ஸ்பூஃப் படங்கள் ஏன் தேவை?!

‘தமிழ்படம் 3-ம் பாகம்’ அடுத்த ஆண்டு உருவாக இருக்கிறது. இந்தத் தகவலை அறிந்ததும் மனம் துள்ளிக் குதித்தது.
காரணம், சமீபகாலமாகப் பல வகைமைகளில் தமிழில் படங்கள் வந்தாலும் முழுக்க ‘ஸ்பூஃப்’ ஆன ஒரு படம் வரவில்லை என்கிற குறையைப் போக்குவதாக இந்த செய்தி அமைந்தது.
அந்தப் படம் குறித்த அறிவிப்பு நடிகர் சிவா, இயக்குனர் சி.எஸ்.அமுதன், தயாரிப்பாளர் சசிகாந்த் போன்றவர்களால் வரவிருக்கும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக நம்மை வந்தடையலாம்.

அதற்குள், ‘ஸ்பூஃப் படங்கள்’ திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் அவசியமா என்பதைக் குறித்து சில விஷயங்களை அறியலாம்.

பகடி.. பகடி..!

‘கபடி.. கபடி..’ என்று விளையாடும்போது என்ன உற்சாகம் அக்களத்தில் கிடைக்குமோ, அதே போன்றதொரு கொப்பளிப்பினைப் படம் பார்க்கும் ரசிகர்களிடையே ஏற்படுத்தவல்லவை ‘பகடி’ திரைப்படங்கள். ஆங்கிலத்தில் இவற்றை spoof, parody திரைப்படங்கள் என்று அழைக்கிறோம்.

ஒரு விஷயத்தை நாம் எப்போது கிண்டலடிப்போம்? அது மிகப்பிரபலமாக இருந்தால் மட்டுமே.

மிமிக்ரி கலையில் பின்பற்றப்படும் இந்த அடிப்படை விதி, ஸ்பூஃப் வகைமை படங்களுக்கும் சாலப் பொருந்தும்.

ஒரு மிமிக்ரி கலைஞர் தனது சித்தப்பாவையோ, மாமாவையோ மேடையில் பிரதிபலித்தால், அவர்களை அறியாத நமக்குச் சிரிப்பே வராது. ஸ்பூஃப் படங்களும் அப்படிப்பட்டவைதான்.

புகழ் பெற்ற ஒரு நடிகரை, காட்சிகளை, திரைக்கதை உத்தியை, திரைப்படத்தை அல்லது அதன் உள்ளடக்கத்திற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் திரைப் பண்டிதர்கள் வகுத்திருக்கும் எழுதப்படாத விதிகளைக் கிண்டலடிக்கும்போது மட்டுமே, அவற்றை நன்றாக அறிந்த ரசிகர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள்.

ஆங்கிலத்தில் இந்த வகைமைப் படங்களில் முதலாவதாக, 1905-ல் ’தி லிட்டில் ட்ரெய்ன் ராஃபரி’ வெளியானது.

அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக வந்த ‘தி கிரேட் ட்ரெய்ன் ராஃபரி’யை கிண்டலடித்த இந்தப் படத்தில் முழுக்கச் சிறார்களே பெரியவர்களாக நடித்திருந்தனர். அதாவது, திரையில் பெரியவர்கள் செய்யும் அத்தனை செயல்களையும் பிரதிபலித்திருந்தனர்.

ஆண்டுகள் ஆக ஆக, ஹாலிவுட்டில் கிளாசிக் ஆகக் கொண்டாடப்பட்ட, பெருவெற்றிகளைக் குவித்த, ரசிகர்களை வெறிபிடித்தவர்களாக தியேட்டர்களில் வேட்கை கொள்ளச் செய்த படங்களைக் கிண்டலடித்து காட்சிகளும் முழுநீளப்படங்களும் வந்தன.

ஆக்‌ஷன், காதல், ட்ராமா, ஹாரர், த்ரில்லர் என்று தொடங்கி ஜேம்ஸ்பாண்ட் பாணி உளவாளிக் கதைகள் வரை பகுத்துப் பிரித்து வெளியாகியிருக்கின்றன ஸ்பூஃப் படங்கள்.

’300’, ‘10000 பிசி’ போன்ற வித்தியாசமான களங்களைக் காட்டிய படங்களை முழுமையாகக் கிண்டலடித்துக் கூட ஸ்பூஃப் படங்கள் வந்திருக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரு புகழ்பெற்ற நூலைத் தழுவி திறனாய்வு நூல்கள் வெளியாவதற்கு ஒப்பானது இது.

தமிழில் ‘தமிழ்படம்’ வருவதற்கு முன்னர் சுருளிராஜன், கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளில் இந்த ‘பகடி’த்தன்மையைக் காணலாம்.

அதுவும் தமிழ் சினிமாவைக் குறிவைத்து அவர்கள் வசனம் பேசியிருப்பார்கள். அந்த விஷயத்தில் கவுண்டமணியை அடித்துக்கொள்ள இன்னொருவரே இல்லை எனலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு அவரது கமெண்ட்கள் ‘நெத்தியடி’யாக இருக்கும்.

எழுபதுகளிலேயே இது போன்ற ‘ஸ்பூஃப்’ கதைகளில் நடித்திருப்பதாக நடிகர் சண்முகசுந்தரம் பேட்டி அளித்திருக்கிறார்.

ஆனால், அவை முழுநீளப் படங்களாக அமையவில்லை. அதற்கு அக்காலகட்டத்து திரையுலகப் போக்கும் ரசிகர்களின் வரவேற்பும் கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

தெலுங்கு படவுலகில் பல படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் சமகாலத் திரைப்படங்களைக் கிண்டலடித்தே அமைக்கப்படுகின்றன. அங்கு, அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

ஏன் இப்படங்கள் தேவை?

ஸ்பூஃப் படங்கள் நிச்சயமாக ஒரு சமூகத்திற்குத் தேவை.

அப்போதுதான், ‘மாற்றம் வேண்டும்’ என்று ரசிகர்கள் நினைக்கிற சில விஷயங்களை மொத்தச் சமூகமும் உணரும். அதன் வழியே திரையுலகிலும் மாற்றங்கள் நடக்கும்.

ஏனென்றால், அதுவரை திரையரங்கில் சில ரசிகர்களால் மட்டுமே அவ்விஷயங்கள் கிண்டலடிக்கப்பட்டிருக்கும்.

இந்த வகைமைப் படங்கள் வெளியாகும்போது, மேற்கொண்டு அதே போன்ற பாத்திர வார்ப்புகள், காட்சியமைப்புகள் வேறு படங்களில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வார்கள் திரைக்கலைஞர்கள். அதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஸ்பூஃப் படங்களின் தேவை அமைகிறது.

ஒரு ஸ்பூஃப் படத்தை எழுதி, காட்சியாக்கம் செய்து, இறுதி வடிவம் தருவதற்கு முன்னர் சில விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

திரைப்படங்களில் வளமையாக, பழமையாக, கிண்டலடிக்க ஏற்றதாக உள்ள தகவல்களை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு திரைப்படத்தில் காட்டப்படுகிற உலகை முழுமையாக உள்வாங்க வேண்டும். அந்த இடம், அங்குள்ள பொருட்கள், மனிதர்கள், வசனம் பேசும் பாணி தொடங்கி கேமிரா கோணங்கள் வரை அனைத்தும் அதில் அடக்கம்.

சில காட்சிகளின் தன்மையை அடிக்கோடிட பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். குறிப்பாக, அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

மேற்சொன்னவற்றின் வழியே ஒரு காட்சியை எழுதிய பிறகு, அதில் இடம்பெறுகிற உள்ளடக்கத்தை முடிவு செய்தபிறகு, அதனைப் படம்பிடிப்பதற்குத் தேவையான அம்சங்களையும் மூலப்படங்களில் பார்த்து பிரதியெடுக்கத் தயாராக வேண்டும்.

கேமிரா நகர்வு, லைட்டிங், படத்தொகுப்பு உத்திகள் போன்றவையும் கூட இதில் இடம்பெறும்.

குறிப்பிட்ட காட்சியில் என்ன உணர்வு வெளிப்பட்டதோ, அதனை முழுமையாக வெளிப்படுத்தச் செய்ய வேண்டும். அதன் வழியே, அந்த அம்சத்தைக் கிண்டலடிக்க வேண்டும்.

முக்கியமாக, ‘க்ளிஷே’க்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வகையில் எவரையும் காயம்படுத்தாமல் கவனிக்க வேண்டும்.

அதையும் தாண்டி, அதனைத் திரையில் காட்டும்போது சிரிப்பு உருவாகும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இப்படி முழுக்க நகலெடுக்கும்போது, நாம் சேர்க்கிற சில கூடுதலான விஷயங்களே அப்படைப்பை ‘ஸ்பூஃப்’ ஆக மாற்றும்.

இன்று நமக்குக் கிடைக்கிற ‘ஸ்பூஃப்’ படங்கள் அனைத்திலும் இந்த விதிகள் மறைந்திருக்கும்.

எப்போது இந்த வகைமைப் படங்கள் வருகின்றனவோ, அப்போது திரையுலகம் பயணிக்கும் திசையே மாறும்.

புதிய உள்ளடக்கங்கள் ரசிகர்களுக்குக் காணக் கிடைக்கும்.

அதேநேரத்தில், மிகச்சீரிய முறையில் ‘நாஸ்டால்ஜியா’வை கிளப்புகிற படைப்புகளும் காணக் கிடைக்கும்.

ஏற்கனவே வெளியான திரைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, அவற்றைப் பிரதிபலிக்கிற வகையில் சில படங்கள் உருவாகும்.

அவற்றுக்கும் ‘ஸ்பூஃப்’ படங்களுக்குமான வேறுபாட்டை, அப்படங்களோடு பிணைகிற அளவுக்கு ரசித்தால் மட்டுமே உணர முடியும்.

இப்படி ‘ஸ்பூஃப்’ படங்கள் நமக்கு நிச்சயம் தேவை என்பதைச் சொல்லக் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ‘தமிழ்படம்’ மாதிரியான படங்களை வரவேற்க, அவையே அடிப்படையாக இருக்கின்றன. 

– மாபா
Comments (0)
Add Comment