தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்துகொள்ள வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5-ம் தேதி சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

மூன்று நாட்கள் (ஜனவரி 05 முதல் 07.01.2025) நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சிந்துவெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும், திராவிட வியல் அறிஞர்களும், இன உணர்வாளர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

பன்னாட்டு கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்துவெளிப் பண்பாட்டின் அறிக்கையை உலகிற்கு தெரிவித்த தொல்லியல் ஆய்வாளர் சர்.ஜான் மார்ஷலின் சிலைக்கு காணொலி மூலம் அடிக்கல் நிறுவினார்.

அதோடு, சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்துக்களைப் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் (Decipher) வழி வகுப்பவர்கட்கு பரிசாக ‘ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை’ அறிவித்துள்ளார் முதலமைச்சர்!

கருத்தரங்க துவக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யாவும் பங்கேற்று சிறப்பித்தார்!

கருத்தரங்கில் எனது நெருங்கிய தோழர் மாணிக்கம், தமிழ்நாடு மூதறிஞர் குழு, தோழர் அழகிரி சாமி, பகுத்தறிவாளர் கழகம், புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் டோனி ஜோசப், எழுத்தாளர் தோழர் விஜயசங்கர், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, தொல்லியல் ஆய்வாளர் மார்க்சிய காந்தி ஆகிய அறிவார்ந்த அறிஞர்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன்.

பன்னாட்டு கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்துகள்.

– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

Comments (0)
Add Comment