காலத்தில் கரைந்த ஊரும் கலைஞரும்!

பத்திரிகையாளர் கோலப்பன் பதிவு

ஏதோ இராணுவம் குண்டு வீசிய ஊர் போல் காணப்பட்டது அகரமாங்குடி. நண்பர் இராணி திலக்தான் அந்த ஊரைக் குறித்து என் கவனத்தை ஈர்த்தார். அவர் பதிவிட்டிருந்த புகைப்படம் என்னை அந்த ஊரை நோக்கி இழுத்தது.

கதாகாலட்சேபம் செய்வதில் கொடிகட்டிப் பறந்த மாங்குடி சிதம்பர பாகவதர் வீடு சிதிலடைந்து கிடப்பதைக் காட்டும் படம் அது.

நான் இருமுறை அந்த ஊருக்குச் சென்றிருக்கிறேன். பல அறிஞர்கள் வாழ்ந்த ஊர். ஊர் என்பதைவிட அது ஒரு ஒற்றை அக்ரஹாரம். நீண்டு கிடக்கும் தெருவின் இரு பக்கமும் பழைய வீடுகள்.

அவற்றில் பெரும்பாலானவை சிதிலடைந்து, செடி கொடிகள் வளர்ந்து பாழடைந்து காணப்பட்டன. அதில் ஒன்றுதான் சிதம்பர பாகவதர் வீடு. சிதிலடைந்து கிடக்கும் வீட்டில் இருந்து பாம்புகளும் மற்ற ஜந்துக்களும் வருவதாக பக்கத்து வீட்டார் வருத்தப்பட்டனர்.

1899-ல் எஃப் ஏ தேர்வில் வெற்றியடைந்து அரசாங்க உத்தியோகத்தில் சேருவதற்கு திட்டமிட்டிருந்த அவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக பாகவதனாக மாறி விட்டார்.

1900 ஆகஸ்ட் மாதத்தில் ஆறு மாதத்திற்குள் பாகவதனாக ஆனேன் என்று கதாகலாட்சேபம் என்ற வியாசம் புத்தகத்தில் அவர் தெரிவிக்கிறார். அவருக்கு மிருதங்கம் வாசித்தவர்களில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையும் அடங்குவர்.

1937-ஆண்டு சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருதைப் பெற்றார். மாங்குடியில் இருக்கும் மகேஷ்தான் வீட்டைச் சுற்றிக் காட்டினார். பரணில் இருந்த பழைய புகைப்படத்தையும் எடுத்துவந்து புகைப்படம் எடுக்க வகைசெய்தார்.

நண்பர் கூட்டத்தின் நடுவே கம்பீரமாக இரண்டு மனிதர் சேர்ந்தால் போல் உருவம் கொண்டவராக சிதம்ப பாகவதர் காணப்படுகிறார். நெற்றியில் திருநீறு, கழுத்தில் மகரக் கண்டிகை, உத்திராக்கம் என சிவப்பழமாகவே அவர் காணப்படுகிறார்.

மியூசிக் அகாதமில் காணப்படும் புகைப்படத்திலும் அப்படியே இருக்கிறார். இரயிலில் பயணம் செய்யும் போது இரண்டு டிக்கெட் வாங்குவாராம். அத்துடன் சீடர் ஒருவர் பெஞ்சை சுமந்து செல்வார். இரண்டு சீட்டுக்கு நடுவே அந்த பெஞ்சைப் போட்டு பயணம் செய்ய வேண்டிய அளவுக்கு பெரும் உருவம்.

ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆழ்ந்த புலமை இருந்தது. அவர் சொந்தமாக பெரிய நூலகம் வைத்திருந்தார்.

அவரது தம்பிகளும் அவர்களின் பிள்ளைகளும் அவருடன் உடன்பாடினர். ஒரு காலத்தில் இசையில் மூழ்கிக் கிடந்த மாங்குடியில் வெறும் நிசப்தம்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment