கவனம் ஈர்க்கும் மண் இல்லா விவசாய முறைகள்!

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செங்குத்து விவசாயச் சாகுபடியை மேற்கொள்ளும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’பில் நடிகை சமந்தா முதலீடு செய்திருக்கிறார். இந்தச் செய்தியைப் படித்தபோது, கொஞ்சம் வியப்பாக இருந்தது.

அந்த நிறுவனத்தின் பெயர் ‘அர்பன் கிஷான்’. தகவல்கள் ரத்தினச்சுருக்கமாக இருந்தபோதும், அதில் சமந்தா குறித்த தகவல்களை விட அவ்விவசாய முறையே கவனம் ஈர்ப்பதாக இருந்தது.

ஏனென்றால், அந்த முறையில் விளைவிக்க மண் தேவையில்லை என்றும், நீர் மற்றும் காற்றின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி உணவுப்பொருளை விளைவிக்க முடியும் என்றிருந்தது.

ஏற்கனவே இது போன்ற நவீன வேளாண் தொழில்நுட்ப முறைகள் பற்றிப் பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாம் அறிந்தபோதும், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கவனம் இதில் திரும்பியிருக்கின்றன என்பதே அதற்குக் காரணமாக இருந்தது.

புதிய முறைகளுக்கான தேவை!

வேளாண்மையில் அதிகச் சாகுபடி என்பதுதான் எல்லா காலத்திலும் முக்கிய இலக்காக இருந்து வருகிறது. ஆனால், அதனைச் சாதிக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் சில விஷயங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.

கடந்த எழுபதாண்டு காலத்தில் நாம் பசுமைப்புரட்சி செய்கிறோம் என்கிற பெயரில் உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கொட்டி விவசாயம் செய்தோம். அதனால், உணவு உற்பத்தி பெருகியது.

அதேநேரத்தில், அதன் தரம் நூறாண்டுகளுக்கு முந்தைய தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்று இருந்ததா என்று எவரும் ஆராய முற்படவில்லை.

தரத்தை விட அளவு மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது.

ஒருகட்டத்தில் விவசாயப் பரப்பு விளைநிலங்கள் ஆனது, ரசாயனங்கள் பயன்பாட்டால் நிலத்தின் உயிர்த்தன்மை சீர்கெட்டது, நீர் மற்றும் காற்று மாசுபாட்டால் உணவுப்பொருளில் நச்சுத்தன்மை அதிகமானது என்று பல விஷயங்கள் வேளாண்மையைப் பாதிக்கத் தொடங்கின.

ஆண்டுதோறும் ஒரு சதவிகிதம் வீதம் உலகெங்கும் மக்கள்தொகை அதிகரிக்க, விவசாய உற்பத்தி பரப்போ நாற்பதாண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கை மட்டுமே தற்போது தக்க வைத்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கடந்தகாலத் தவறுகளால், பாரம்பரிய வேளாண் முறைகளுக்குத் திரும்புவதில் பல சிக்கல்கள் முளைத்தன. அதிகச் செலவு அதிலொன்றாக இருந்தது.

‘இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை பிடிச்ச கதையாக’ நிலைமை மாறவே, பலரும் தற்போதைய வழக்கத்தையே பின்பற்றும் இக்கட்டுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

வெகு சிலர் உற்பத்தி அளவைப் பற்றிக் கவலைப்படாமல், தற்காலிக கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல், இயற்கை விவசாயம் நோக்கி நடைபோடுகின்றனர்.

மிகச்சிலர் தரமான உணவுப்பொருளை எவ்விதக் கலப்படமும் இன்றி உற்பத்தி செய்வதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முனைந்து வருகின்றனர்.

அவர்களுக்காக வேளாண் விஞ்ஞானிகள் பல்வேறு முறைகளைப் பரிசீலித்து, சோதித்து, வெற்றி கண்டு, பின்னர் பரிந்துரைக்கின்றனர்.

அவற்றுள் ஒன்றாக அமைந்திருக்கிறது ‘செங்குத்து விவசாயம்’ (vertifical farming).

எப்படிப்பட்ட முறை இது?

’செங்குத்து விவசாய முறைகள்’ ஒன்றும் புதியவை அல்ல. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாபிலோன் தொங்கும் தோட்டம்’ என்று உலக அதிசயங்கள் குறித்துப் படித்திருப்போமே, கிட்டத்தட்ட அப்படியொரு நுட்பத்தை உள்வாங்கி நவீனப்படுத்தப்பட்ட முறையே இது.

பாரம்பரிய முறையில் பயிரிடுவது, நீர் பாய்ச்சுவது, அறுவை செய்வது உள்ளிட்ட அனைத்தும் நீளவாக்கில் அமையும். இந்த முறையில் அவை அனைத்தும் செங்குத்து பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.

பயன்படுத்தப்படாத கட்டடங்கள், விண்ணைத் தொடும் குடியிருப்பு வளாகங்கள், கண்டெய்னர்கள் என்று பலவற்றை இதற்காகப் பயன்படுத்த முடியும்.

செயற்கை முறையில் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் கட்டுப்படுத்தப்பட்ட சூழல் இதற்கு அவசியம். அதில் ஏதேனும் குளறுபடி நிகழ்ந்தால் மொத்த உழைப்பும் வீணாகிவிடும்.

ஹைட்ரோபோனிக்ஸ், அக்குவாபோனிக்ஸ், ஏரோபோனிக்ஸ் என்று மூன்று முறைகளில் இந்த வேளாண்மை செயல்படுத்தப்படுகிறது.

மண் தேவையில்லை..!

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் மேற்கொள்ள மண் தேவையில்லை. ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் நாம் விரும்புகிற தாவரங்களை வளர்க்க முடியும்.

அதற்காக, நிறைய துவாரங்கள் கொண்ட மிதவை போன்ற ஒரு அமைப்பு தேவை. கீரைகள், மூலிகைகள் என்று லேசான எடை கொண்டவற்றை இம்முறையில் வளர்க்கலாம்.

அக்குவாபோனிக்ஸ் முறையில் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களை வளர்க்குமிடத்திற்கு அருகிலேயே வேளாண்மை மேற்கொள்ளப்படும். இதில் அந்த நீர்வாழ் உயிரினங்களின் கழிவுகள் உரங்களாகப் பயன்படுத்தப்படும்.

பாரம்பரிய முறை வேளாண்மையில் பயன்படுத்தப்படுவதை விட ஆறில் ஒரு பங்கு நீர் செலவழித்தால் ஓதும். அதைவிட எட்டு மடங்கு அதிகமான உணவுப் பொருளை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நெல் வயல்களுக்கு அருகிலேயே நீர்த்தேக்கத்தை அமைத்து, இதே போன்று மீன்களை வளர்க்கிற பாரம்பரிய வேளாண் முறை ஒன்று உண்டு.

ஏரோபோனிக்ஸ் முறையில் நீருக்குப் பதிலாக ஊட்டச்சத்துகள் மிகுந்த காற்று பயன்படுத்தப்படுகிறது.

மற்ற இரு முறைகளில் தேங்காய் நார், சரளைக்கற்கள் உள்ளிட்ட சில பொருட்கள் தளமாகப் பயன்படுத்தப்படும். இதில் தாவர விதைகள் ஒரு கலத்தினுள் வைக்கப்பட்ட நுரைகளில் வைக்கப்படுகின்றன.

அவை வளர்கையில் வெளிச்சம் பெறுகின்றன; ஊட்டச்சத்து மிகுந்த நீரை தெளிப்பதன் மூலமாக, அதிக அழுத்தம் கொண்ட ஈரப்பதத்தை பாய்ச்சுவதன் வழியாக அத்தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

வேகமாகத் தாவரங்கள் வளர்வதோடு, குறைந்த அளவில் நீர் பயன்படுத்தப்படுவது இந்த முறையின் சிறப்பு.

செங்குத்தான முறையில் பல அடுக்குகள் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால், நிலப்பரப்பு பற்றிய கவலைகள் குறைவு.

எதிர்பாராத பருவநிலை மாற்றம், நோய் பாதிப்பு, தொழிலாளர் தேவை போன்றவற்றால் இதில் தாக்கம் ஏற்படாது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பெருமளவில் குறைக்கும் என்பது இதன் சிறப்புகளில் ஒன்று.

அதேநேரத்தில், அதிகளவில் தொழில்நுட்பச் செயல்பாடுகளைச் சேர்ந்திருக்க வேண்டியிருக்கும். மகரந்தச் சேர்க்கையைவிட்டு வெகுதூரம் விலகிச் செல்ல வேண்டியிருக்கும்.

மேற்சொன்னவாறு கீரைகள், மூலிகைகள் மட்டுமல்லாமல் தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரிக்காய், வெங்காயத்தாள் போன்றவற்றையும் வளர்க்க முடியும்.

சில உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய, செங்குத்து விவசாய முறையில் மண் பயன்படுத்தப்படுகிறது.

மற்றபடி குறைவான நீர், தேவையான சூரிய ஒளி அல்லது மின்சார வெளிச்சம், போதுமான அளவுக்கு வேளாண் தொழில்நுட்பச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி இதனை மேற்கொள்ளலாம்.

உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளோ, அதிக நிலப்பரப்போ இனி வேளாண்மைக்குத் தேவையில்லை என்பதே இந்த நுட்பம் சொல்லும் விஷயம்.

அந்த வகையில், இன்னும் சில ஆண்டுகளில் இதுபோன்ற பல நவீன வேளாண் நுட்பங்கள் நம்மைச் சூழப் போகின்றன. அவற்றால் விளையும் நன்மைகள் அதிகமாகும்போது, எதிர்காலத் தலைமுறை குறித்த பல குழப்பங்கள், பயங்கள் தேவையற்றுப் போகும்!

மாபா

Comments (0)
Add Comment