எம்ஜிஆர் மிகவும் அழகானவர், தோற்றப்பொலிவு மிக்கவர், பொன்னைப் போன்ற நிறம் கொண்டவர், சிரித்தபடி அவர் வரும்போது, ரோஜாத் தோட்டமே நடந்து வருவது போலிருக்கும்.
இதெல்லாம் அவரது வசீகரமான அம்சங்கள்தான்; சந்தேகமில்லை. என்றாலும், இதையெல்லாம் கடந்த அவரது அரவணைத்துச் செல்லும் பண்பும், மனிதநேயமும்தான் அரசியல் எதிரிகளையும் அவர்பால் ஈர்த்தன!
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட சமயம். அவருக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஒரு வரலாற்று சம்பவம்.
கொந்தளிப்பான சூழ்நிலையில், அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியதுடன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிடுவதில் மும்முரமாக இருந்தார். அதற்கு எத்தனையோ முட்டுக்கட்டைகள்.
அப்போது, திமுகவில் இருந்த மதுரை முத்து, ‘‘அந்தப் படம் வெளிவராது. படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்.’’ என்று சவால் விட்டார். எம்.ஜி.ஆர். பற்றியும் கடுமையாக மேடைகளில் விமர்சித்தார்.
அந்த சமயத்தில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த ரசிகர்களை தினமும் எம்.ஜி.ஆர். சந்தித்து, அவர்களிடம் பேசுவார்.
ஒருநாள், அப்படிப் பேசும்போது ‘‘மதுரை முத்தண்ணன் அவர்கள் கூட…’’ என்று குறிப்பிட்டார். அப்போது குப்புதாஸ் என்ற ரசிகர், முத்துவைப் பற்றிக் கடுமையாக விமர்சித்து, ‘‘அவரைப் பற்றி பேசாதீர்கள்’’ என்று கத்தினார்.
அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் மரியாதையோடு பேசும் எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்தது.
கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘அவர் யாரு? நம்ம ஆளா? குழப்பம் விளைவிக்க வந்திருக்கும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவரா?’’ என்று கேட்டார்.
அந்த ரசிகரும் ‘‘நான் எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்தவன்’’ என்று சொல்லி தன்னிடம் உள்ள அடையாள அட்டையைக் காண்பித்தார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சற்று கோபம் தணிந்தார்.
கத்திய ரசிகரைப் பார்த்து, ‘‘தம்பி, முத்தண்ணன் இன்று என்னை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், அவர் திராவிட இயக்க வளர்ச்சிக்காக செய்த தியாகங்களை மறக்கலாமா?
ஏன்? முத்தண்ணனே காலப்போக்கில் நம் பக்கம் வரலாம். யாரையும் கண்ணியக்குறைவாக பேசாதீர்கள்’’ என்று கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்!
அதைப் போலவே, சில ஆண்டுகளில் நிலைமைகள் மாறின. அதிமுகவில் சேர விரும்பினார் மதுரை முத்து. கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அவரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!
இதுகூட பெரிதல்ல; பின்னர், முத்துவை மதுரை மேயராகவும் ஆக்கினார்!
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ஊட்டியில் அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். அதைக் காரணம் காட்டி, அந்த சமயத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் படப்பிடிப்பை அங்குள்ள அரசுக்கு சொந்தமான பூங்காவில் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
தன்னை மக்களிடம் நெருக்கமாக்கிய திரையுலகுக்கும், கலைஞர்களுக்கும் எம்.ஜி.ஆர். எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார்.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு சுமையாக இருந்த விற்பனை வரி செலுத்தும் முறையை நீக்கி, ஒரு காட்சி நடந்தால் இவ்வளவு வரி கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ‘காம்பவுண்டிங் டாக்ஸ்’ முறையை முதல்வர் எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார்.
அப்படிப்பட்டவர், படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பாரா? விஷயம் அறிந்து ‘ஒரு கைதியின் டைரி’ படப்பிடிப்பை அரசு பூங்காவில் நடத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பைக் காணவும் வந்துவிட்டார்.
படப்பிடிப்பின்போது தொழில்நுட்பக் கலைஞர்கள் இரண்டு பேர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டே இருந்தனர். இதை கவனித்து அவர்களைப் பற்றி விசாரித்து இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று எம்.ஜி.ஆர். அறிந்து கொண்டார். அவர்களது பெயர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பின்னர், படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். தனது சொந்த செலவிலேயே மதிய விருந்து அளித்தார். சுற்றிச் சுற்றி வந்து எல்லோரையும் உபசரித்தார். அந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இரண்டு பேரும் ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர். அளிக்கும் விருந்தை சாப்பிடுவதில் அவர்களுக்குத் தயக்கம். அதேநேரம், விருந்தை புறக்கணிக்கவும் முடியாத நிலைமை. இந்த தர்மசங்கடத்தாலும் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பாததாலும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டனர்.
அந்தத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அருகில் எம்.ஜி.ஆர். வந்தார். அவர்களது தலைகள் இன்னும் குனிந்தபோது, சத்தமாக அவர்களின் பெயரை சொல்லி அழைத்தார்! அதிர்ச்சியுடன் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்.
எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவர்களது தோளைத் தட்டி, ‘‘நல்லா சாப்பிடுங்க’’ என்றார்.
சொன்னதோடு மட்டுமில்லாமல், ‘‘இதை சாப்பிடுங்கள், நல்லா இருக்கும்’’ என்று சொல்லி சில பதார்த்தங்களை அவர்களது இலையில் வைத்து உபசரித்தார்.
ஒரு முதல்வர், தங்கள் மீது இவ்வளவு அன்பு காட்டியதில் இருவரின் கண்களும் கலங்கிவிட்டன. அதற்கு மறுநாள் அந்தத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருவரும் அதிமுகவில்!
– நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்