டிசம்பர் 21: தோழர் ஆர். உமாநாத்தின் பிறந்த நாள்:
*
தோழர் ஆர். உமாநாத் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 1921-ம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்த இவர் தமது மாணவப் பருவத்திலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பின்போது, சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகக் கடிதத்துடன் பல்கலைக்கழகத்தில் இருந்த பொதுவுடைமைக் குழுவில் சேர்ந்தார்.
கட்சிக் கேட்டுக் கொண்டதன் படி, கல்லூரிப் படிப்பைத் துறந்து, சென்னையில் உள்ள தலைமறைவு மையத்திலிருந்து மாநிலம் முழுவதும் ரகசியமாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் கூரியர் பணியை ஏற்றுக்கொண்டு, முழுநேர ஊழியராகக் கட்சிப்பணியில் ஈடுபட்டார்.
1940-ல் சென்னை சதி வழக்கில் பி. ராமமூர்த்தியுடன் கைதுசெய்யப்பட்ட உமாநாத் மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்தார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கும் அவர், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டார்.
டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் போது உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது தமிழக முதல்வர் அண்ணா தலையிட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
1962-ல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார்.
1967 தேர்தலிலும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார்.
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாதுழைத்த தோழர் ஆர். உமாநாத் உடல் நலக் குறைவால் 2014-மே 21ல் திருச்சியில் காலமானார்.
அவரது கண்கள் அவரது விருப்பப்படி தானம் செய்யப்பட்டன.
– தோழர் கணேசன்