நாம தினமும் செய்ற வேலைகளையே கொஞ்ச நேரம் கண்ணை மூடி செஞ்சு பாருங்க, கஷ்டமா இருக்குல்ல. நம்மளோட இந்த சில நிமிஷங்கள் மாதிரிதான் பார்வைத் திறன் சவால் உடையவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே இருக்கும்.
பார்வைத் திறன் சவால் உடையவங்களுக்குத் தொடக்கத்துல எல்லா விஷயங்களுக்கும் மத்தவங்களோட உதவிய நாடியிருக்க மாதிரியான சூழ்நிலை இருக்கும். போக போக எல்லா விஷயங்களையும் யாரோட உதவியும் இல்லாம தாங்களாகவே செய்யப் பழகிக்குவாங்க.
ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அவங்களால செய்ய முடியாமலே இருந்துச்சு. அதுதான் படிக்கிறது. எல்லா விஷயங்களையும் செய்ய முடிஞ்ச அவங்களால் சுயமா படிக்க மட்டும் முடியலை.
கற்றல் அப்படிங்கற விஷயம் ஒருவருடைய பார்வையைப் பயன்படுத்தி செய்யிறதாகத்தான் இருந்துச்சு.
அந்தக் குழந்தைக்கு அவங்க அப்பா அம்மா லூயிஸ் பிரெய்லி-னு பேர் வைக்கிறாங்க.
பிறந்தப்போ அந்தக் குழந்தை நல்ல ஆரோக்கியமாவும், நல்ல கண் பார்வையோடையும்தான் இருந்துச்சு.
பிரெய்லியோட அப்பா தோல் பொருள்களைத் தயாரிக்கிற வேலையை செஞ்சிட்டு வந்தாரு. பிரெய்லிக்கு 3 வயசு இருக்கப்போ, அவங்க அப்பாவுடைய தோல் பொருள்களை செய்யற கருவிகள்ல ஒண்ணை வச்சி விளையாடிட்டு இருந்துருக்காரு.
அப்போ தெரியாம அந்த கருவி அவருடைய ஒரு கண்ல குத்தி, உடனடியா அதற்கு மருத்துவம் பண்ணாங்க. முதல்ல அது பெரிய காயமா தெரியல.
ஆனா, அந்த சின்ன விபத்து கொஞ்சம் கொஞ்சமா அவருடைய கண்கள்ல பாதிப்ப உண்டாக்கத் தொடங்குச்சு. பிரெய்லிக்கு 5 வயசு ஆகும்போதே, அவருடைய பார்வை முழுமையா பரிபோயிருந்துச்சு.பார்வைதான் போச்சு, பிரெய்லியோட தன்னம்பிக்கை அப்படியேதான் இருந்துச்சு.
பார்வைத் திறன் சவாலோடவும் பள்ளியில சிறந்த மாணவராகத்தான் பிரெய்லி இருந்தாரு. ஆனால், சாதாரண மாணவர்கள் படிக்கிற பள்ளியில பார்வைத் திறன் சவால் உடையவர்களுக்குத் தேவையான சரியான கல்விமுறை இல்லைனு பிரெய்லிக்குத் தோனிக்கிட்டே இருந்திருக்கு.
தனக்கு பத்து வயசு இருக்கப்போ, பாரிஸ்ல இருக்கிற Royal Institute for Blind Youth அப்படிங்கிற, பார்வைத்திறன் சவால் உடைய குழந்தைகளுக்குன்னே செயல்பட்ட சிறப்பு பள்ளியில சேர்றாரு பிரெய்லி.
அந்தப் பள்ளியின் நிறுவனர் வேலன்டின் அவுவி (Valentin Hauy), பார்வைத் திறன் சவால் உடைய குழந்தைகள் படிக்கிறதுக்குனே வடிவமைக்கப்பட்ட புத்தகங்களை உருவாக்கி வச்சிருந்தாரு.
பிரெய்லி அந்தப் பள்ளியில் சேர்ந்த 1819 காலகட்டத்துல மொத்தம் 14 புத்தகங்கள் அந்தப் பள்ளியில் இருந்திருக்கு.
சாதாரணமா நாம் பயன்படுத்துற எழுத்துக்களை பார்வைத் திறன் சவால் உடைய குழந்தைகள் படிக்கிற மாதிரி கொஞ்சம் மேடா அச்சடிச்சிருப்பாங்க. அந்த எழுத்தைத் தொட்டுப் பார்த்து அதோட வடிவத்த உணர்ந்து பார்வைத் திறன் சவால் உடையவங்க படிச்சிக்கலாம்.
ஆனால், இந்த முறையில் பார்வைத் திறன் சவால் கொண்டவங்க படிக்க ரொம்ப நேரம் ஆச்சு. மேலும், புத்தகமும் ரொம்ப கணமா இருந்துச்சு. இதுவும்கூட பார்வைத்திறன் சவால் கொண்டவங்களுக்கான கற்றல் முறை இல்லைனு பிரெய்லி நினைச்சார்.
அப்போதான் பிரெய்லிக்கு பிரெஞ்ச் ராணுவம் பயன்படுத்துற ‘Night Writing’ முறை பற்றித் தெரிய வந்துச்சு.
ராணுவத்துல போர் முனையில இருக்க சிப்பாய்க்கு வழக்கமான முறையில தகவல் அனுப்புனா, இரவு நேரங்கள்ல அதைப் படிக்க நெருப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
அது எதிரிப் படைக்கு எளிதா இலக்காக்கிடும். இதைத் தவிர்க்கத்தான் இந்த ‘Night Writing’ அப்படிங்கிற முறைய சார்ல்ஸ பார்பியர்-ங்கிற பிரெஞ்ச் கேப்டன் உருவாக்கியிருந்தாரு.
12 புள்ளிகளை அடிப்படையா வச்சு உருவாக்கப்பட்ட இந்த முறையில, காகிதத்துல புள்ளிகள் மேலெழுந்து மேடு மாதிரி ஒரு அமைப்பை கொண்டிருக்கும். குறிப்பிட்ட வரிசையில புள்ளிகள் இருந்தா அது ஒரு எழுத்தையோ எண்ணையோ குறிக்கும்.
அதே மாதிரி எல்லா எழுத்து மற்றும் எண்ணுக்கும் புள்ளிகளை வச்சு குறியீடு உருவாக்கியிருப்பாங்க.
இதை விரலால தொட்டுப் பார்த்து, என்ன தகவல் சொல்லியிருக்காங்கனு இரவு நேரத்துல் விளக்கு வெளிச்சம் இல்லாமையே போர் முனையில இருக்க ஒரு சிப்பாயால தெரிஞ்சுக்க முடிஞ்சது.
பார்வைத் திறன் சவால் உடையவர்களுக்கான பள்ளியில் சேர்ந்த இரண்டே வருஷத்துல பிரெய்லி, இந்த முறையை முழுசா கத்துக்கிட்டாரு.
ஆனா, இந்த முறையிலையும் படிக்க நிறைய நேரம் எடுத்துக்கிறதா நினைச்ச பிரெய்லி, இதே முறையை கொஞ்சம் மாத்தி பார்வைத் திறன் சவால் உடையவர்கள் படிக்கிற மாதிரி எளிமையான வடிவமா கொண்டு வர்ற முயற்சில இறங்கினாரு.
12 புள்ளிகள் கொண்ட Night Writing முறை மாதிரி இல்லாம, 6 புள்ளிகள் மட்டும் வச்சு 63 விதமான சேர்க்கையில எழுத்துக்கள் மற்றும் எண்களை உருவாக்கினார்.
இந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டது 1824-ல. 1829-ல தன்னோட இந்தப் புதிய முறையை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினாரு பிரெய்லி.
இதற்கிடைப்பட்ட காலத்துல அவர் படிச்ச பள்ளியிலேயே வரலாறும், கணக்குல அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி வகுப்புகளும் எடுக்கத் தொடங்கிட்டாரு பிரெய்லி. பிரெய்லிக்கு படிப்பு மட்டுமில்லாம இசையிலையும் பேரார்வம் இருந்துச்சு.
சின்ன வயசுலையே செல்லோ மற்றும் ஆர்கன் அப்படிங்கிற ரெண்டு இசைக்கருவிகளை நல்லா வாசிக்கக் கத்துக்கிட்டாரு. 1834-ல இருந்து 1839 வரை பல சர்ச்சுகள்ல இந்த இசைக் கருவிகளை அவர் வாசிச்சிருக்காரு.
இசை மேல் ஆர்வம் இருந்ததால அவர் உருவாக்குன பிரெய்லி முறையை இசைக்கும், கணக்குப் பாடங்களுக்கும் உருவாக்குனாரு.
இவ்வளவு கஷ்டப்பட்டு பார்வைத் திறன் சவால் உடையவர்களுக்கான ஒரு கற்றல் முறையை பிரெய்லி உருவாக்குனாலும், தொடக்கத்துல அது சரியான வரவேற்பைப் பெறல.
அவர் படிச்ச Royal Institute for Blind Youth பள்ளியிலேயே அவர் உருவாக்குன முறைக்கு சரியான வரவேற்பு கிடைக்கல. 1854-ல் தான் அந்தப் பள்ளியிலேயே பிரெய்லி முறையை அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஆனால், அதற்கிடையில 1852-ல் பிரெய்லி இறந்துட்டாரு.
பிரெய்லிக்கு சின்ன வயசுல இருந்தே சுவாசக் கோளாறு இருந்திருக்கு. கிட்டத்தட்ட 16 வருடங்கள் அந்த நோயினால அவதிப்பட்டிருக்காரு பிரெய்லி. 1852-ல் அது ரொம்ப தீவிரமடைஞ்சு ராயல் இன்ஸ்ட்டிட்யூட் மருத்துவமனையில் காலமாகிட்டாரு பிரெய்லி.
அவர் இறந்த பிறகுதான் பிரெய்லி முறை கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்குத் தெரிய வந்துச்சு.
19-ம் நூற்றாண்டுல பிரெய்லி முறைய உலகமெங்கும் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.
வெறும் புத்தகத்தோட மட்டும் நிக்காம, பிரெய்லி டைப்ரைட்டர், பிரெய்லி கீபோர்டுன்னு பார்வைத்திறன் சவால் உடையவங்க தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துறதுக்கு பிரெய்லி முறை மிகவும் வசதியாவும் எளிமையாவும் இருக்கு.
இரண்டு நூற்றாண்டுகள் கடந்து இன்னைக்கும் காலண்டர், ஏடிஎம், புத்தகம்னு சாதாரண மக்கள் பயன்படுத்துற அதே வசதிகளை யாரோட உதவியும் இல்லாம பார்வைத் திறன் சவால் உடையவர்களும் பயன்படுத்த முடியுதுன்னா அதுக்கு பிரெய்லி கண்டறிஞ்ச அந்தக் கற்றல் முறை முக்கியக் காரணம்.
பிரெய்லியோட சாதனைய போற்றும் விதமா 1952-ல பிரெய்லி பிறந்த ஊர்ல புதைக்கப்பட்டிருந்த அவரோட உடலை எடுத்து வந்து பாரிஸ்ல இருக்கிற பேன்தியான்ல (Pantheon) முழு அரசு மரியாதையோட மறுபடியும் அடக்கம் பண்ணுச்சு பிரெஞ்ச் அரசு.
பிரான்ஸுல மிகவும் மரியாதைக்குரியவர்களை இங்கதான் அடக்கம் செய்வாங்களாம்.
பிரெய்லியோட பங்களிப்பைக் கொண்டாடும் விதமாகவும், பிரெய்லியோட கற்றல் முறையை பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர் பிறந்த தினமான ஜனவரி 4-ம் தேதி உலக பிரெய்லி தினமா கொண்டாடப்படுது!
– நன்றி: விகடன்