இந்தியாவின் மாற்று சினிமாவின் முன்னோடியாகக் கருதப்படும் இயக்குநர் ஷ்யாம் பெனகல், உடல்நலக் குறைவு காரணமாக மும்பை வோக்ஹார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 90.
எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் ரியலிசம் மற்றும் சமூக எதார்த்தம் கொண்ட திரைப்படங்களின் வழியாக இந்திய சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியவர். மனைவி நீரா பெனகல் மற்றும் மகள் பியா பெனகலுடன் முதுமையை கழித்துவந்தார்.
டிசம்பர் 14 ஆம் தேதியன்று அவர் 90வது பிறந்த நாளைக் கொண்டாடினார். சிறுநீரகக் கோளாறு காரணமாக, தன் தந்தை மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது மகள் பியா பெனகல் தெரிவித்தார்.
90வது பிறந்தநாளன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷ்யாம் பெனகல், “நாம் வளர்ந்து முதுமை அடைகிறோம். ஆனால் எதையும் பெரிதாக சாதித்ததாக நினைக்கவில்லை.
இது ஒரு சிறந்த நாளாக இருக்கலாம். ஆனால் அதை நான் கொண்டாடியதில்லை. எங்கள் அலுவலகத்தில் என் குழுவினருடன் கேக் வெட்டினேன்” என்றார்.
வாழ்வின் அந்திம காலத்திலும்கூட இரண்டு முதல் மூன்று திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் பெனகல்.
“அவை அனைத்தும் வித்தியாசமானவை. அவற்றில் எதை செய்வேன் என்று சொல்வது கஷ்டம். அவை எல்லாம் பெரிய திரைக்கானவை” என்று சொல்லியுள்ளார்.
சமீபத்தில் அவர் இயக்கிய வாழ்க்கை வரலாற்றுப் படம்: முஜீப், த மேக்கிங் ஆப் நேஷன்.
தன் செயலூக்கம் நிறைந்த காலத்தில் ஷியாம் பெனகல், பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களான ‘பாரத் ஏக் கோஜ்’ மற்றும் ‘சம்விதான்’ உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கினார்.
அவரது படங்களில் ‘பூமிகா’, ‘ஜூனூன்’, ‘மண்டி’, ‘சூரஜ் கா சத்வான் கோடா’, ‘மம்மோ’ மற்றும் ‘சர்தாரி பேகம்’ ஆகியவை பாலிவுட்டில் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.
ஹைதராபாத்தில் பிறந்த ஷ்யாம் பெனகல், ஒரு மிகச் சிறந்த புகைப்படக் கலைஞராக இருந்தார். அவர் இந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையான குரு தத்துக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷியாம் பெனகல், ஒரு காப்பிரைட்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1962 இல் குஜராத்தியில் முதல் ஆவணப்படமான ‘கெர் பெத்தா கங்கா’ படத்தைத் தயாரித்தார்.
திரைப்படங்கள் ‘அங்குர்’ (1973), ‘நிஷாந்த்’ (1975), ‘மந்தன்’ (1976) ) மற்றும் ‘பூமிகா’ (1977) ஆகிய நான்கு படங்களும் அவரை அந்தக் காலத்தின் புதிய அலை திரைப்பட இயக்கத்தின் முன்னோடியாக மாற்றியது.
1980 முதல் 1986 வரை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) இயக்குநராகவும் பணியாற்றினார்.