கக்கன்: தமிழக வரலாற்றில் ஒரு வைரக்கல்!

அரசியலில் எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த கக்கன் நினைவுநாளில் (23.12.2024) அவரைப் பற்றிய ஒரு பதிவு.

உலக வரலாற்றிலேயே கக்கன் போன்ற நேர்மை, நாணயத்திற்கு உதாரணமான அமைச்சரைப் பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் ஒரு வைரக்கல்.

கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி, இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது.

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.

தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது.

இரவு நேரப் பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது.

காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன், 1942 ஆகஸ்ட் புரட்சியின்போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார்.

அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து, சக தோழர்களைக் காட்டிக் கொடுக்கச் சொன்னபோது கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்ட மனித இனத்தின் முதல் மனிதர் கக்கன்.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின் நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு துறைகளை நிர்வகித்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது,

தாழ்த்தப்பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசுப் பணிகள் கக்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன், 1967 – தேர்தலில் தோற்ற பின்பு பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்தபோதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார்.

வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.

தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்திற்கு ஒப்படைத்தார்.

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.

உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, “வேண்டாம்” என்று மறுத்து விட்டார்.

“உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்” என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி” என்று கைகூப்பினார் கக்கன்.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

– நன்றி: முகநூல் பதிவு

#எம்.ஜி.ஆர். #காளிமுத்து #கக்கன் #kakkan #mgr #kalimuthu

Comments (0)
Add Comment