ராமசாமியிலிருந்து பிறந்த வீரம் செறிந்த பெரியார்!

நெடுமரமாய் காய்ந்து கிடந்த நம்மை… நெடுஞ்சான் கிடையாய் வாழ்ந்து கிடந்த நம்மை… வசம்போல் சுருண்டு கிடந்த நம்மை… சுயமரியாதை சுடராய் தலைநிமிர செய்தவர் தந்தை பெரியார்.

அவர் படிக்காதவர்தான். ஆனால் படித்தவர்களையும் சிந்திக்க வைத்தார். அவர் ஒரு பாமரன்தான்.. ஆனால் பாமரர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.

மனிதநேய தேடல் அவருக்கு வானத்திலிருந்து இறங்கி வந்து ஞானப் பாலையோ, ஞானப் பழத்தையோ யாரும் தந்ததில்லை.

அவரது தேடல் உண்மைக்கான தேடல், நியாயத்திற்கான தேடல்… நீதிக்கான தேடல்… அனைத்துக்கும் மேலாக மனித நேயத்திற்கான தேடல்தான் அவரை மாமனிதனாக்கியது.

பகுத்தறிவு மலர்ந்தது

இந்தத் தேடல் புத்தருக்கு இருந்தது – அகிம்சை பிறந்தது!
இந்தத் தேடல் இயேசுவிற்கு இருந்தது – அன்பு சுரந்தது!
இந்தத் தேடல் நபிகள் நாயகத்திற்கு இருந்தது – ஈகை வளர்ந்தது!
இந்தத் தேடல் விவேகானந்தருக்கு இருந்தது – வீரம் விளைந்தது!
இந்தத் தேடல்தான் தந்தை பெரியாருக்கும் இருந்தது – பகுத்தறிவு மலர்ந்தது!!!

வீரம் செறிந்தது

தன் வீட்டு சிறுமி விதவையானது முதல் தன்னை சுற்றி நிகழ்ந்த பல சமூக அவலங்களை கண்டு விதியை நொந்து, உள்ளுக்குள் நொறுங்கி போகாமல், அதற்குரிய காரணங்கள் வெளியே இருக்கிறது என்பதை அறிந்து அதற்கு எதிராக கொந்தளித்து எழும்போதுதான் வெறும் ராமசாமியிலிருந்து வீரம் செறிந்த பெரியாராக விஸ்வரூபம் எடுக்கிறார்,

சுயமரியாதை

பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும், பெரியாரின் நேர்மையான மனசாட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறின.

வியாபாரிகள் குழுமம், நகராட்சி நிர்வாகம், காங்கிரஸ் பேரியக்கம், நீதிக்கட்சி போன்ற பல அமைப்புகளுக்குள் ஊடுருவி வந்தபோதும் பெரியாரின் உள்ளக்கிடக்கையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

எனவே “சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழகம்” என்ற அமைப்புகளை உருவாக்கி அதற்கு பிரச்சார பீரங்கியாக “விடுதலை” பத்திரிகையையும் துவக்கினார்.

விஞ்ஞானபூர்வ நடைமுறை

சூழ்ந்து வரும் துயரங்களால் துவண்டு போகாமல் அதற்குரிய காரணத்தைக் கண்டுபிடிப்பதும், காரணத்தை அறிந்தபின் திகைத்து போகாமல் அதற்கு எதிராக துள்ளி எழுவதும், நேருக்கு நேர் சமர் புரிய தயாராவதும், தன்னதந்தனியாக நின்று எதையும் சாதிக்க இயலாது என்பது புரிந்து சங்கம் அமைப்பதும்,

அந்த அமைப்பின் துணை கொண்டு மக்களை தட்டி எழுப்புவதும், வீறுகொண்டு எழுந்த மக்களை வீதியில் திரட்டுவதும், ஆட்சியாளர்களின் பேனாமுனையிலிருந்து சமூக நீதிக்கான உத்திரவுகளை பிறப்பிக்க வைப்பதும்தான் பெரியாரின் விஞ்ஞான பூர்வமான நடைமுறையாகும்.

சரித்திரமுமாயிற்று

இந்த நடைமுறைகளை யாரும் பெரியாருக்கு உபதேசிக்கவில்லை. எந்த ஓலைச்சுவடியும், பழங்கால நூலும் அவருக்கு போதிக்கவில்லை.

சுயமான சிந்தனையும் – தன்னலமற்ற தொண்டுள்ளமும் – பகுத்தறிவுப் பார்வையும் – அஞ்சாத நெஞ்சமும் இருந்ததால் இது அவரால் மட்டுமே சாத்தியமாயிற்று., அதுவே அத்தகைய அவரது சரித்திரமுமாயிற்று.

வலம் வருகிறார்

உண்மையில் பெரியார் மறைந்து போனாரா என்ன? மண்ணோடு மண்ணாய் மக்கிப் போனாரா என்ன? இல்லை… இல்லவே இல்லை!!

இதோ… இமயமாய் எழுந்து நிற்கிறார்… வங்கக் கடலாய் வியாபித்திருக்கிறார்… புயலாய் பயணிக்கிறார்… கங்கை போல் வற்றாத ஜீவநதியாய் வலம் வருகிறார்… நம் இதயம் என்னும் சிம்மாசனத்தில் கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்…

காற்றுக்கும் கடலுக்கும் மரணமில்லை… மண்ணுக்கும் மலைகளுக்கும் மரணமில்லை… தந்தை பெரியாருக்கும்!!

– நன்றி: ஒன் இந்தியா இதழ்

Comments (0)
Add Comment