ஆரோக்கியமான உணவு முறையால் அடுத்த தலைமுறை உருவாக்குவோம்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையானது ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள்.

மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை உறைவிடம். இதில் முதலிடம் வகிப்பது ஆரோக்கியமான உணவு முறையாகும்.

உணவு இன்றி உடல் இயங்காது. உடலை இயக்குவதற்கான சக்தி என்பது நமக்கு சுத்தமான உணவின் மூலமே கிடைக்கிறது.

வாழ்வியல் முறையில் நாம் கொண்டுள்ள பழக்க வழக்கங்களே நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.

உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் ஏராளமான பாடல்கள், நமது தொன்மைக்குச் சான்றாக விளங்கும் சங்க இலக்கியத்தில் உள்ளன.

தமிழர்களின் தொன்மையான வாழ்வியலையும் வீரத்தைப் பறைசாற்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றில், ”உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே” எனும் வரிகள் உணவின் முக்கியத்துவத்தையும், தேவையையும் சுட்டிக் காட்டுகிறது.

திருக்குறளில், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, வாழ்க்கைத் துணைநலம் உள்ளிட்ட அதிகாரங்களைத் தொடர்ந்து விருந்தோம்பல் அதிகாரத்தை வைத்துள்ளார் திருவள்ளுவர்.

வான் சிறப்பு அதிகாரத்திலும் உணவின் முக்கியத்துவத்தைச் சொல்லியிருப்பார் வள்ளுவர்.

இதன் மூலம், மனிதனுக்கு மிகவும் முக்கியமான தேவைகளில் ஒன்று ஆரோக்கியமான உணவு என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

நகர்ப்புறங்களில் விருந்தோம்பல் என்பது அருகி வருகிறது. அதற்கு, பொருளாதாரச் சூழலும் பரபரப்பான சூழலும் காரணமாக சொல்லப்படுகிறது. கிராமப்புறங்களிலும் இந்த நடைமுறை குறைந்து கொண்டே வருவது வருத்தத்திற்குரிய ஒன்றுதான்.

விருந்தோம்பல் என்பது தமிழர்களுடைய கலாச்சார பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறந்த பழக்க வழக்கமாகும். அதைத் தவிர்த்து வருகிறோம் என்பது கசப்பான உண்மை.

உணவின் அவசியத்தை உணர்த்துவதற்கு இன்னொரு உதாரணத்தை இங்கே நினைவுகூர வேண்டும்.

புத்தர் – ஞானம் அடைவதற்காகப் பட்டினியோடு கடும் தவம் இருந்தார். இதைத் தவறு என்று உணர்ந்தப் பிறகு, உணவுகளை எடுத்துக்கொண்டார். அதன்பிறகே, ஆரோக்கியமான உடல்நிலையோடு தான் ஞானம் பெற்றார்.

நவீன தமிழ் இலக்கியத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படும் பாரதியும் உணவின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருப்பார்.

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். பசியின் கொடுமையை உணர்ந்த பாரதிதான் உணவின் அவசியத்தையும் சொல்லியுள்ளார். இது போல பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக உயிர்வாழ, நல்ல உணவு முறை அவசியம். உடற்பயிற்சி, யோகா, நடனம், தொழில், வீட்டு வேலை என்று எந்த வேலை செய்ய வேண்டுமானாலும் உடலுக்கு பலம் என்பது முக்கியம்.

பெருந்தலைவர் காமராஜர், தன்னுடைய காலகட்டத்தில் பள்ளிகளில் முதல்முறையாக மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தினார்.

அப்போதுதான் மாணவர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

அதன்பின், சத்துணவில் இரண்டு முட்டைகள் போடும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார்.

இவையெல்லாம் தற்போது வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனித சமுதாயம் எதிர்கால சந்ததியின் உடல் நிலைமையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டுதான்.

மாணவர்கள் காலையில் உணவு உட்கொள்ளாமல் வரும் விகிதம் அதிகரித்து வருகின்றமையாலும், ஆரோக்கியம் பாதிப்படைவதாலும் இந்தத் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற திட்டங்கள் இந்தியா, இலங்கை மட்டுமல்ல பல நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

பண்டைய தமிழர்களின் ஆரோக்கியத்தில் பழைய சோறு (நீர் ஆகாரம்) முக்கியப் பங்கு வகுக்கிறது. ஆனால், தற்போதைய காலத்தில் அதை விரும்பும் மக்கள் குறைவாகத் தான் இருக்கிறார்கள்.

எந்த வகையான உணவால் நமது பசியை நிரப்புகின்றோம் என்பதில் தான் நமது ஆரோக்கியம் இருக்கிறது.

கொரோனா காலத்தில் பாட்டி வைத்தியம், மூலிகைக் குடிநீர், சத்தான உணவுகளுக்கே நாம் முதலிடம் கொடுத்தோம். நோய்கள் வரும்போது மட்டுமே நமது உடலின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்கிறோம்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மணா அவர்கள் எழுதிய ‘தமிழர்கள் எதில் குறைந்து போய்விட்டார்கள்’ எனும் புத்தகத்தில் – பாரம்பரிய உணவு, சித்த மருத்துவமுறை பற்றி மிக எளிமையாக எழுதியுள்ளார்.

இதுபோன்ற நூல்கள் மூலமும் நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கட்டுப்பட்டிருக்கும் நாம் சிறந்த சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள தவறிவிடுகிறோம்.

தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறைகளை மீட்டெடுத்து ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவோம்.

  • தனுஷா
Comments (0)
Add Comment