அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது.

அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி ஒரு விசாரணைக்கு வந்த வாலிபர், நீதிமன்ற வாயில் முன்பு துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டார். போலீசார் கண் முன்னால் இந்த கொடூரம் நிகழ்ந்தது.

இதனை மறக்கடித்து, நாடு முழுவதையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் தலைநகர் சென்னையில் கடந்த 23-ம் தேதி நிகழ்ந்தேறியுள்ளது.

உலக அளவில் புகழ் பெற்றது, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். அங்கு படிக்கும் மாணவி, அந்த பல்கலைகழகத்தின் வளாகத்திலேயே பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம்தான், அது.

அன்று –

அந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். வெளியில் இருந்து வந்த ஆசாமி, நண்பரை அடித்து விரட்டி விட்டு, மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்ற மனித மிருகத்தைப் போலீசார் கைது செய்துள்ளார். அந்தப் பகுதியில், நடைபாதையில் பிரியாணி கடை வைத்துள்ள நபர் இவர்.

பலத்த பாதுகாப்பு உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கு முன்பும், இந்த காமக்கொடூரன், பல மாணவிகளைப் பலாத்காரம் செய்துள்ளார், என்ற தகவல் அதிர வைக்கிறது. 20 வழக்குகளில் தொடர்புடைய நபர்.

எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்

குற்றம் சாட்டாப்பட்ட ஞானசேகரன் – திமுக பிரமுகர் என தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சில ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

அனைத்துக் கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் ஓரணியில் திரண்டு, தமிழக அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தபோதும், இந்தக் கொடூர சம்பவத்தை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார்.

அனைத்துக் கட்சிகளும் கடும் வார்த்தைகளால் தமிழக அரசை வறுத்தெடுத்துள்ளன.

‘’அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், கைதான சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதேபோல் துணை முதல்வருடன் ஞானசேகரன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி எப்படி பல்கலை. வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டான்? அவரை முன்பே காவல்துறை கைது செய்யாதது ஏன்? ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்தவர் என்பதாலா?” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“சமூக விரோதிகளின் புகலிடம் தமிழகம் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்தே இல்லை என்பதை நிரூபிக்கிறது அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் – மிகவும் பிரசித்திப் பெற்ற பல்கலை. வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு சீரழிவைப் படம் பிடித்துக் காட்டுகிறது” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்சக்கட்டமாக தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ”பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மகளிர் ஆணையம், தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி உள்ளது.

லாக்கப் மரணங்கள், வெள்ள பாதிப்பு, கள்ளச்சாராய சாவுகள் என பல்வேறு பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளித்த தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த குரூர சம்பவத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment