கம்பீரக் குரலுக்கும் காந்தக் குரலுக்கும் சொந்தக்காரரான நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு துவங்கும் இந்த நாளில் (25.12.2024) அவரைப் பற்றிப் பிரபலங்கள் பகிர்ந்து கொண்டவை இங்கே:
கலைஞர் மு. கருணாநிதி:
அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறு பிராயம் தொட்டு நாகூர் ஹனீபாவை அறிவேன். அன்று கேட்ட அதே குரல்! வளமிக்க குரல்! அனைவரையும் வளைக்கும் குரல்! ஆதிக்கக்காரர்களின் செவிப்பறை கிழிக்கும் இடியோசைக் குரல்!
அந்தக் குரல் மட்டுமா இன்றளவும் நிலைத்து நிற்கிறது? அவர் நெஞ்சில் பதிந்த கொள்கை உறுதியுமன்றோ ஆடாமல் அசையாமல் அப்படியே நிலைத்து நிற்கிறது.
உலகில் இஸ்லாமியப் பெருமக்கள் வாழும் இடமெல்லாம் இவர் குரல் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாட்டுத் தமிழ் மக்கள் இந்த இசைமுரசம் கேட்டு நரம்பு முறுக்கேறிடத் தலை நிமிர்கின்றனர்.
அளவு கடந்த பாசத்தை என் மீது கொட்டி, பற்றினைக் கழகத்தின் மீது காட்டி, கழகத்தினரின் பேரன்பைப் பரிசாகப் பெற்றுள்ள இசைமுரசு ஹனீபா அவர்கள், இஸ்லாமியப் பெரியோரும், இளைஞரும் மகிழ்ந்து போற்றத்தக்க அளவுக்கு நபிகள் நாயகம் அவர்களைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களை இன்னமும் வானொலி நிலையம் ஒலிபரப்புவதையும், தொலைக்காட்சி நிலையம் நிகழ்ச்சியாக்கிச் சித்தரிப்பதையும் கண்டு, கேட்டுக்களிப்புறாதவர் எவர்?
பால பருவம் முதல் நானும் ஹனீபா அவர்களும் இணைந்து நடத்தும் இலட்சியப் பயன், இடையூறுகளை, சோதனைகளை, கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பேராசிரியர் க. அன்பழகன்:
எனது பேரன்புக்குரியவரும், நெடு நாளைய நண்பருமான இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள், தொடக்க நாள் முதல் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் உடையவராய்த் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து பணியாற்ற முற்பட்டு பல பொறுப்புகளையும் ஏற்று கழகத்தின் முன்னணியில் நிலைகொண்டுள்ள மூத்த தோழர்களுள் ஒருவராக விளங்குபவர்.
ஹனீபாவின் எழுச்சியூட்டும் அரிமா முழக்கம் ஆர்த்திடாத கழக மாநாடு இல்லை. தலைமைக் கழகத்தின் விழா இல்லை என்று எவரும் பாராட்டிக் கூறுமாறு தமது இசைத் தொண்டினை ஆற்றுபவர் அவர்.
அவரது மங்காத குரல் வளமும், சிதையாத தமிழ் உச்சரிப்பும், பொன்றாத பண் அமைப்பும் அவரது பாடல்களைக் கேட்பவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டிடும் ஆர்வத்தைத் தூண்டுவன.
’அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ என்னும் பாடலை அவர் பாடிக்கேட்டுப் பரவசமுறாதார் இல்லை. அவரைப்போல் அந்தப் பாட்டைப் பாட இன்னொருவர் இல்லை.
அவர், மார்க்கத்தில் இஸ்லாமியர் என்பதில் பெருமை கொள்ளும் உணர்வுடையார்; தெவிட்டாத தேனெனெச் சுவைக்கும் ’தீன்’ நெறிவிளக்கப் பாடல்களைப் பண்ணுடல் இசைப்பதில் அவருக்கு இணை இல்லை எனலாம். நாடெங்கும் அந்தப் பாடல்கள் பரவி ஒலிப்பதே அதன் பெருமைக்குச் சான்று.
வைகோ:
சாதி மத எல்லைகளைக் கடந்து, இந்தப் பூபாகத்தில் தமிழர் எங்கிருந்தாலும் நேசிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் அண்ணன் ஹனீபா. தமிழ்கூறும் நல்லுலகில் அவர் மணிக்குரல் ஒலிக்காத இல்லமும் இல்லை: உள்ளமும் இல்லை.
கோடிக்கணக்கான குரல்களுக்கு மத்தியிலும் தன்னிகரில்லாத அண்ணன் ஹனீபாவின் இசைக் குரல் முழக்கத்தைக் கடல்கடந்த நாடுகளில் வாழ்வோரும்கூடக் கச்சிதமாக இனம்கண்டு கொள்வாரெனில், அண்ணன் ஹனீபாவின் குரலின் சிறப்பைக் கூற வேறென்ன சான்று வேண்டும்?
குற்றால அருவியைப்போல், வற்றாத பெருநதியைப்போல், முற்றாத தமிழைப்போல் பற்றாளர் திளைத்திருக்கும் இசைமுரசு அண்ணன் ஹனீபாவின் இசைமுழக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் இளமைப் பருவத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்ட நாகூர் அனீபா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அரும்பாடுபட்டார்.
இயற்கையின் அருட்கொடையாக அவருக்குக் கிடைத்த கம்பீரமும். காந்தமும் நிறைந்த கானக் குரலை, இறைப்பணிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார்.
“ஓடி வருகிறான் உதயசூரியன்“ என்ற பாடல் கழகத்தின் அனைத்து மேடைகளிலும் மாநாடுகளிலும் ஒலித்தது. கழகத்தை வளர்த்தது. இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது ”தழிழ் மணக்கும் திசை எல்லாம் தேடினேன் உள்னை சான்றோர் தம் அவையெல்லாம் அலையவிட்டேன் கண்ணை எங்கே சென்றாய்?.. எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?” என அவர் பாடியதைக் கேட்கும்போது கண்கள் குளமாகும்.
அவரது இசுலாமியப் பாடல்கள், உலகெங்கிலும் வாழும் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்த தமிழர்களது இல்லங்களில் நாள்தோறும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.
அவரது அழைப்பின் பேரில் நாகூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, அவரது இல்லத்தில் அன்னாரின் விருந்தோம்பலில் திளைத்த மகிழ்ச்சி என் மனதைவிட்டு என்றும் நீங்காது.
மேலப்பாளையத்தில் இசைமுரசு அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் என் உரையில் அவர் மனம் நெகிழ்ந்தார்.
திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளில் நான் உரையாற்றிய பின்னர், என் கன்னத்தைப் பிடித்துப் பாராட்டிய பாங்கு மறக்க முடியாதது.
ஈழத்தில் இருந்து நான் திரும்பி வந்தபோது, என்னை உச்சிமோந்து கரங்களைப் பற்றியதை எப்படி மறப்பேன்?
அழைக்கின்றார் அண்ணா’ என்ற அவரது பாடலையும், ‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே’ என்ற அவரது பாடலையும் அதிகாலை வேளைகளில் அவ்வப்போது கேட்பேன்.
எனது கார்ப் பயணங்களிலும் அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
2004-ல் நதிகள் இணைப்புக்காக நான் நடைபயணம் சென்றபோது நாகூரில் எனக்கு வரவேற்புக் கொடுத்து. அரபு நாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட வெண்பட்டு ஆடையை அணிவித்து மகிழ்ந்தார்.
இசைமுரசு அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது கானக் குரலும், பாடல்களும் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும். காலத்தை வென்று நிற்கும்.
அவரை இழந்து துயரத்தில் தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.க.ஆ. அப்துல் சமது சாஹிப்:
இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள் என் இனிய நண்பர். இளமைக்காலம் தொட்டு இஸ்லாமியப் பாடல்களை முழங்கிவரும் அவர், தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஓர் சிறப்பான சேவை செய்தவராக விளங்குகிறார்.
தமிழ் பேசும் மக்கள் நடமாடும் இடங்களிலெல்லாம் அவர் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இஸ்லாத்தைப் பற்றி பொதுவாகவும், அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி சிறப்பாகவும் ஆயிரக்கணக்கான இசைப்பாக்களை அவர் முழங்கியிருக்கிறார். சமுதாயத்திற்கு எழுச்சி தரும் பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவரது பாடல்கள் தமிழகத்தில் இரவும் பகலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
அவர் பாடத் தொடங்கிய காலத்திலிருந்து அப்பாடல்களை நான் கேட்டு வருகிறேன். அவருக்கு வயது ஏற ஏற அவருடைய குரலில் ஓர் புதிய மெருகு ஏறி இருப்பதை உணர முடிகிறது.
இதற்கு அவர்பெற்ற இஸ்லாமிய சமய ஒழுக்கப் பயிற்சிதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
மு.க. ஸ்டாலின்:
’ஓடி வருகிறான் உதயசூரியன்’. அழைக்கின்றார்…, ’அழைக்கின்றார் அண்ணா..’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே..’
’இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை..’, ‘வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா..’ என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த ‘தனிமனித வானொலி’.
அவர் குரலுக்கு மனதைப் பறிகொடுத்த அனைவரும் இயக்கத்துக்குள் இணைந்து…, இரண்டறக் கலந்துவிட்டனர்.
திராவிட இயக்கம் இருக்கும் வரை அதன் செவிகளில் தூரத்து இடி முழக்கமாக இசைமுரசுவின் எக்காளப் பேரொலி எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.
நாகூர் ஹனீபா அவர்களின் திடீர் மறைவால் எனக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஏற்பட்ட இழப்பை விவரிக்க ஏற்ற வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன். சுயமரியாதைப் போராளியாகத் திகழ்ந்த அவர் கழகத்தின் அசையாச் சொத்தாகவும். எண்ணற்ற இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாகவும் விளங்கியவர்.
கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் “அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா” என்று அவர் இயற்றிய உணர்ச்சி மிகுந்த பாடல் கழகத்திற்கு உத்வேகத்தைக் கொடுத்தது.
அதே போல் ‘ஓடிவருகிறான் உதயசூரியன்’ என்ற பாடல் இன்றைக்கும் கழகத்தின் சின்னமான உதயசூரியனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
அவரது பாடலின்றி ஒரு தேர்தலைக் கூட திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை சந்தித்ததில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவரது மறைவு என் மனதில் வேதனைத் தீயை மூட்டுகிறது.
அவரைப் பிரிந்து வாடும் உறவினர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
எம்.எஸ்.விஸ்வநாதன்:
முகமது பின் துக்ளக் படத்தில், ‘அல்லா… அல்லா’ என்ற பாடலை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனால். நான்தான் அந்தப் பாடலை பாடவேண்டுமென்று, சோ பிடிவாதமாக இருந்தார்.
நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். ‘சரி.. யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப்போட்டு குலுக்கி எடுப்போம்னார், சோ. அது மாதிரியே குலுக்கிப்போட்டு எடுத்தால், என் பெயர் எழுதிய சீட்டுதான் வந்தது.
‘சரி.. ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!”
கவிக்கோ அப்துல் ரஹ்மான்:
இசைக்கு மென்மையான குரல் இருந்தால்தான் இனிமையாக இருக்கும் என்று சொல்வார்கள். மேடைப் பாடகனாக தனது கம்பீரக் குரலால் அந்த வரையறையை உடைத்து தவிடுபொடியாக்கியவர் ஹனீபா.
அவர் இல்லாமல் தி.மு.க மாநாடு நடந்ததே இல்லை. தி.மு.க மாநாடுகளில், “அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா..“ என்று ஹனீபா உச்சஸ்தாயியில் பாடும்போது ஒவ்வொரு தொண்டனும் கண்ணில் நீர் கோர்க்க கணீர் குரலுக்குள் கரைந்து போய்விடுவான்.
கலைஞருக்கு மிகவும் பிடித்த இஸ்லாமியர்கள் இருவர். ஒருவர், நாகூர் ஹனீபா, இன்னொருவர் நான். முதலில் வஃக்பு வாரியத் தலைவர் பதவி ஹனீபாவுக்கு. அடுத்து எனக்கு விரும்பிக் கொடுத்தார் கலைஞர்.
என்னை மூன்றுமுறை சட்டமன்றத் தேர்தலில் நிற்கச்சொல்லி வற்புறுத்தினார் கலைஞர். அரசியல்வாதிக்குரிய குணாதிசயங்கள் எனக்கு இல்லாததால், நாசூக்காகத் தவிர்த்து விட்டேன்.
என்னைப் போலவே கலைஞர் பலமுறை கேட்டும் ஹனீபா மறுத்து வந்தார். கடைசியில் கலைஞர் ரொம்பவும் வற்புறுத்தவே வாணியம்பாடி இடைத்தேர்தலில் போட்டியிட்டார் ஹனீபா, வாணியம் பாடி சென்று ஹனீபாவுடன் பிரசாரம் செய்தேன்.
வாத்தியக் கருவிகளை வைத்துக்கொண்டு கிராமம்… கிராமமாகச் சென்றோம். மக்கள் கூட்டம் திரண்டவுடன் பாடல்கள் பாடி வாக்கு கேட்பார். ஹனீபா இந்து, முஸ்லிம் அன்பர்களை ஒன்றாக இணைத்த ஒரே இசைமுரசு ஹனீபாதான்.
– ஹனீபா முத்துவிழா மலரில் கலைஞர் எழுதியது 1993.
நன்றி: முகமது காசீன் அனீஸ்
#ஹனீபா #கலைஞர் #மு_கருணாநிதி #பேராசிரியர்_க_அன்பழகன் #வைகோ #பேரறிஞர்_அண்ணா #அ_க_ஆ_அப்துல்_சமது_சாஹிப் #மு_க_ஸ்டாலின் #எம்_எஸ்_விஸ்வநாதன் #கவிக்கோ_அப்துல்_ரஹ்மான் #திராவிட_முன்னேற்றக்_கழகம் #dmk #nagore_hanifa #hanifa #kalaignar #anna #ka_anbazhagan #vaiko #anna #abdul_samathu_sahif #mkstalin #msv #kaviko_abdul_rahman