‘மேக்ஸ்’ – ஆக்‌ஷன் பிரியர்களுக்கு மட்டும்!

‘கைதி மாதிரி ஒரு ஆக்‌ஷன் படம் வேணும்’, ‘அப்படியா, சரி. அப்படின்னா கைதியில வர்ற ஒரு பிளாக்கை மட்டும் வச்சு புதுசா ஒரு கதை பண்ணிடலாம்’.

கன்னடத்தில் ‘மேக்ஸ்’ படம் உருவாவதற்கு முன்னர் இப்படியொரு உரையாடல் நடந்ததா என்று தெரியவில்லை. அதற்கான சாத்தியம் அதிகம் என்பது போல அமைந்திருக்கிறது அப்படத்தின் உள்ளடக்கம்.

அதேநேரத்தில், நாயகனான நடித்த கிச்சா சுதீபுக்கு ‘ஹீரோயிச மைலேஜ்’ ஏற்றும் வகையில் ஆங்காங்கே பில்டப் ஷாட்கள், டயலாக்குகளை அள்ளி தெளித்து ‘ஒத்த சிங்கமாக’ அவரைக் களத்தில் இறக்கியிருக்கிறது ‘மேக்ஸ்’.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வந்திருக்கிறது.

எப்படியிருக்கிறது ‘மேக்ஸ்’ தரும் திரையனுபவம்?

ஓர் இரவு..!

‘ஒரு ராத்திரியில நடக்கற கதை இது’ என்று ‘மேக்ஸ்’ கதையைத் திரையில் சொல்லத் தொடங்குகிறார் புதுமுக இயக்குநர் விஜய் கார்த்திகேயா.

‘ஒரு போலீஸ் ஸ்டேஷன். அது பரபரப்பா இருக்குது. காரணம், அங்க இருக்குற ஏட்டு ராவணன் (இளவரசு) அடுத்த நாள் ரிட்டயர்டு ஆகுறார். அன்னிக்குதான் இன்ஸ்பெக்டரா அர்ஜுன் (சுதீப்) ஜாயின் பண்றார்.

அதனால, முந்தின நாள் நைட் அர்ஜுன் ரயில்வே ஸ்டேஷன் வர்றதா தகவல். அவரை பிக்கப் பண்ண ஒரு கான்ஸ்டபிள் போறார்.

அவங்க ரெண்டு பேரும் திரும்புறப்போ, ஒரு போலீஸ் செக்போஸ்ட்ல ஒரு தகராறு.

ரெண்டு பேரு லேடி கான்ஸ்டபிளை அவமானப்படுத்துறாங்க.

அவங்களை அந்தப் போலீஸ்காரங்களால அடிக்க முடியலை. ஆனா, நம்ம ஹீரோ அடிக்குறார். ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போறார்.

அப்போதான், அவங்க ரெண்டு பேரும் செல்வாக்குள்ள ரெண்டு மினிஸ்டரோட பிள்ளைங்கன்னு தெரியுது. அவங்களோட பேக்ரவுண்ட காட்டுறதுக்கு, ஹீரோ இண்ட்ரோக்கு முன்னாலயே சில சீன்ஸ் வச்சிருக்கோம்.

அப்போ, அந்த ரெண்டு மினிஸ்டர்களும் முதலமைச்சரைக் காலி பண்றதுக்கு தங்களுக்கு கீழ்ப்படிகிற எம்.எல்.ஏக்களை எல்லாம் ஒரு இடத்துல வைக்க ஏற்பாடு பண்றாங்க.

அங்க நடக்குற பார்ட்டியில இருந்துதான், அந்த ரெண்டு பேரும் கிளம்பி வந்து போலீஸ்கிட்ட மாட்டிக்குறாங்க.

மினிஸ்டர்ஸ் மகன்கள்னு தெரிஞ்சாலும், ‘எப்ஐஆர் ரெடி பண்ணுங்க’ன்னு சொல்றார் அர்ஜுன். அதுக்கு எஸ் ஐ ஒருத்தர் (உக்ரம் மஞ்சு) மறுத்து, ‘என்னால முடியாது’ங்கறார்.

பதிலுக்கு, ‘உங்க எல்லோர் மேலயும் ஆக்‌ஷன் எடுப்பேன்’னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிடுறார் அர்ஜுன்.

அப்புறமென்ன? ‘நீ அர்ஜுனைத்தான் பார்த்த, மேக்ஸை பார்த்ததில்லையே’ன்னு ராவணன் ‘பில்டப்’ கொடுக்குறார். அந்த நேரத்துல அந்த மினிஸ்டர்கள் மகன்கள் கத்திட்டு இருக்காங்க.

ஸ்டேஷன்ல ஒவ்வொருத்தரா வேற வேற டியூட்டிக்கு போறாங்க. அந்த எஸ்ஐயும் பயந்துட்டு அங்கிருந்து நழுவுறார். அப்போ, ராவணனுக்கு ஒரு போன் வருது.

’உங்க மனைவிக்கு உடம்பு சரியில்ல’ன்னு எதிர்முனையில சொல்றாங்க. ஸ்டேஷன்ல தனியா இருக்குறதால, அதைப் பூட்டிக்கிட்டு அவரும் கிளம்புறார். உள்ளே அந்த ரெண்டு இளைஞர்களும் சண்டைப் போடுறாங்க.

சில நிமிஷம் கழிச்சு, எல்லா போலீஸ்காரங்களும் ஒவ்வொருத்தரா திரும்பி வர்றாங்க. ராவணன் சாவிய எங்க வச்சிருக்கார்னு தேடிப் பிடிச்சு திறந்தா, உள்ளே அந்த ரெண்டு பேரும் செத்துக் கிடக்குறாங்க.

அவ்வளவுதான். அத்தனை பேரும் மிரண்டு போறாங்க. அர்ஜுனுக்கு தகவல் சொல்றாங்க. அவரும் வர்றார்.

அதுக்குள்ள, அந்த பார்ட்டி நடக்குற இடத்துல இருந்து ரவுடி கனியோட (சுனில்) ஆட்கள் மினிஸ்டர் மகன்களைத் தேடி வர்றாங்க.

இன்னொரு பக்கம், ஒரு எம்எல்ஏவை இழுத்துட்டு வரப்போன மினிஸ்டர்களோட கையாள் ஒருத்தன் (வம்சி கிருஷ்ணா), ‘பசங்க மேல போலீஸ் கேஸ் போடக்கூடாது’ன்னு கனியை மிரட்டுறார்.

அதேநேரத்துல, கிரைம் எஸ்ஐ ரூபா அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தனக்கு தெரிஞ்ச பைக் ரைடர்களை அழைச்சுகிட்டு போறாங்க.

நாலா பக்கமும் எதிரிகள் சூழ்ந்துட்டாங்க. இனிமே அந்த ரெண்டு பொணத்தையும், அவங்க கண்ணுல மண்ணை தூவிட்டு மறைக்க முடியுமா? அதுக்குள்ள, அந்த போலீஸ்காரங்க பேமிலிய ரவுடிகள் சும்மா விட்டு வச்சிருவாங்களா?

அடுத்து என்ன நடக்கப்போகுது? இதுதான் மீதிக்கதை’ என்று திரையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

‘ஓர் இரவில் நடக்குற ஆக்‌ஷன் கதை இது’ என்று டைட்டிலில் அறிவிக்காத குறையாகப் படம் அமைந்திருக்கிறது. பொழுது விடிகையில் படமும் முடிவடைகிறது.

இந்த ஒரு விஷயமே முழுக்க ‘கைதி’யை நினைவூட்டுவதாக உள்ளது. அது போதாதென்று படத்தின் ஒளிப்பதிவு, டிஐ, ஆக்‌ஷன் கொரியோகிராஃபி போன்றவையும் அதே பாணியில் அமைந்திருக்கிறது.

ஒரு தடவை பார்க்கலாம்!

சுதீப் என்று அறியப்பட்டவரை இப்படம் ‘கிச்சா’ சுதீபா என்று அழைக்கச் சொல்கிறது.

‘பூவை ப்ளவர்னு சொன்னா என்ன, புஷ்பம்னு சொன்னா என்ன’ன்னு நாமும் அதே வழியில் செல்வதில் தவறில்லை.

ஆனால், ‘ஒத்த சிங்கம் வந்துருச்சு’ என்கிற ரேஞ்சில் திரையில் ஓடும் ‘பில்டப்’ அவரது ரசிகர்களால் மட்டுமே ஏற்கக் கூடியது.

இதர காட்சிகளில் அவரது நடிப்பு ‘பக்கா’ ரகம்.

முழுக்க சுதீப் பாத்திரத்தை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதை என்றபோதும், இதர பாத்திரங்களுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதுவே பிற மொழி ரசிகர்கள் இப்படத்தைக் காண வகை செய்திருக்கிறது.

இளவரசு, வரலட்சுமி, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், வம்சி கிருஷ்ணா, சரத் லோகித்சவா, சுனில் என்று தமிழ் பட ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள் இதில் கணிசமாக உள்ளன.

இது போகக் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த சுதா பெலவாடி, சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, அனிருத் பட், உக்ரம் மஞ்சு, விஜய் செந்தூர் இதில் இருக்கின்றனர்.

பிரமோஷ் ஷெட்டி போன்ற இயக்குநர் ஒரு காட்சிக்கு இதில் தலைகாட்டியிருப்பது புருவத்தை உயர்த்த வைக்கிறது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் சிவகுமார், ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா, படத்தொகுப்பாளர் எஸ்.ஆர். கணேஷ் பாபு தொடங்கி ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ் என்று அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் இயக்குனர் விரும்பிய உலகைக் காட்ட உதவியிருக்கின்றன.

அதில் கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இருக்க வேண்டுமென்று விரும்பியிருப்பதால் ‘சினிமாத்தனம்’ யதார்த்தம் வெளிப்படுவதை மட்டுப்படுத்தியிருக்கிறது.

சுதீபா ரசிகர்கள் ‘கூஸ்பம்ஸ்’ ஆகும் வகையில் ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி இசையைத் தெறிக்க விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.

பாடல்கள் திரைக்கதைக்கு ஏற்றாற் போல இருந்தாலும், மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் இல்லை.

முதல் படம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில், பரபரவென்ற ஆக்‌ஷன் கதையைத் திரையில் படர விட்டிருக்கிறார் விஜய் கார்த்திகேயா.

காட்சிகளைக் கனகச்சிதமாக வடிவமைத்து, இறுக்கிக் கட்டினாற் போன்ற திரைக்கதையைக் கட்டமைத்த வகையில் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறார்.

அதேநேரத்தில், இதில் லாஜிக் மீறல்களைப் பட்டியலிடத் தொடங்கினால் அவை வரிசை கட்டி வந்து நிற்கும்.

அவற்றை யோசித்தால், படம் ‘பப்படம்’ ஆகிவிடும்.

ஆனால், தியேட்டருக்கு வந்த ‘ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு’ அந்த அவகாசத்தைத் தராமல் வெற்றிகரமாக ஏமாற்றியிருக்கிறார் விஜய் கார்த்திகேயா.

அந்த வகையில் வெற்றியைச் சுவைத்திருக்கிறார்.

சில படங்கள் காலம் கடந்து ‘கிளாசிக்’ அந்தஸ்தை எட்டும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். நிச்சயமாக, ‘மேக்ஸ்’ படத்தில் அந்த விஷயங்கள் ஏதுமில்லை.

அதனால், ‘ஒருமுறை பார்க்கலாம்’ என்ற உத்தரவாதத்தை தருகிறது இப்படம். அதேநேரத்தில், ‘ஆக்‌ஷன் படம் எனக்கு பிடிக்காதே’ என்பவர்கள் இப்படம் ஓடும் தியேட்டரில் இருந்து எதிர் திசையில் பயணிப்பது நல்லது.

 -உதயசங்கரன் பாடகலிங்கம்

#மேக்ஸ்_விமர்சனம் #Max_Review #கிச்சா_சுதீப் #Kiccha_Sudeep #இயக்குநர்_விஜய்_கார்த்திகேயா #Director_Vijay_karthikeya #இளவரசு #Ilavarasu #உக்ரம்_மஞ்சு #Ugram_manju #சுனில் #Sunil #வரலட்சுமி #Varalakshmi #ரெடின்_கிங்ஸ்லி #Redin_Kingsley #ஆடுகளம்_நரேன் #Aadukalam_naren #வம்சி_கிருஷ்ணா #Vamsi_krishna #சுதா_பெலவாடி #Sudha_belawadi #சம்யுக்தா_ஹொர்னாட் #Samyuktha_hornad #சுக்ருதா_வாக்லே #Sukrutha_wagle #அனிருத்_பட் #Anirudh_butt #விஜய்_செந்தூர் #Vijay_sentoor #பிரமோஷ்_ஷெட்டி #Pramosh_shetty #இசையமைப்பாளர்_அஜனீஷ்_லோக்நாத் #Musicdirector_Ajaneesh_loknath

Comments (0)
Add Comment