நூல் அறிமுகம்:
1. வஉசியின் மெய்யறம்
சமூக வலைதளங்களின் வழியாக புதிய புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகளும் குறிப்புகளும் குவிந்துவருகின்றன. தமிழில் வெளிவரும் புதிய நூல்கள் குறித்து தமிழ்ப் படைப்பாளிகள் சிலரின் குறிப்புகள் வாசகர்களுக்காக…
2024 ம் ஆண்டு பெரியவர் வ.உ.சி. பேரா. ஆ.இரா.வே. அவர்களது ‘Swadeshi Steam’ புத்தகம் வழியாகவும் சாகித்ய அகாதமி விருது வழியாக “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” ம் இந்திய அளவில் பரவலாக அறியப்பட்ட ஆளுமையாக திகழ்ந்தார்.
இந்த ஆண்டு 2025 ம் ஆண்டு பெரியவர் வ.உ.சி.யின் கருணை வகைமை இலக்கியம் ‘மெய்யறம்’ ஆண்டாக வ.உ.சி. ஆய்வு வட்டம் சார்பாக அறிவிக்கிறோம். மெய்யறம் பள்ளிக் குழந்தைகளுக்காக வெவ்வேறு வடிவங்களில் கொண்டு செல்ல இருக்கிறோம்.
– ரெங்கையா முருகன்
2. திரை மொழியும் அரசியலும்
ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது? அதை எப்படி விளங்கிக் கொள்வது? எனும் பார்வையை வழங்குகிற நூல், திரையும் வாழ்வும்.
உலக அளவிலான திரை அழகியல், மற்றும் திரை மொழியானது, தேசங்களின் அரசியல், பண்பாடு, பொருளாதார நிலை, ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபட்டிருக்கிறது. அமெரிக்க சினிமா, சினிமாவை வணிகமாக, தொழில் நுட்பமாக மாற்றியிருக்கிறது.
அமெரிக்க சினிமாக்களை இடதுசாரி பார்வையில் அணுகினால் அதில் காட்டப்படும் சுறா வெறும் மீனில்லை. அது ஒரு மெட்டாஃபர்.
ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை, அமெரிக்காவில் சட்டபூர்வமற்ற வகையில் குடியிருப்பவர்களை, ஹாலிவுட் சினிமா அழிவு சக்திகளாக உருவகப்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க சினிமாக்கள், அமெரிக்காவின் வதைமுகாம்கள், மற்றும் ராணுவ செயல்பாடுகளை நியாயப்படுத்துகின்றன. அதே வேளை கொரியாவின் parasite போன்ற படங்கள் தன்நாட்டு அரசியலையே விமர்சனம் செய்வதாக அமைந்துள்ளன.
மனிதநேயம், அன்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஈரான் படங்கள் அமைந்திருக்கின்றன. போரின் பெருமிதங்களை அமெரிக்கப் படங்கள் பேசுகின்றன என்றால், போரின் அவலத்தை பேசுபவையாக கீழைத்தேய திரைவடிவங்கள் வளர்ந்திருக்கின்றன.
இத்தகைய கண்ணோட்டத்திலிருந்து உருவானதுதான் ‘திரையும் வாழ்வும்’. இதன் முதல் பதிப்பை வாசக சாலை வெளியிட்டது.
இப்போது இரண்டாம் பதிப்பை, புதிய வடிவமைப்புடன் வேரல் புக்ஸ் கொண்டு வருகிறது. லார்க் பாஸ்கரன், அம்பிகா குமரன் இருவருக்கும் அன்பு.
– கவிஞர் கரிகாலன்
நான்கு புதிய திரைக்கதை புத்தகங்கள்
தமிழில் முதல் முற்சியாக, இந்திய அளவில் வேறெந்த மொழியிலும் கூட வெளிவராத திரைக்கதை தணிக்கை மிக நுட்பமான திரைக்கதையை கற்றுக்கொள்ளும் புதிய புத்தகத்தை இந்தாண்டு பியூர் சினிமா வெளியிட்டுள்ளது.
பேராசிரியர், திரைக்கதை ஆலோசகத் சாய் விஜேந்திரனின் இந்த புத்தகம் தமிழில் வெளியாகியிருக்கிறது. பல ஆண்டுகள் ஆய்விற்கு பிறகு இப்படி ஒரு புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
இது தவிற Kill the writers block, characters matter, Anytime Writer, ஆகிய மூன்று திரைக்கதை தொழில்நுட்பம் சார்ந்த ஆங்கில புத்தகங்களையும் பியூர் சினிமா வெளியிட்டுள்ளது.
சாய் விஜேந்திரனின் இந்த நான்கு புத்தகங்களும் சென்னை புத்தக காட்சி பியூர் சினிமா அரங்கு எண் 271,272 இல் கிடைக்கும். இந்த ஆண்டு நீஙகள் அவசியம் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம்.
– தமிழ் ஸ்டுடியோ அருண்
மூன்று மொழிபெயர்ப்பு குறுநாவல்கள்
புரூனோ ஸல்ஸ்:
போலந்தின் காஃப்கா என அழைக்கப்படும் புரூனோ ஸல்ஸின் சானடோரியம், ஒரு சர்ரியல் குறுநாவல். மரணமடைந்த அப்பாவைப் பார்க்க வரும் மகன், ஒரு கனவே போல் பிறழ்வுற்ற நிலவெளியில் மிதக்கும் சானடோரியத்தில் அலைகிறார்.
மரணத்திற்குப் பிறகு, “உறக்கமே போல் சாக்காடு” என்பதை மகன் பாத்திரம் சானடோரியத்தில் புரிந்து கொள்கிறது.
நிகோலாய் கோகோல்:
அரசியல் பகடிப் புனைவுகளின் தொடக்கமாக அமைந்த நிகோலோய் கோகலின் ‘மூக்கு’ இன்றும் புத்தம் புதியதாக இருக்கிறது.
உலகெங்கும் மிகப் பெரிய அளவில் பரவியிருக்கும் அதிகாரப் படிநிலைகள், திடீரென மூக்கு காணாமலாகும் ஒரு மிகை யதார்த்தச் சிக்கலின் முன் சரிந்து வீழ்கின்றன. சிரிக்கச் சிரிக்க வாசிக்கக் கூடிய செவ்வியல் படைப்பு.
மியா கூட்டோ:
மொசாம்பிக்கின் நிகரற்ற படைப்பாளி மியா கூட்டோவின் குறுநாவல் “கடல் என்னை நேசிக்கிறது” கடல்சார் கட்டுக்கதைகளால் ஆகிய நவீனப் புனைவு.
சாகஸமும் காதலும் மரணமும் இணையும் விநோதப் புள்ளிகளில் நகரும் இக் குறுநாவல் மிக வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
– தமிழ்வெளி வெளியீடு / கலாபன்
சைனாமேனின் கதைகள்
சைனா மேனின் (சென்) மாஸ்டரான வூபெய் மீது அளவு கடந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறான். மாஸ்டருக்காக தனது உயிரையும், அவரை எதிர்ப்பவர்களின் உயிரையும் எடுப்பதற்கு சிறிது கூட தயங்கமாட்டான் சென்.
சிறுவயது முதலே இவனுடன் பயணித்து வரும் சௌ என்ற ஆருயிர் நண்பன்தான் சென்னுக்கு உற்ற தோழன் ஆவான்.
சென்னின் வாழ்க்கையில் கிம் என்ற பெண் நுழைகிறாள். வசந்தமாய் சென்று கொண்டிருக்கும் வேளையில் சென்னின் வாழ்க்கையில் புயலாய் சில முரடர்கள் நுழைகிறார்கள்.
தான் உயிருக்கு உயிராய் நேசிக்கும் கிம்மை கொன்று விடுகிறார்கள். அதன்பிறகு நடைபெறும் அதிரடி சம்பவங்களே இந்த சைனாமேனின் கதை!
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லாத அதிரடி கதை! இப்புத்தகம் சென்னை புத்தகக் காட்சியில் 323 அமிர்தா பதிப்பகத்தில் கிடைக்கும்.