வில்லியம் ஷேக்ஸ்பியர் – இன்றும் வியப்பை ஏற்படுத்தும் பெயர்!

வில்லியம் ஷேக்ஸ்பியர். இன்றும்கூட வியப்பை உண்டாக்குகிற பெயர் இது.

ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு நாடகங்கள் என்ற கணக்கில் மொத்தம் 37 நாடகங்களை எழுதியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். கூடவே சானெட் எனப்படும் 154 கவிதைகள்.

காலம் என்ற எல்லைக்கோடு எல்லாம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு இல்லவே இல்லை.

அவரது 37 நாடகங்களும், சானெட் எனப்படும் 154 கவிதைகளும் சாகாவரம் பெற்று, 400 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் உயிர் வாழ்கின்றன.

ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் கிளியோபாட்ராவும் என்ற நாடகம், அரியதொரு கலைப்படைப்பு. எதிர் எதிர் சக்திகளுக்கு இடையே நடக்கும் போட்டியே ஆன்டனி கிளியோபாட்ரா நாடகத்தின் கதைக்களம்.

எகிப்துடன் போட்டியிடும் ரோம், காதலுடன் போட்டியிடும் காமம், ஆண்மையுடன் போட்டியிடும் பெண்மை என ஆன்டனி கிளியோபாட்ரா நாடகம் முழுக்க எதிரெதிர் சக்திகளின் இடைவிடாத போட்டிதான்.

‘கட்டுமீறிய, மட்டுமீறிய, தான்தோன்றித்தனமான காதல், நம் கையைப்பிடித்து அழிவுக்கு அழைத்துச் செல்லும்’ என்பதுதான் ஆண்டனி கிளியோபாட்ரா நாடகம் சொல்லும் அழகான செய்தி.

‘ரோம் நகரம் டைபர் நதியில் கரையட்டும். ரோமப் பேரரசின் அகண்ட வரவேற்பு வளைவு சரியட்டும். நாடுகள் வெறும் மண்கட்டிகள். இந்த உலகத்தை இழப்பதால் ஒன்றும் ஆகிவிடாது’ ஆண்டனி பேசும் இந்த வசனம், ஆண்டனி கிளியோபாட்ரா நாடகத்தின் புகழ்பெற்ற வசனம்.

ஆண்டனி மட்டுமில்லை. காதல் கண்ணை மறைக்கும்போது ஆண்கள் அத்தனைப் பேருமே பேசக்கூடிய ‘வீர’ வசனம்தான் இது.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத், ஒருமுறை ‘எனது 25-வது வயதில் நான் அரசியாக உறுதிமொழி எடுத்தபோது எனது சாலட் (Salad) பருவத்தில் (இளமைப் பருவத்தில்) இருந்தேன்.

அன்று நான் எடுத்த உறுதிமொழியில் ஒரு வார்த்தையில் இருந்து கூட நான் பின்வாங்க மாட்டேன். அதற்காக வருந்தவும் மாட்டேன்’ என்று பேசினார்.

அரசி எலிசபெத் பேசிய அந்த வசனம், ஆண்டனி கிளியோபாட்ரா நாடகத்தில் வரும் ‘In My Salad Days when I was green in Judgement’ என்ற புகழ்மிக்க வசனம் ஆகும். அந்த நாடகத்தில் கிளியோபாட்ரா பேசும் வசனம் அது.

ஷேக்ஸ்பியரின் எல்லா நாடகங்களுமே சிறப்பானவைதான். அதில், ஆண்டனி கிளியோபாட்ரா நாடகம் தனிரகம்.

இந்த நாடகத்தின் உலகளாவிய தன்மை, காலங்களைக் கடந்து இன்றும் இந்த நாடகத்தை உயிர்வாழச் செய்து கொண்டிருக்கிறது.

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment