்கள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள், கவிதைத் தொகுப்புகள், வரலாற்று புதினங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment