தனிமனித ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செல்போன் பயன்பாடு!?

உலகின் மிகப்பெரிய தொடர் வண்டித்துறையாக உள்ளது இந்திய ரயில்வே துறை. இந்தியா முழுமைக்கும் அனைவரையும் அனைத்து இடத்திற்கும் பயணிக்கச் செய்வதில் ரயில் சேவைக்கு மிகப்பெரிய பங்குண்டு.

ரயில் சேவை 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின்போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டது. இந்திய ரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.

அறிமுகம் இல்லாத எத்தனையோ முகங்களை அறிமுகம் செய்கிறது இந்த ரயில் பயணம். ஆரம்பத்தில் ரயிலில் செல்வது என்பது பலருக்கும்  ஆசையாக இருக்கும்.

நெடுந்தூரப் பயணம் அருகில் இருப்பவர்களிடம் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, மகிழ்ச்சியாகப் பேசிச் சிரித்து, இருப்பதை உண்டு, பயணத்திற்கிடையில் ஒரு அழகிய நட்பை உருவாக்கிவிடும் இந்த ரயில் பயணம்.

அந்த காலத்து மக்களுக்கிடையே ஒரு புரிந்துர்ணவு, பகிர்ந்துகொள்ளும் தன்மை, அனைவரின் மீதும் அன்பு செலுத்துவது, புதிய நட்புகளை உருவாக்கிக்கொள்வதில்  மக்கள் அதிகம்  ஈடுபாடு கொண்டிருந்தனார்.

ஆனால், தற்போது நவீன நாகரீக வளர்ச்சியால் மக்களுக்கிடையே இருந்து வந்த பரஸ்பர அன்பு என்பது மறைந்து போய்விட்டது.

சமீபத்தில் ஒருநாள் மாலை நேரத்தில், நடன வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக இரயில் நிலையத்தில் காத்திருந்தேன். பத்து நிமிடத்துக்கு பிறகு இரயில் வந்ததும்  பெண்களுக்காக உள்ள பெட்டியில் ஏறினேன்.

”நூலகத்தில் தான் அமைதி காக்கவும்” என்று எழுதியிருக்கும். ஆனால், அன்று அந்த ரயில் நூலகம் போல் இருந்தது. ஒரு நிமிடம் நான் பயந்து போனேன். சுற்றி ஒரு சிறிய பார்வை பார்த்தேன். அப்போது தான் புரிந்தது அந்த அமைதியின் காரணம் என்ன என்று.

தொலைபேசி – இணையதளம் மீது மக்கள் கொண்டுள்ள காதல். இணையதள விளையாட்டுக்கள், வாட்சப், இன்ஸ்டகிராம் மீது ஆழ்ந்த ஈர்ப்புகள் தான் இந்த அமைதிக்கு  காரணம் என்று.

எல்லோர் கைகளிலும் தொலைபேசி. இதை என்னவென்று சொல்வது? அது மட்டுமல்ல எல்லோர் காதுகளிலும் ”இயர்போன்”. இதைப் பார்த்து கோவப்படுவதா, சிரிப்பதா என்றுகூட தெரியவில்லை.

சக மனிதனிதர்களுடன் தொடர்பாடுதல் என்பது முற்றிலும் மறைந்து போய்விட்டது. அருகில் இருப்பவர் யார் என்பதுகூட தெரிவதே இல்லை. கீழே குனிந்த வண்ணம் இருக்கிறது அனைவரின் தலைகளும்.

அன்று ஒரு பெண் தொலைபேசியை பார்த்துகொண்டே இறங்கி, ரயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார். நல்ல நேரம், அந்தப் பெண்ணுக்குப் பெரிதாகக் காயம் ஒன்றும் ஏற்படவில்லை.

இந்த ஒரு விபத்து அந்த ரயிலில் பயணிக்கும் பலருக்குத் தெரியவில்லை. காரணம் தொலைபேசியில் மூழ்கியிருந்தமை.

பெரிய கவலைக்குரிய விடயம் சிறுவர்கள் மற்றும் பள்ளி செல்லும் சிறிய வகுப்பு மாணவர்களிடம் தொலைபேசி இருப்பதுதான். அந்த மாணவர்கள் முகத்தில் சந்தோசம் தொலைந்து போய்விட்டது. வாழ்க்கை என்பது  உள்ளங்கையில் அடக்கப்பட்டுவிட்டது.

 ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா …  

என்று  சுப்பிரமணிய பாரதியார்  அவர்களின் பாடல் வரிகள் குழந்தைகள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது.

ஆனால், இப்போது உள்ள குழந்தைகள் இருக்கும் இடத்தை விட்டு நகர்வதே இல்லை. எல்லா விளையாட்டுக்களையும் இணையதளம் மூலமே  விளையாடிவிடுகிறார்கள்.

மாணவர்கள் பப்ஜி கேம் விளையாடுகின்றனர். அண்மைக் காலங்களில் இந்த விளையாட்டால் ஏற்படும் பதிப்புகள் பற்றி இதே இணையதளங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம் . அதை ஏன், பெற்றோர்களும் மாணவச் சமுதாயமும் உணர்வதே இல்லை.

இவ்வாறன விளையாட்டுகளில் தான் இவர்களின் சந்தோசம் இருக்கிறது என்று அவர்கள் நினைகிறார்கள்.

அண்மையில் ஐ.நா வெளியிட்டுள்ள உலக மகிழ்ச்சி அறிக்கையில், இந்தியா கடந்த ஆண்டு போலவே 126-வது இடத்தில் தான் உள்ளது.

மக்களுடைய மனநிலை மற்றும் செயல்பாடுகள் இதுபோல முறையற்று தொடர்ந்து காணப்படுமானால் எதிர்காலத்தில் அறிக்கை பட்டியலில்  பெயர்கூட வருமா? என்பதே  கேள்விக்குறியாகத்  தான் இருக்கும்.

ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியின் கதவிலும், ‘வாசலுக்கு அருகில் நின்றுகொண்டு வருவது ரயில்வே சட்டம் 1989, 156-வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம்’ என்று எழுதியிருக்கிறது.

ஆனால், அதை யாருமே கடைபிடிப்பதில்லை. முதியவர்கள் கதவின் அருகிலியே படுத்துக்கொண்டு வருகிறார்கள். இது மிகப்பெரிய தவறான செயல் என்பதை உணர்வதே இல்லை.

இது போலவே மாணவர்களும் ஆண்களும் கொஞ்சம்கூட பயம் என்பதே இல்லாமல் கதவின் நுனிப் பகுதிகளில் நின்று அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள். செல்போனில் படம் பிடிப்பது, ரீல் செய்வது போன்ற செயல்பாடுகளும் இடம் பெறுகிறது.

இது ஒரு புறம் இருக்க, பெண்கள் ஆண்களை விடவும் ஒரு படி மேலே சென்று, ரீல்ஸ் மீது உள்ள மோகத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் கதவின் அருகில் இருந்து நடனமாடுகிறார்கள். படங்களில் வரும் காட்சிகளைப் போல தாமும் செய்ய விரும்புகிறார்கள். இதனால் எத்தனையோ விபத்துக்கள் ஏற்படுகிறது.

இதுபோன்ற விபத்துகளுக்கு முழு காரணமும் தனி ஒரு மனிதனின் முறையற்ற செயல் மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசின் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் இதுபோன்ற விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தொலைபேசியின் பயன்பாட்டைக் குறைத்து வாழப் பழகினால் ஆரோக்கியமான சந்தோசமான வாழ்க்கையை வாழ முடியும்.  இதை எல்லோரும் கைகொள்ளப் பழகுவோம்.

தனுஷா

Comments (0)
Add Comment