நூல் அறிமுகம்: திராட்சைகளின் இதயம்!
சமூக வலைதளங்கள் இலக்கிய படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய தளமாக மாறியிருக்கிறது. தங்கள் படைப்புகள் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு உதவியாக இருக்கிறது. அந்த வகையில் தன் முதல் நாவல் பற்றிய குறிப்பு எழுதியிருக்கிறார் எழுத்தாளர் நாகூர் ரூமி.
“நான் எழுதிய முதல் நாவல் இது. ஒரே நாவலும் இதுதான். இதற்கு முன் ’கப்பலுக்குப்போன மச்சான்’ என்ற பெயரில் ஒரு குறுநாவல் எழுதினேன். அதுவும் இதுவும் என் அனுபவங்களிலிருந்து உருவானவைதான்.
இதில் ’திராட்சைகளின் இதயம்’ சிறப்புத் தன்மை வாய்ந்தது. ஒரு இறைநேசரின் கீழே பத்து ஆண்டுகள் நாங்கள் சீடர்களாகப் பயணித்த அனுபவங்களின் தொகுப்பு இது. இந்த நாவலை முதலில் கிழக்கு பதிப்பகமும், பின்னர் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகமும் வெளியிட்டன.
மௌலானா ரூமி அவர்களின் மஸ்னவி காவியத்தில் வரும் பாடலொன்றின் படிமத்திலிருந்து நான் எடுத்துக்கொண்ட தலைப்பு இது. திராட்சைகளின் இதயமாக இருப்பது மது எனப்படும் அதன் சாறுதான். அதை மறைத்துக்கொண்டு இருப்பதுதான் திராட்சை.
அதைப்போல, ஒரு மார்க்க அறிஞருக்குரிய புற அடையாளங்கள் எதுவும் இல்லாமல், தாடி இல்லாமல், சுத்தமாக சவரம் செய்யப்பட்ட முகத்துடன், எப்போதும் கையில் சிகரட்டுடன் புரட்சிகரமான மௌலவியாக, பாகவியாக இருந்தவர்கள் எங்கள் ஞானாசிரியர் ஹஜ்ரத் மாமா அவர்கள்.
உருவத்துக்கும் உண்மைக்கும் தொடர்பில்லை என்பதை காட்சிப்படுத்திய மகான்.
அப்படியெல்லாம் இருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் சொல்லவில்லை. ஆனால் அகத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் புறத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற உண்மையை உணர்த்தியவர்கள்.
இந்த நாவலைப் படித்துவிட்டு என்னோடு நட்பு பாராட்டிய, பாராட்டுகின்ற மார்க்க அறிஞர்கள் ஏராளம்.
உதாரணமாக மார்க்க அறிஞர் அபூதாஹிர் மஹ்ளரி மற்றும் சகோதரர் நஹ்வி அவர்கள், சகோதரர் ராஸிக் அவர்கள் இப்படி சொல்லிக்கொண்டு போகமுடியும்.
இப்போது இது சீர்மை பதிப்பகத்தின் மூலமாக இந்த நாவல் அழகிய முறையில் வெளிவருகிறது. எனக்கு மிகவும் சந்தோஷம். வாங்கிப்படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டால் இன்னும் சந்தோஷம்.
திராட்சைகளின் இதயம்
ஆசிரியர்: நாகூர் ரூமி
சீர்மை பதிப்பகம்
விலை: ரூ. 240/-