‘பரோஸ்’ – பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!

மோகன்லால். இந்தியாவின் மிகச்சிறந்த நடிப்பாளுமைகளில் ஒருவர். அதனை அங்குலம் அங்குலமாக வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டுவதில் இயக்குநர்களிடையே ஒரு போட்டியே நடந்து வருகிறது கடந்த 44 ஆண்டுகளாக.

அப்படிப்பட்ட ஒரு நடிகர், இயக்குநர் நாற்காலியில் அமர்வது எப்பேர்ப்பட்ட விஷயம். அதனைச் சாதித்திருக்கிறது ‘பரோஸ்’.

இது ஒரு 3டி நுட்பத்தில் தயாரான ஒரு படம். ‘அப்படியானால் இது குழந்தைகளுக்கான படமா’ என்ற கேள்வி எழலாம். அதற்குத் திரையில் என்ன பதில் தந்திருக்கிறார் மோகன்லால்?

ஒரு குட்டிக் கதை!

கோவாவில் போர்ச்சுக்கீசிய மன்னன் கிரிஸ்டோவோடா காமாவின் அடிமையாக இருந்தவர் பரோஸ்.

இளவரசி இஸபெல்லாவின் உற்ற தோழனாக இருந்தவர்.

ஒருநாள் எதிரி நாட்டுப் படை சுற்றி வளைக்கும்போது, தான் திரட்டிய செல்வம் இருக்கும் கஜானா அறையை நம்பகமான ஒருவரின் கையில் கொடுக்கத் திட்டமிடுகிறார்.

அதற்காக, பரோஸை தேர்ந்தெடுக்கிறார். ஆனால், அந்தக் காவல் பணிக்காக அவர் தனது உயிரை இழந்து பூதமாக நேர்கிறது.

ஆண்டுகள் கடக்கின்றன. நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் அதே ராஜ வம்சத்து வாரிசான இசாவைச் சந்திக்க நேர்கிறது. அவரால் மட்டுமே பரோஸின் அடிமைச் சங்கிலியை அகற்ற முடியும். அதற்குத் தன் வசமிருக்கும் பொக்கிஷங்களை அவர் இசாவிடம் கொடுக்க வேண்டும்.

பரோஸ் அதனைச் செய்தாரா? அதற்கு யாராவது இடையூறாக இருந்தார்களா? பூதமான பரோஸை கண்டு இசா பயப்படவில்லையா? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.

ஒரு குட்டிக் கதை. அதனைச் சுற்றிச் சில சம்பவங்கள். நானூறு ஆண்டு காலக் காத்திருத்தல். மன்னர் ஆட்சியையும் அடிமைத்தனத்தையும் சிலாகிப்பதில் இருந்து விலகி சமத்துவத்தை வலியுறுத்தும் தற்கால சமூக அரசியல் நிலைமை. இப்படிப் பலவற்றைப் பேசுகிறது ‘பரோஸ்’.

அதனை 3டி நுட்பத்தில் ரசிகர்கள் பிரமிக்கும் வகையில் சொல்ல, கோவா பின்னணி சேர்க்கப்பட்டிருக்கிறது. சரி, அது நமக்கு நிறைவைத் தருகிறதா?

படம் எப்பூடி..?!

சமீப ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அனிமேஷன், அட்வெஞ்சர், பேண்டஸி வகைமைகளில் நிறைய ‘3டி’ படங்கள் வந்திருக்கின்றன. ‘அவதார்’ போன்று ஒரு சில படங்களே அவற்றில் ஈர்ப்பை அதிகப்படுத்தியிருக்கின்றன.

அந்த வரிசையில் தாராளமாக ‘பரோஸ்’ஸை சேர்க்கலாம். காரணம், இதில் 3டி நுட்பத்திற்கு இயக்குநர் மோகன்லால் தந்திருக்கும் முக்கியத்துவம்.

‘நாம பார்க்குறது 3டி படம் தானா’ என்று கிள்ளிக்கொள்ள அனுமதிக்காத வகையில், ஐந்து பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை நோக்கிப் பாய்கிறது ஏதோ ஒரு பிரமிப்பு.

அதனைக் கனகச்சிதமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறது படக்குழு.

அந்தப் பணியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் முதலிடம் பெறுகிறார். சில காட்சிகளில் ‘டீட்டெய்லிங்’ பிரமிப்பின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தோஷ் ராமன், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் பிரைன்லி கேட்மேன், படத்தொகுப்பாளர் பி.அஜித்குமார், பின்னணி இசை அமைத்த மார்க் கிலியன், பாடல்களுக்கு இசையமைத்தவர்களில் ஒருவரான லிடியன் நாதஸ்வரம் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்திருக்கின்றனர்.

நடிப்பைப் பொறுத்தவரை பரோஸ் ஆக வரும் மோகன்லாலும், இசா/இசபெல்லா ஆக வரும் மாயா ராவ் வெஸ்ட்டும் மனம் கவர்கின்றனர்.

அவர்களைச் சுற்றியே நிறையக் காட்சிகள் பின்னப்பட்டிருக்கின்றன. அதனால் குரு சோமசுந்தரம், துகின் மேனன், கீர்த்தனா குமார் என்று சுமார் ஒன்றரை டஜன் நடிப்புக்கலைஞர்கள் வெறுமனே வந்து போயிருக்கின்றனர். அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

இந்தக் கதை ஜிஜோ புன்னூஸ் இதே பெயரில் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டது.

கதையில் முதன்மைப் பாத்திரம் பதின்ம வயது சிறுமியாக இருந்தபோதும், இதில் பரோஸை அரை நிர்வாணமாகக் காட்டுகிற ஷாட் ஒன்று உண்டு. அது போன்ற தேவையில்லாத விஷயங்கள், இதனை முழுமையான குழந்தைகள் படம் என்று சொல்லவிடாமல் தடுக்கின்றன.

உண்மையைச் சொன்னால், இது பெரியோர்களும் பார்த்து ரசிக்கத் தகுந்த ஒரு 3டி படம்.

அதற்காக, நிறையவே திட்டமிட்டு திரையில் அவற்றைச் செயல்படுத்தியிருக்கிறது மோகன்லால் குழு.

’பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!’ என்று கேட்காத குறையாக, அதற்கேற்ற உழைப்பைக் கொட்டியிருக்கிறது.

அந்த உழைப்பின் மகத்துவம் அறிய வேண்டுமானால், ‘பரோஸ்’ பார்க்கலாம். அதற்காக, கொஞ்சம் அதீதமாக பொறுமையைக் கைக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால், 2டியில் ஓடிடியில் வெளியாகிறபோது அந்தப் பிரமிப்பு வடிந்து போயிருக்கும். அதற்காகவாவது ஒருமுறை தியேட்டரில் இதனைப் பார்க்கலாம்..

‘அந்தப் பொறுமை எங்ககிட்ட கிடையாதே’ என்பவர்களுக்கு இப்படம் நிச்சயமாகப் பிடிக்காது. அவர்களைத் தவிர மற்றவர்கள் 3டி நுட்பத்திற்காக இதனைப் பார்க்கலாம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#பரோஸ்_3டி #Barroz_3D #விமர்சனம் #Review #மோகன்லால் #Mohanlal #ஒளிப்பதிவாளர்_சந்தோஷ்சிவன் #Cameraman_Santhoshsivan #சந்தோஷ்_ராமன் #Santhosh_Raman #பிரைன்லி_கேட்மேன் #Brainly_Gadman #படத்தொகுப்பாளர்_பி_அஜித்குமார் #Editor_P_Ajithkumar #மார்க்_கிலியன் #Mark_Killian #குரு_சோமசுந்தரம் #Guru_Somasundaram #துகின்_மேனன் #Tuhin_meon #கீர்த்தனா_குமார் #Keerthana_kumar

Comments (0)
Add Comment