45 முறை பாடகருக்கான சிறந்த விருது பெற்ற கே.ஜே.யேசுதாஸ்!

சுமார் 50 வருட வருடங்களுக்கு மேலாக, இசை ரசிகர்களை தன்னுடைய இனிமையான குரலால் கவர்ந்து வரும், கே.ஜே.யேசுதாஸ் சுமார் 50,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் பாடியுள்ள இவர், கேரள மாநிலம், கொச்சியில் லத்தின் கத்தோலிக்க கிறிஸ்த்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை பெயர் அகஸ்டின் ஜோசப்.. தாயார் எலிசபெத்.

கே.ஜே.யேசுதாஸுக்கு இசை மீது ஆர்வம் வர முக்கியக் காரணம் அவரது தந்தை தான். அவரது தந்தை ஒரு இசைக்கலைஞர் என்பதால், ஆரம்ப காலத்தில் தன்னுடைய தந்தையிடமே இசை பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் திருப்புனித்துறையில் இருந்த ஒரு இசை அகாடமியில் தன் இசைக் கல்வியை தொடர்ந்தார். இந்துஸ்தானி இசையில் கைதேர்த்தவராக மாறிய யேசுதாஸ், பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் பாட வாய்ப்பு தேட துவங்கினார்.

அதன்படி, கே.ஜே.யேசுதாஸ் 1962-ல் வெளியான மலையாள படமான ‘கால்பாடுகல்’ என்கிற திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

அடுத்தடுத்து ஏராளமான மலையாளப் படங்களில், முன்னணி நடிகர்களுக்குப் பாடினார்.

இவர் பாடிய பாடல்கள், மலையாளத் திரையுலக ரசிகர்களைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களையும் கவனிக்க வைத்தது.

பின்னர், தமிழில் இயக்குநர் எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பொம்மை’ என்கிற திரைப்படத்தில் இவர் பாடிய “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்கிற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழில் யேசுதாஸ் பாடிய முதல் பாடல் இது என்றாலும், முதலில் வெளியான படமாக ‘கொஞ்சும் குமரி’ அமைந்தது. தமிழில் மட்டும் சுமார் 700-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக ‘அதிசய ராகம், மலரே குறிஞ்சி மலரே, கண்ணன் ஒரு கை குழந்தை, மனைவி அமைவதெல்லாம் உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்த பாடல்களாகும்.

எம்.ஜி .ஆர், சிவாஜி கணேசன் துவங்கி, ரஜினி – கமல், விஜய் – அஜித் மற்றும் இன்றைய 2கே கிட்ஸ் குழந்தைகளுக்கும் பல பாடல்கள் பாடியுள்ளார்.

மலையாள மொழியில் துவங்கி, தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உள்ளார்.

இவரை தொடர்ந்து இவரின் மகன் விஜய் யேசுதாசும் ஒரு பின்னணி பாடகராகவும், நடிகராகவும் கலக்கி வருகிறார்.

இன்று (10.01.2025) தன்னுடைய 85-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் கே.ஜே.யேசுதாஸ். 

சமீப காலமாக திரைப்படப் பாடல்கள் பாடுவதைக் குறைத்துக் கொண்டாலும் மேடை நிகழ்ச்சிகளில் தன்னுடைய ரசிகர்களுக்காக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதுவரை 30-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ள யேசுதாஸ் 8 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதே போல், மாநில அளவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து 45 முறை சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்ற ஒரே பாடகர் என்கிற பெருமைக்குரியவர் கே.ஜே.ஏசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

– நன்றி: ஏசியன் நெட் இதழ்

Comments (0)
Add Comment