ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்!

நூல் அறிமுகம்: ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

இந்நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நீண்ட காலமாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்துவருபவர்.

வாய்மொழியாகப் பேசப்பட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கதைகளை ஆசிரியர், அவற்றின் வழிபாட்டுக் கூறுகள் மற்றும் சடங்குகள் என முழுமையான தகவல்களாகத் தொகுத்துள்ளார். இந்த நூலில் சொல்லப்பட்ட கதைகள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்ட பகுதியில் நடந்தவை.

நாட்டார் தெய்வங்கள் நம்மைப் போலவே இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள். தங்கள் அருஞ்செயல்களால் சிலர் தெய்வங்களாயினர். சிலர் கொலை செய்யப்பட்டு பின் தெய்வமாக வணங்கப்படுகின்றனர்.

நாட்டார் வழிபாடு என்பது சமய எல்லைகளைத் தாண்டி, சமுதாய ஆய்வுக்கான தரவாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் கொண்டிருந்த சமூக உறவுகளை இந்நூலின் மூலம் நன்கு அறியமுடிகிறது.

கொலைசெய்யப்பட்ட ஆண்கள் சுடலைமாடன் என்ற தெய்வத்துடனும், பெண் இசக்கியம்மன் என்ற பெண் தெய்வத்துடனும் பொதுவெளியில் வணங்கப்படுவார்கள்.

கோவிலுக்கு ஆட்டை பலிகொடுக்கும் போது அதன் தலை மேலாக இருந்தால் கொலை பட்டு தெய்வமானவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பலியாகவும், தலை கீழ் இருந்தால் சிவன் அருளால் உருப்பெற்ற நாட்டார் தெய்வத்தின் வழிபாடு எனப் பொருள் கொள்ளலாம்.

இந்த நூலில் மொத்தம் 14 கதைகள் உள்ளன. சாதி அடிப்படையிலான மண மறுப்பு கொலைகள், திருடிய குற்றத்திற்கான தண்டனை கொலைகள், சொத்து அபகரிப்பு கொலைகள் எனக் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. பெருமிதம் மற்றும் ஆணவமே இந்த கொலைகளின் மூல காரணம்.

நெசவாளர்களின் நூலுக்குப் பஞ்சு போட வைத்திருந்த கஞ்சியைப் பசியால் குடித்ததால் அண்ணன், தங்கை கொல்லப்பட்டனர். வண்டி மலையன், வண்டிமலைச்சி என்னும் பெயரில் நாட்டார் தெய்வமாக வழிபடப்படுகின்றனர்.

கணவனைப் பிரிந்த பெண் சந்தோசமாக வாழ்கிறாள் என்ற காரணத்திற்காகவே கொலை செய்யப்பட்டு மாடத்தியம்மனாக உருமாறினாள்.

இந்தியப் பண்பாட்டில் நிலவிவரும் பன்முகத்தன்மையை ஓரங்கட்டிவிட்டு ஒற்றை பண்பாட்டைக் கொண்டுவரும் நோக்கத்தில் சில அமைப்புகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொல் சமயம் மற்றும் பெருஞ் சமயம் என இருவகையாக நம் வழிபாட்டு முறைகள் இருந்துவந்துள்ளன.

இன்றைய சமூக சூழலில் நாட்டார் தெய்வங்களின் தோற்றம், மற்றும் அது தொடர்பான வழிபாட்டு முறைகளை அறிவது நமது பன்முகத்தன்மையைத் தொடர வழிவகுக்கும்.

அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம்.

சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது.

ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது.

இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம்.

கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.

******

நூல் அறிமுகம்: ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
ஆசிரியர்: ஆ சிவசுப்பிரமணியன்
பக்கங்கள் 115
கிண்டில் பதிப்பகம்

#Aanava_Kolai_Saamikalum_Perumitha_Kolai_Ammankalum_book #Research_Essay #Kindle_Edition #A_Sivasubramanian #ஆணவக்_கொலைச்_சாமிகளும்_பெருமிதக்_கொலை_அம்மன்களும்_நூல்
#ஆ_சிவசுப்பிரமணியன்

Comments (0)
Add Comment