பவுத்தம், பறையர், அயோத்திதாசர் பற்றிப் புதுப்பார்வையைத் தந்த நூல்!

சாதி – சாதியம் – பார்ப்பனியம் – தலித்துகள் – தீண்டாமை – விடுதலை, இதுபோன்ற இந்திய சமூக, அடிநாத பிரச்சினைகளை அறியவோ, பேசவோ, செயலாற்றவோ வேண்டுமென்றால், பெரியாரையோ, அம்பேத்கரையோ ஒதுக்கிவிட்டு எந்த வாத – விவாதங்களும் நடத்திவிட முடியாது.

அவர்கள் இருவரும் என்றோ இறந்தார்கள். ஆனால், விவாதங்களில் இன்றும் இருக்கின்றார்கள்.

இந்தச் சூழலில், கடந்த சில ஆண்டுகளாக அயோத்திதாசரின் பெயரும் பேசப்பட்டு வருகிறது.

அவர் பெரியார், அம்பேத்கர் இருவருக்கும் முன்னோடியாக இருந்தும் அவரை இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்றும் அவர் பறையர் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என ஆசிரியர் டி.தரும ராஜ் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, இந்த நூல் – அயோத்திதாசர் – பார்ப்பனர் முதல் பறையர் வரை – மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் பேராசிரியர் டி.தரும ராஜ் எழுதியது – நம்மை வாசிக்கத் தூண்டுகிறது.

1845 ம் ஆண்டு மே மாதம் இருபதாம் நாள், கோயம்புத்தூர் மாவட்டத்தில், சிறிய கிராமம் ஒன்றில், காத்தவராயன் என்ற இயற்பெயரிடப்பட்டு பிறந்தவர் அயோத்திதாசர்.

குருகுல முறையில், பண்டிதர் வீ. அயோத்திதாசர், கவிராயர் என்பவரிடம் கல்வி கற்கிறார். குருவுக்கு சிறப்பு செய்ய, காத்தவராயன் பெயரை துறந்து அயோத்திதாசர் என்ற புனைப்பெயரை ஏற்கிறார்.

1870ல் நீலகிரி பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்து – அத்வைதானந்த சபையை துவக்குகிறார்.

1886ல் அறிக்கை வெளியிடுகிறார். பழங்குடி இன மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஆதித் தமிழர்கள் – மண்ணின் மைந்தர்கள் – அவர்கள் இந்துக்கள் அல்ல என்கிறார்.

1891ல் திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை துவங்குகிறார். அதன் தலைவராகிறார். அவர் திராவிடர் என்ற சொல்லை ஆதித் தமிழன் என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறார்.

பின்பு, பௌத்தமே ஆதித் தமிழர்களின் பூர்வ சமயமாக இருந்ததென்ற கருத்தை ஆழமாக நம்பி, செயலாற்ற துவங்குகிறார்.

அவருடைய எழுத்துக்கள், அவர் நடத்திய தமிழன் பத்திரிக்கையில் 1907 – 1914 கால இடைவெளியில் இடம் பெற்றுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.

அவரது பல கருத்துக்கள் முரண்பாடாக உள்ளதை ஆசிரியரே பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

– புத்தரின் சீடர் – அவலோகிதர் திராவிட பாஷை எனப்படும் தமிழுக்கு எழுத்துருவம் வடித்து தந்ததாகவும், பின்பு எழுத்தையும் இலக்கணத்தையும் அவர்தான் அகத்தியருக்கு சொல்லி தந்ததாகவும் அயோத்திதாசர் எழுதியுள்ளாராம்.

– கௌதம புத்தரின் பிறப்பை கிமு 3600 வாக்கில் இருக்க வேண்டுமென கூறுகின்றாராம்.

– தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பாக செயல்படுவது பௌத்த தத்துவமே என்ற கருத்தை கொண்டவராய் இருந்தாராம்…

அயோத்திதாசரின் இதுபோன்ற கருத்துக்கள், அல்லது கண்டுபிடிப்புகள் இன்றைய சூழலிலேயே எந்த அளவுக்கு சரித்திர, விஞ்ஞான ஆதாரங்களுக்கு நேர் எதிராக இருக்கிறது என்பதை நம்மால் அறியமுடிகின்றது.

ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவரையும், அவரது கருத்தையும் ஏற்று கொள்வது சாதாரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த காரணங்களாலேயே அவர் மறக்கப்பட்டிருக்கவும், மறுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டல்லவா ?

“அயோத்திதாசரை மறந்ததற்கோ, மறைத்ததற்கோ இவைகளே காரணங்களாக ஆகி விட்டன போலும். நவீனம் நோக்கிய பயணத்தில் சாதரணங்களையும் இழுத்து வந்து இணைத்த வேலையை தமிழகத்தில் திராவிட இயக்கமே செய்தது.

அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் பௌத்த சங்கங்கள் செய்ய தவறியதை திராவிட இயக்கங்கள் செய்து காட்டியது” என்று புத்தக ஆசிரியர் டி.தருமராஜ் தனது முடிவுரையாக கூறுகிறார்.

உண்மை இவ்வாறு இருக்கும்போது அயோத்திதாசர் மறக்கப்பட்டதாகவும், அவரை மறைக்கப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என்பதை அறியலாம்.

நூல்: அயோத்திதாசர்! (பார்ப்பனர் முதல் பறையர் வரை)
ஆசிரியர்: டி.தருமராஜ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பொ.நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.
 

Comments (0)
Add Comment