நல்லகண்ணு நடந்து வந்த பாதை வெளிச்சம் மிக்கது!

நூறு வயது புரட்சியாளராகத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள். உடலும் உள்ளமும் நூறு வயதிலும் இளமையோடு இருப்பது மிகவும் அபூர்வமானது.

இன்று, இவர் தமிழகத்தின் மதிப்புமிக்கத் தலைவர். பொது வாழ்க்கைக்குரிய இலக்கணங்கள் இவரிடம்தான் காணப்படுகிறது. நேர்மை, அர்ப்பணிப்பு, அயராத உழைப்பு, பகைமை பாராட்டாத அரசியல் பண்பாடு என்று இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது.

சமரசம் செய்து கொள்ளாமல் அதே சமயம் ஆரவாரமற்று, போர்குணமிக்க கருத்துகளை முன்வைக்கும் தன்மை நம்மை வியப்புற வைக்கிறது. தோழர். ஆர்.என்.கே. முன்வைக்கும் ஒவ்வொரு கருத்தையும் தமிழகம் இன்று உற்றுக்கவனித்துக் கொண்டிருக்கிறது.

நூறு ஆண்டுகள் என்பது அது தானாக நகர்ந்து வந்து விடவில்லை. இந்த, நிகழ்வுகள் எரிமலையின் வெப்பத்திற்கு இணையானவை. பிள்ளைப் பிராயத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுமையைக் கண்டு இதற்காகப் போராடும் மனஉறுதியைப் பெற்ற முதல் அனுபவம் தொடங்கி, எத்தனை விதமான அனுபவங்கள்.

பிரமிடு போன்று அமைந்த இந்திய சாதி சமூகத்தின் நசுங்கிக் கொண்டிருக்கும் அடித்தள வாழ்க்கையை நேரில் சந்தித்து அதில் பங்கெடுத்ததில், ஆதிக்கக் கூட்டம், இவருக்கு உருவாக்கிய அவமானங்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.

சூத்திரன், பஞ்சமன் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்துப் போராடி, இன்று வரை, இவருடைய பயணம், சாதித்தவற்றால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும், சாதிக்க முடியாமல் போனவற்றால் உருவான இழப்பையும் உள்ளடக்கியவை.

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில், தடை செய்யப்பட்ட பொதுவுடமை இயக்கத்தில் காவல் துறையினரால் மிகவும் தேடப்பட்ட முன்னணிப் போராளியாக தோழர் நல்லகண்ணு திகழ்ந்தார்.

மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கை மிகத் தேர்ந்த நாவலின் நுட்பம் நிறைந்த பக்கங்களையும் தோற்கடிக்கக்கூடியவை.

காவல் துறைக்கு சவாலாக விளங்கிய தோழர். ஆர்.என்.கே. ஒரு நாள் கையில் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் பெற்றார். இத்தகைய அனுபவங்களைப் பெற்றவர்களை தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவர் நடந்து வந்தப் பாதை வெளிச்சம் மிக்கது. இந்த வெளிச்சம் மிக்க தனித்த பாதை இவரால் மட்டும் உருவாக்கப்பட்டதன்று. கூட்டுவாழ்க்கை தான் கற்றுத் தருகிறது. தலைமறைவு வாழ்க்கை, சிறை வாழ்க்கை, ஜனநாயக உரிமைகளைப் பெற்ற வாழ்க்கை என்று எல்லா வாழ்க்கைக்குள்ளும் கூட்டு வாழ்க்கையைத் தான் கம்யூனிஸ்ட்டுகள் நேசிக்கிறார்கள்.

தோழர் நல்லகண்ணு அவர்கள் கூட்டு வாழ்க்கையில் முழுநம்பிக்கைக் கொண்டவர். ஒரு கம்யூனிஸ்டாக நின்று இவர் இந்தக் கூட்டு வாழ்க்கையில் வளர்த்தெடுத்த கருதுகோள்கள் மிகுந்த முக்கியத்துவமுடையவை. இன்றைய தலைமுறைக்கு இது மிகவும் பயன்படததக்கது.

பத்திரிகையாளர் மணா மிகுந்த தீவிரமிக்கவர். தேவையான தகவல்கள் எங்கு மறைந்திருந்தாலும் அதைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்துவிடும் உறுதிமிக்கவர்.

அண்மை காலங்களில் இவர் களமமைத்துத் திரட்டிய தகவல்கள் மிகுந்த எழுச்சியைத் தரக்கூடியவை. தோழர் ஆர்.என்.கே. அவர்களைப் பேட்டி கண்டு அப்போது அவர் பணியாற்றிய புதிய பார்வையில் வெளியிட்டார்.

இப்படி ஒரு வாழ்க்கைப் பயணம் தலைவர் நல்லகண்ணுவுக்கு உண்டா என்று பலரையும் வியக்க வைத்தது இந்தப் பேட்டி.

உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் இந்தப் பேட்டியை வெளியிட வேண்டும் என்று மணாவை கேட்டபோது, மனமுவந்த விருப்பத்தை வழங்கினார். புதிய பார்வையில் வெளிவராத சிலவற்றையும் இணைத்து, செழுமைப்படுத்திக் கொடுத்தார். அவருக்கு உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட ‘போராட்டமே வாழ்க்கை’ என்ற நூலின் பதிப்புரை.

Comments (0)
Add Comment