கனவு நிஜமாகும் வரை அதன் மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை!

வளையூர்ப்பட்டி. மதுரை மாவட்டம் மேலூருக்குப் பக்கத்திலிருக்கும் சிறு கிராமம். பஸ் வசதியில்லை. ஒன்றரை கி.மீ. தூரத்திலே இறங்கிக் கண்மாய்க்கரைத் தாண்டினால் பச்சை மணக்கும் பூமியாக இந்தக் கிராமம்.

பிறந்த போதிருந்தே அந்தக் குழந்தை வளர்ந்தது சினிமாக் கொட்டகைச் சூழலில். அப்பா டூரிங் டாக்கீஸில் ஆபரேட்டர்; அம்மா ஆசிரியை.

ஆசிரியைப் பயிற்சிக்காக அவர் போக வேண்டியிருந்தபோது குழந்தையைக் கேபின் அறையிலேயே கொண்டுப் போய் வைத்திருப்பார் அப்பா.

சினிமா இரைச்சல் சேரனுக்கு சின்ன வயதிலேயே பழக்கமாகி விட்டது.

வளர்ந்ததும் அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போகும்போது தியேட்டர் திரையில் விழும் அந்த நிழல்களின் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு.

பாடல்களும் வசனங்களும் மனசில் நாற்று மாதிரிப் பதிந்து விட்டன. முதலில் எம்.ஜி.ஆரின் வேகம் பிடித்தது.

கொஞ்ச காலத்தில் சிவாஜியின் நடிப்பு ரொம்பவும் பிடித்து அவருக்கு ரசிகர் என்கிற அடையாளத்தில் ஒருவிதப் பெருமிதம்.

பத்தாவது வகுப்பு படிக்கும்போது அந்த உணர்வில் ஒரு தீவிரம். “எப்படியாவது நடிக்கணும்”

“எங்கள் ஊரில் ஆறாவது வரை படித்தேன். அதற்குப் பிறகு நான்கு கி.மீ. தூரம் போய் வெள்ளலூருக்குப் போக வேண்டும். அதற்குப் போகிற வழியில் இருக்கும் புஞ்சைக்காட்டுக் காட்சிகள் மனதில் பதிந்திருந்தன.

ஏழாவது படிக்கும்போது பள்ளியில் நாடகத்தில் நடிக்கப் பெயரைக் கொடுத்தேன். ஆனால் ஆசிரியர் எதனாலோ என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை.

சிவாஜியின் நடிப்பைப் பிரதிபலித்துப் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பெண்களிடம் நடித்துக் காண்பிப்பேன். எல்லோரும் சிரிப்பார்கள். கிராமியத் தனத்துடன் பாராட்டுவார்கள்.

எட்டாவது வகுப்பு நான் படிக்கும்போதே அப்பா சென்னையிலுள்ள தியேட்டர்களில் ஆபரேட்டராக வந்துவிட்டார். பத்தாவது வகுப்பு முடித்தப் பிறகு எங்கள் ஊரின் இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து ‘அன்பின் வெற்றி’ என்கிற நாடகத்தைப் போட்டோம்.

அதில் நான் இரண்டாவது ஹீரோ. எங்களுடைய ஆசிரியர் முதல் ஹீரோ. அதில் ஓரங்க நாடகமாக மராட்டிய வீரன் சிவாஜியின் வசனம் “அதோ புரந்தர் – ஓடுவோர் ஆட்டமும், பாடுவோர் பாட்டமும்” என்று நீண்ட வசனத்தைப் பேச மனப்பாடம் பண்ணி வைத்திருந்தேன்.

ரிகர்ஸலும் முடிந்துவிட்டது. கடைசி ரிகர்ஸலுக்கு நாடக நடிகைகளை அழைத்து வந்தோம். என்னுடன் ஹீரோயினாக நடிக்கிற பெண்ணுக்கு முகமே சரியில்லை. பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது. நடிக்க மறுத்துவிட்டேன். பிறகு பலரும் என்னைச் சமாதானப்படுத்தினார்கள்.

வேஷம் போட்டுவந்து மேடையில் பாடி நடித்து விட்டுத் தெருவில் நடந்தால் ‘நல்லா நடிச்சே’ என்று ராஜ வரவேற்பு. எனக்குள்ளிருந்த கனவைக் கிளறிவிட்டன இந்தப் பாராட்டுகள்.

தூரத்திலிருக்கும் தியேட்டர்களில் புதுப்படம் வந்தால் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் போய் வருவோம்.

டூரிங் டாக்கீஸில் படம் பார்ப்பது நல்ல அனுபவம். சைக்கிளை அழுத்தி மிதித்துப் போகும் போதே தியேட்டரில் போடும் ரிக்கார்டு பாட்டு காதில் விழும்.

கடைசியில் ‘மருதமலை மாமணியே… முருகய்யா…” பாட்டு போட்டால் படம் போடப் போகிறார்கள் என்று அர்த்தம்.

வேர்த்து விறுவிறுத்து தரை டிக்கெட் வாங்கி மணலைக் குவித்து உட்கார்ந்து படத்தை அனுபவித்துப் பார்த்ததை மறக்க முடியாது.

படம் முடிந்து ஆபரேட்டர் சைக்கிளுடன் கிளம்பும்போது, அந்த மணல் நிரம்பிய இடம் பொட்டலக் காகிதங்களுடன், லேசான மூத்திர வாசனையுடன் கிடக்கும்.

பக்கத்துக் கடையில் மசாலாக் குழம்புடன் பரோட்டாவை ஒரு கொத்து கொத்திக் கொடுப்பார்கள். அதையெல்லாம் அனுபவித்த ரசனைதான் சினிமாவை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது.

சென்னைக்குப் போய்ப் படிக்கப் போகிறேன் என்று அனத்தி அடம்பிடித்துக் கிளம்பி வந்து விட்டேன். காரணம், சினிமா ஆசை. வந்ததும் திருவல்லிக்கேணியில் இருக்கிற ‘ஹிண்டு’ பள்ளியில் சேர்த்துவிட்டார் எங்க மாமா.

அங்கே நுழைந்தால் பேசுவதெல்லாம் ஒரே ஆங்கிலம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஒதுங்கி போய்க் கிராமத்தானாக வேடிக்கைப் பார்க்கிற மனநிலையில் ‘மந்திரிச்சு விட்ட ஆடு’ மாதிரி இருந்தேன்.

மனதுக்குள் ஒரு பயம். மதியம் சாப்பிட்டுவிட்டு டிபன் பாக்ஸைக் கழுவினால் கூட அதை வினோதமாகப் பார்த்தார்கள். சிரித்தார்கள். கொஞ்சமும் ஒட்டாமல் திரும்பவும் மேலூருக்கு ஓடிப்போய் ‘ப்ளஸ்டூ’ படித்தேன். அங்கே பெண் வேஷம் போட்டு ஒரு நாடகம் போட்டேன்.

கிராமத்திலிருக்கும் மனிதர்களை விலகிப் பார்க்க முடியவில்லை. அவர்களது வாழ்க்கை, அவர்களது பேச்சு, அவர்களிடமிருந்த கொச்சையானதொரு அன்பு எல்லாமே பிடித்திருந்தது.

எங்கள் வீட்டுக்கு முன்னாலே முப்பது குயவர்களின் குடும்பங்கள் தங்கியிருந்தன. அவர்களது சத்தம் என் மனதுக்குள் ஊறியிருந்தது.

குடும்பத்தில் அதற்குள் நிறையப் பிரச்சினைகள். எனக்குப் பின்னால் இரண்டு தங்கைகள். அதனால் குடும்பப் பொறுப்பிருந்தது. ஒரு நல்ல நிகழ்ச்சிக்குப் போனால் கூட அதற்கேற்ற மாதிரி நல்ல உடை அப்போது கிடையாது.

அதனால் கனவுகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு மதுரை புதூரில் ஐ.டி.ஐ. படித்தேன். இயந்திரங்களுடன் ஒரு உறவு ஏற்பட்ட நிலையிலும் கூட படைப்பிற்கான மனம் விடவில்லை.

அங்கு ஆயுத பூஜை சமயத்தில் ஒரு சவாலாகி, முப்பது அடி உயரத்திலிருந்து குதித்தேன். கீழே சிமெண்டுத் தரை முழங்காலிலிருந்து இடுப்பு வரைப் பயங்கர வலி. பிறகு இரண்டு வருஷங்களில் படிப்பை முடித்தேன்.

சென்னைக்குத் திரும்பவும் வந்தேன். சிம்ஸன் கம்பெனியில் ‘அப்ரெண்டீஸாக’ வேலை பார்த்தேன். போய் வரும்போது அண்ணாசாலையில் ரஜினி, கமலின் கட் அவுட்கள் பிரம்மாண்டமாக நிற்கும்.

நிமிர்ந்து பார்த்தபடி போவேன். இத்தனைக்கும் உடம்பு கன்னமெல்லாம் ஒட்டிப் போயிருந்தேன். இருந்தும் நடிகனாகும் ஆசை குறையவில்லை. அதற்கான வேகமும், துடிப்புமிருந்தது.

அதற்கு நான் பொருத்தமானவனா? என்கிற சுயவிமர்சனம் அப்போது எனக்கில்லை. என்னிடமிருக்கும் தகுதிக்கு நான் என்னவாக முடியும் என்கிற தெளிவில்லை.

இதற்கிடையில் பல சினிமாக் கம்பெனிகளைத் தேடிப் போனேன். உதவி இயக்குநர்களை, சில நடிகர்களைப் பார்த்தேன். ஒரே நிராகரிப்பு. இரண்டு வருஷம் அப்ரெண்டீஸ் முடித்து சின்னச் சின்னக் கம்பெனிகளில் வேலைப் பார்த்தேன். ஏதோ வருமானம் வந்து கொண்டிருந்தது.

அப்போது தேவர் பிலிம்ஸில் வேலைப் பார்த்த கதிரேசன் என்பவரின் வீட்டுக்கு அருகில் குடியிருந்தேன். அவருடன் பழக்கமானது. ‘நாலும் தெரிந்தவன்’ என்ற படம். அதில் கவுண்டமணி ஹீரோ. அதில் எனக்குக் கிடைத்தது போஸ்ட்மேன் வேஷம்.

ஏதோ பயத்தில் என்னால் அந்த வேஷத்தைக் கூடச் செய்ய முடியவில்லை. அதனால் இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டார்கள். எனக்கு ஒரு பயம் வர ஆரம்பித்தது. என்னுடைய உழைப்பை வீணடிக்கிறனோ என்று கூடத் தோன்றிவிட்டது.

இருந்தும் சினிமாவை விட மனசில்லை. ‘நடிப்பைத் தவிர வேறு எதில் ஈடுபட முடியும்? மாறி மாறி ஒரே போராட்டம். சினிமாவில் வேறு எதில் புகழ்பெற முடியும்? எதற்கு நமக்கு இவ்வளவு ஆசைகள்?

இதற்கிடையில் இரண்டுப் படங்களுக்கு புரொடக்ஷன் மேனஜராக வேலைப் பார்த்ததில் டைரக்டரின் ஆளுமை புரிந்தது. அதை ஏன் நம்மால் செய்ய முடியாது என்கிற கேள்வி எழுந்தது.

அசிஸ்டெண்ட் டைரக்டராகச் சேர இரண்டு வருஷங்கள் அலைந்தும் சேர முடியவில்லை. பொருளாதாரக் கஷ்டம் வேறு. ஜவுளிக் கடையில், ஹோட்டலில், ஃப்ளோரிங் கம்பெனியில் என்று பதினொரு விதமான வேலைகள் பார்த்தேன்.

போராட முடியுமா என்று மனம் தளர்ச்சியடைந்திருந்தது. எப்படி என்னை வெளிப்படுத்துவது என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

பச்சையப்பா கல்லூரியில் உள்ள நண்பர்கள் பொன்வண்ணன் உட்படச் சிலர் சேர்ந்து படம் எடுக்கலாமென்று முடிவு பண்ணினோம். தலைப்பு ‘போர்க்கொடி’. எல்லோரும் புதுமுகங்கள்.

நான் வசனம் எழுதுவதாக முடிவு. கையில் பெரிய அளவில் பணமில்லாமலே ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது மாதிரி முயற்சிகளில் இறங்கினோம்.

நூறு ரூபாயோடு யாராவது வந்தால் அன்றைக்குத் திருவிழாவாக உணர்கிற உப்புமாக் கம்பெனியாகத்தான் அது இருந்தது.

இப்படியே ஒரு வருஷம் ஓடியது வாழ்க்கை. இதற்கு மத்தியில் எங்க அத்தை பொண்ணையே காதலித்துக் கல்யாணமும் பண்ணிக் கொண்டேன்.

‘புது வசந்தம்’ படம் வந்த நேரம் அது. அதே மாதிரியே முன்பு ஒரு கதை தயார் பண்ணி வைத்திருந்தேன். நண்பர்கள் வந்து சொன்னார்கள். அதே மாதிரியான கருத்து விக்கிரமனுக்கும் தோன்றியிருக்கிறது.

அதாவது எனக்குள் அதே மாதிரி இருந்த கருத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று ‘பாஸிடிவ்’வாக எடுத்துக் கொண்டேன்.

திரும்பவும் போராட வேண்டும் என்கிற உணர்வு. அப்போது ‘புரியாத புதிர்’ படத்தை டைரக்டர் கே. எஸ். ரவிக்குமார் எடுத்துக் கொண்டிருந்தபோது போய்ப் பார்த்தேன்.

புரொடக்ஷன் மேனேஜராகப் பணியாற்றச் சொன்னார். அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை கேட்டேன். கூடவே நான்கு கதைகள் சொன்னேன். என்னை அசிஸ்டெண்ட் டைரக்டராகச் சேர்த்துக் கொண்டார். கோடம்பாக்கத்திற்குள் நுழைய எனக்கு ஒரு வழி திறந்தது.

ஒரு காட்சியை எப்படி வடிவமைப்பது என்பதை மெல்லக் கற்றுக் கொண்டேன்.

புத்தகங்களின் மூலமாக இல்லாமல் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மூலமாகவே கற்றுக் கொண்டேன்.

நான் சந்தித்த கிராமத்து, நகரத்து மனிதர்கள், நண்பர்கள், டீக்கடைக்காரர்கள், டிரைவர்கள், இப்படிப்பட்ட மனிதர்கள்தான் எனக்கு கதாப்பாத்திரங்களை உருவாக்கத் தூண்டுதலாக இருந்தார்கள்.

புரியாத புதிரிலிருந்து நாட்டாமை படம் வரை கே.எஸ். ரவிக்குமாரிடம் கற்றுக் கொண்டேன். எல்லா வேலைகளையும் செய்வோம்.

‘நாட்டாமை’ படத்திற்கு ஒரு சமயம் ஆட்கள் சரிவர இல்லாததால் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் ஐந்து பேர் சேர்ந்து ஒரு பாடலுக்கு கோரஸ் பாடினோம்.

அப்போது வருமானம் குறைவு வாடகைக் கொடுத்து ஏதோ சாப்பிடலாம். இதற்கிடையில் இரண்டுக் குழந்தைகள் பிறந்துவிட்டன்.

எப்போது தனியாகப் படத்தை இயக்க முடியும்? மனதில் பல கதைகள் இருந்தன. ‘பாரதி கண்ணம்மா’ கதையுடன் நண்பர் தேனப்பன் மூலமாக தயாரிப்பாளர் ஹென்றியைச் சந்தித்தேன்.

கிளைமாக்ஸை மட்டும் சொன்னேன். அவருக்குப் படம் பிடித்துவிட்டது. எடுக்க ஆரம்பித்தேன். படம் முடிந்து ரிலீஸ் ஆனது. மஹாலட்சுமி தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்தபோது ‘நெகட்டிவ்’ ஆக இருந்த கனவு பாஸிட்டிவ் ஆனது.

சமுதாயச் சிந்தனையுள்ள படத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் அளித்த தூண்டுதலில் அடுத்து ‘பொற்காலம்’ போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுக்க முடிந்தது. தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி என்று கொடுத்தேன்.

டைரக்டர் என்கிற பொறுப்பின் வலிமைப் புரிந்தது. நடிகன் என்பவர் இரண்டாம் பட்சம்தான் என்பது புரிந்தது. தமிழக மக்களின் காசை வாங்கிக் கொண்டு நான் படம் பண்ணுகிறேன்.

அவர்களுடைய மனங்களைக் கெடுக்கக் கூடிய படங்களைக் கொடுக்கக்கூடாது என்கிற உணர்விருந்தது.

பொழுதுபோக்கு என்ற வந்தாலும் அதில் உருப்படியானதொரு சமூகம் சார்ந்த செய்தியைக் கொடுக்க வேண்டும் என்கிற வேகத்துடனேயே இதுவரை செயல்பட்டிருக்கிறேன்.

இதற்கிடையில் எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த நடிகனைத் தட்டி எழுப்பி உயிர் கொடுத்தவர் தங்கர்பச்சான். சிவதாணு என்கிற கதாபாத்திரத்தில வாழ்ந்து விட்டு வந்தேன். இனிக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்தான் நடிகனாகத் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யும்.

இந்த நிலைக்கு வரத் துடித்து எவ்வளவோ நொந்துபோன நேரங்களில் எல்லாம் என்னைத் திரும்பத் திரும்பத் தூண்டிவிட்டது எந்த ஆன்மிகமுமில்லை. எனக்குள்ளிருந்த ஒரு வெறிதான்.

தன்னம்பிக்கையைக் குலைக்கிற விதத்தில் அதிருப்திப்படுத்தியவர்கள் இருந்தபோதுகூட, என் மீது ஏதோ ஒரு நம்பிக்கை.

அந்தச் சமயத்தில் என் ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர் கூட “இரும்பு சம்பந்தமான தொழிலில்தான் நீ இருப்பாய்” என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

இந்த விதமாக நிலைகுலையச்செய்தவர்கள் பலர். நம்பிக்கையூட்டியவர்கள் வெகுசிலர்தான்.

அதையெல்லாம்விட, மேலிருந்து தடித்த கயிற்றைப் போட்டு ‘மேலே வா’ என்று சொன்ன மாதிரி என்னை உரமேற்றியது.

என்னுடைய தன்னம்பிக்கைதான். எனக்கு முன்னே கஷ்டப்பட்டவர்களின் அனுபவங்கள் அந்த உரத்தை எனக்குக் கொடுத்தன.

நடிகன் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு லாரியில் வந்தேன். வந்ததும் அது முடியவில்லை. அதனால் தளர்ந்துவிடவில்லை. விடாமுயற்சியுடன் அதே சினிமாவில் இன்னொரு பாதையில் போனேன்.

அதிலும் பெயர்வாங்கினேன். அந்தப் பெயருடன் நடித்தும் விட்டேன். இயக்குநராகவும், நடிகனாகவும் வெற்றியடைந்த சந்தோஷம் மனதில் உறைந்திருக்கிறது. கிராமத்தான் என்கிற முகவரியைத் தவிர வேறு என்ன முகவரி எனக்கிருந்தது?

கனவை நிஜமாக்கும்வரை அதற்கிருக்கிற மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை. நிறைவேறாவிட்டால் அது வெறும் கனவு மட்டுமே.

கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால், எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்”.

– மணாவின் ‘கனவின் பாதை’ நூலிலிருந்து ஒரு கட்டுரை.

#இயக்குநர்_சேரன் #Director_Cheran #நேர்காணல் #Interview #மேலூர் #Melur #டூரிங்_டாக்கீஸ் #Touring_talkies #சினிமா #Cinema #நாலும்_தெரிந்தவன் #Nalum_Therinthavan #அசிஸ்டெண்ட்_டைரக்டர் #Assistant_director #பச்சையப்பா_கல்லூரி #Pachaiyappa_College #பொன்வண்ணன் #Ponvannan #போர்க்கொடி #Porkodi #புரியாத_புதிர் #Puriyatha_puthir #கேஎஸ்_ரவிக்குமார் #KS_Ravikumar #நாட்டாமை #Nattamai #பாரதி_கண்ணம்மா #Bharathi_kannama #தேனப்பன் #Denappan #தயாரிப்பாளர்_ஹென்றி #Producer_Henry #பொற்காலம் #Porkalam #தேசிய_கீதம் #Desiya_geetham #வெற்றிக்_கொடி_கட்டு #Vetri_Kodi_Kattu #பாண்டவர்_பூமி #Pandavar_Bhoomi #தங்கர்பச்சான் #ThankarBachan

Comments (0)
Add Comment