புற்றுநோய்க்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி!

தினமும் ஒரே மாதிரியான டிபன் என்றால் எல்லோருக்கும் போர் அடித்துவிடும். வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள்.

கிழங்கு வகைகளில் மிகவும் இனிப்பு சுவையானது சக்கரை வள்ளி கிழங்கு. ஆனால் அதை சாப்பிட வைக்க தான் பெரும் போராட்டமாக இருக்கும். 90-களில் மாலை சிற்றுண்டியாகவும் ஏன் இரவு உணவாக பல வீடுகளின் பசியை ஆற்றிய பங்கு இந்த கிழங்கிற்கு உண்டு.

இந்த கிழங்கில் ஏராளமான வைட்டமின் A, B, C என ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. உடலுக்குக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய கிழங்கு வகையாகும்.

நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை சுத்தப்படுத்தும் தன்மைகொண்ட சத்து மிகுந்த உணவாகும்.

பொதுவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கை நான்கு வகையான நிறங்களில் நாம் பார்க்க முடியும். மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது.

புற்றுநோய் செல்களை அழித்து நோய் அபாயத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வையை அதிகரித்தல், குடல் இயக்கம் சீராக இருக்க, மூளையின் செயல்பாடுகளை சீராக வைக்கவும் உதவும் இந்த  சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதுக்காக்கிறது.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஊதா நிறக் கிழங்கில் அந்தோசயனின் மூலப்பொருள் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் மூளை வீக்கங்களைக் குறைப்பது, ரேடிக்கல் சேதங்களில் இருந்து பாதுகாப்பதன் மூலம் நியாபக சக்தியை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அழகாக இருக்க வேண்டும் என்றால் சர்க்கரை வள்ளிக் கிழங்கை தொடர்ந்து எடுத்து வரவேண்டும். சாப்பிட்டு வந்தால் சருமத்தின் நிறம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இப்படி பல ஊட்டச்சத்துகளைக் கொண்ட கிழங்கை ஒதுக்கலாமா? ஆகவே அதிக சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கு பலருக்குப் பிடிக்காமல் இருக்கிறது.

இதை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் அளவுக்கு ஒரு ரெசிபி உள்ளது.

பிடித்தும் பிடிக்காமல் இருக்கும் இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை வைத்து சப்பாத்தி வடிவில் செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று கூறமாட்டார்கள். இப்போது சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 2

கோதுமை மாவு – 2 கப்

உப்பு – தே.அ

மஞ்சள் தூள் – தே.அ

மிளகாய் தூள் – தே .அ

கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன்

சீரகப் பொடி – 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

மல்லித்தழை – தே.அ

செய்முறை

சர்க்கரை வள்ளிக் கிழங்கை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூடு ஆறியதும் நன்றாக வெந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை தோல் நீக்கி மசித்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மசித்து எடுத்த கிழங்கில் இரண்டு கப் கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கஸ்தூரி மேத்தி ஆகியவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.

அதன் பிறகு பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடைசியாக இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே துணி போட்டு மூடி வைக்கவும். காற்றுப் போகாமல் மூடி வைத்து விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் தோசைக் கல் வைத்து, எண்ணெய், வெண்ணெய் அல்லது நெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.

இரண்டு புறமும் திருப்பி போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சப்பாத்தியை வேகவைத்து எடுக்கவும்.

இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்த சப்பாத்திக்கு தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து செய்த பச்சடி பொருத்தமாக இருக்கும்.

மேலும் உங்கள் சுவைக்கு ஏற்றதுபோல் எந்த கிரேவி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வெறும் சப்பாத்தியை அப்படியே சாப்பிட்டு விடுவார்கள்.

சத்துக்கள் நிறைந்த இந்த சப்பாத்தியின் சுவையும் அருமையாக இருக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் வாங்கி ருசிப்பார்கள்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment