சில இயக்குநர்களின் திரைப்படங்கள் கமர்ஷியல் மதிப்பீடுகளுக்கும் கலையம்சங்களுக்குமான இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தும். இரு வேறு விதமான ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதோடு, அந்த இயக்குநரின் முத்திரையும் அப்படைப்பில் தென்படும்விதமாக அமையும்.
அப்படிச் சமீபகாலமாக நம்மை வசீகரித்து வருகின்றன வெற்றிமாறனின் படங்கள். அவர் இயக்கிய ‘விடுதலை’ படத்தில் சூரியைக் கதைநாயகனாக அறிமுகப்படுத்தியிருந்தார். இப்போது, இதன் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.
எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது ‘விடுதலை 2’?
பயணத்தில் வெளிப்படும் வரலாறு!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தமிழர் படை எனும் இயக்கத்தின் தலைவர் பெருமாளைக் (விஜய் சேதுபதி) கைது செய்யக் காரணமாக இருக்கிறார் கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி).
தமிழர் படையைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து விசாரிக்கும் முகாமுக்கு பெருமாள் கொண்டுவரப்படுகிறார். போலீஸ் அதிகாரி சுனில் (கௌதம் மேனன்) அவரிடம் விசாரிக்கத் தொடங்குகிறார்.
பெருமாள் போலீசிடம் சிக்கிய விவரம் பத்திரிகைகளில் வெளிவராமல் தடுக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அரசின் தலைமைச்செயலாளர் சுப்பிரமணியன் (ராஜிவ் மேனன்) இருக்கிறார். பொதுமக்களுக்கும் தமிழர் படையைச் சேர்ந்தவர்களுக்கும் பெருமாள் இருக்குமிடம் தெரிவதற்கு முன்னதாக, அவரை இடம் மாற்றுவதென்று முடிவு செய்யப்படுகிறது.
அதையடுத்து, பெருமாளை அருமபுரி மாவட்ட எல்லையில் இருக்கும் காவல் துறைக்கு அவரை அனுப்பு முடிவு செய்யப்படுகிறது. தனிப்படை அதிகாரி ராகவேந்திரா (சேத்தன்) தலைமையில் ஒரு குழு பெருமாளை அழைத்துச் செல்கிறது.
அதேநேரத்தில், முகாமில் பெண்களுக்கும் மலைக்கிராம மக்களுக்கும் இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை ஒரு பத்திரிகை நிருபர் புகைப்படமெடுக்கிறார். அடுத்த நாள் வெளியாகும் தமிழ் செய்தி தினசரியில் வெளிவருவதற்கான வேலைகள் நடக்கின்றன.
இந்த நிலையில், காட்டுக்குள் நடைப்பயணமாக எல்லைப்பகுதி காவல் துறை முகாமுக்குப் பெருமாளை அழைத்துக்கொண்டு செல்கின்றனர் சிறப்பு படையினர்.
செல்லும் வழியில், தனது இளம்பிராயத்து அனுபவங்களை, நிகழ்வுகளை உடன் வரும் போலீசாரிடம் பகிர்கிறார் பெருமாள். அதனைச் சக போலீசாரோடு சேர்ந்து குமரேசனும் கேட்கிறார்.
‘வன்முறையே கூடாது’ என்ற எண்ணம் கொண்ட பள்ளி ஆசிரியரான பெருமாள், தான் வாழ்வில் கண்ட கருப்பன், தோழர் கே.கே., மகாலட்சுமி, சார்லஸ் உள்ளிட்ட பலரையும் பற்றி அவர்களிடத்தில் சொல்கிறார். அதுவே, தமிழர் படை தலைவராகப் பெருமாள் மிளிர்ந்ததைச் சொல்கிறது.
‘நம்ம வரலாறை கதையா கூட சொல்லவிடாமப் பண்ணிட்டு, ஒரு கதைய வரலாறா சொல்றதுதான் இதுவரை நடந்திருக்கு’ என்கிற தொனியில் பெருமாள் பேசுகிற ‘அரசியல் சித்தாந்தப் பேச்சுகள்’ தொடக்கத்தில் போலீசாருக்கு கிண்டலாகப் படுகிறது.
மெதுமெதுவாக, அவர் சொல்கிற நிகழ்வுகள் அவர்களது இயல்பை மாற்றுகிறது. கைதியாக அழைத்துச் செல்பவரை முதலில் மனிதனாக நோக்குகின்றனர். அடுத்து அவர்கள் என்னவிதமாகப் பார்த்தனர் என்பதை அறிவதற்குள் ஒரு ஆபத்து சூழ்கிறது. அதன்பின் என்னவானது என்பதைச் சொல்கிறது ‘விடுதலை 2’வின் மீதிப்பாதி.
பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பேசும் இயக்கத்தவராக இருந்த ஒருவர், அதன் தத்துவங்களைத் தாங்கிய தீவிர இயக்கமொன்றை எப்படி உருவாக்கினார் என்பதைச் சொல்கிறது இப்படம்.
முதலாளித்துவமும் சாதீய வெறியும் அதிகார பீடமும் எவ்வாறு சாதாரண மக்களை அடக்கி ஒடுக்குவதில் கைகோர்த்தன என்பதைப் பேசுகிறது.
அந்த அரசியலைத் தெரிந்துகொள்ள அறவே விரும்பாதவர்களுக்கு, இப்படம் ‘அருவெருப்பாக’ தெரியும்.
’எளிய மக்கள் அமைதியான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வைப் பெற வேண்டும்’ என்று விரும்புபவர்களுக்கு இப்படம் வித்தியாசமானதொரு திரையனுபவத்தைத் தரும்.
வசனங்களைக் குறைத்திருக்கலாம்!
‘விடுதலை’ படத்தின் கிளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான சில காட்சிகளைச் சுருக்கமாகக் காட்டியிருப்பார் இயக்குநர் வெற்றிமாறன்.
அக்காட்சிகளின் ஊடே, பெருமாள் பாத்திரம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை ‘பிளாஷ்பேக்’ ஆக காட்டியிருக்கிறார் இந்த இரண்டாம் பாகத்தில்.
முதல் பாகம் போலவே, இதிலும் வேல்ராஜின் ஒளிப்பதிவு, ராமரின் படத்தொகுப்பு, ஜாக்கியின் தயாரிப்பு வடிவமைப்பு, பிரதாப்பின் ஒலி வடிவமைப்பு என்று தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இதில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.
இளையராஜாவின் இசையில் ‘தினம் தினமும் உன் நினைப்பு’ பாடல் சட்டென்று ஈர்க்கிறது. பின்னணி இசையோ, ஒவ்வொரு காட்சியையும் தூணாகத் தாங்கிப் பிடிக்கிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, படம் முழுக்க விஜய் சேதுபதியே வியாபித்திருக்கிறார். அவர் கதை சொல்வதாகவே, திரைக்கதை நகர்கிறது. அதனால், அவருக்கான காட்சிகள் இதில் மிக அதிகம். அவையனைத்திலும் சிறப்பாகத் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மஞ்சு வாரியாருக்கு இதில் நல்லதொரு பாத்திரம். பாப் கட் தலையுடன் வருபவர், அதற்கான காரணம் சொல்லும் காட்சி முதல் கிளைமேக்ஸ் வரை தனது பங்கினை இதில் படர விட்டிருக்கிறார்.
முதல் பாகத்தைப் போலவே இதிலும் ராஜிவ் மேனன், கௌதம் மேனன், இளவரசு, சரவண சுப்பையா தொடங்கி சேத்தன் உடன் வரும் போலீசார் வரை பல பாத்திரங்கள் வந்து போகின்றன. ஆனால், முதல் பாகத்தில் இருந்த சமமான முக்கியத்துவம் இதில் இல்லை.
‘ஒரு ஊர் நல்லாயிருக்கணும்னா ஒரு தெருவைப் பலி கொடுக்கலாம்னு சொல்றவங்க, அந்த தெருவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்சமானவங்க இருந்தாலும் அதையே சொல்வீங்களா’ என்கிற தொனியில் விஜய் சேதுபதி பேசுவதாக ஒரு வசனம் உண்டு. அது போன்ற சில வசனங்கள் கைத்தட்டலை அள்ளுகின்றன.
அதேநேரத்தில், பொதுவுடைமை தத்துவங்களை மேடைப்பேச்சு தொனியில் வசனங்களாகத் தவழ விட்டிருப்பது கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது.
அவற்றை வாழ்வனுபவங்களோடு தருவதுதான் சிறந்த உத்தியாக இருக்க முடியும்.
அதேபோன்று, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஒரு கதையைச் சொல்லும் உத்தியை வெகுசாமர்த்தியமாகக் கையாள்பவர் வெற்றிமாறன். ‘விடுதலை-2’விலும் அதனைப் பயன்படுத்தியிருக்கிறார்.
சூரி – பவானிஸ்ரீ கெமிஸ்ட்ரி முதல் பாகத்தில் இருந்ததைப் போல, இதில் விஜய் சேதுபதி – மஞ்சு வாரியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன.
ஆனால், அவர்கள் இருவருக்குமான முக்கியத்துவம் முதல் பாகம் விட்ட இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் தொடர்வதைப் பல இடங்களில் மறக்கச் செய்திருக்கிறது. இதில் பவானிஸ்ரீ உள்ளிட்ட சிலருக்கு இடமே தரப்படவில்லை.
கென் கருணாஸ், போஸ் வெங்கட், வின்செண்ட் அசோகன் உள்ளிட்ட சிலர் வரும் காட்சிகள் தாக்கம் ஏற்படுத்துவதாக உள்ளன. ஆனால், அவற்றில் பழைய படங்களின் வாசனை அதிகம்.
சில காட்சிகளில் ‘டப்பிங்’ பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. வாயசைப்புக்கும் வசனங்களுக்கும் சுத்தமாகச் சம்பந்தமில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. கிளைமேக்ஸ் காட்சியில் வரும் விஎஃப்எக்ஸும் கூட திருப்தி தரவில்லை. இப்படிச் சில அதிருப்திகள் படத்தில் உண்டு.
வெற்றிமாறனும் அவரது குழுவினரும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கின்றனர். அந்த உழைப்பு திரையில் தெரிகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கான காரணங்கள் படக்குழுவினருக்கே வெளிச்சம். மற்றபடி, அரசியல் படமாக நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது ‘விடுதலை 2’.
இதில் பல இடங்கள் ‘ம்யூட்’ செய்யப்பட்டிருக்கின்றன. சில கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படும்போது ஏதோ ஒன்று விடுபட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
அவற்றைத் தேடும்போது, ரசிகர்கள் இப்படத்தில் ஒளிந்திருக்கும் வேறு சில கதைகளைக் கண்டெடுக்கலாம்.
‘விடுதலை 2’வில் எத்தனை சதவிகிதம் உண்மை, புனைவு என்பதைப் பிரித்துணரலாம். அதனை நோக்கி உந்தும் அளவுக்கு, இன்னும் சிறப்பாக இப்படத்தைத் தந்திருக்கலாம்.
முதல் பாகம் பார்த்தவர்களில் வெகு சிலர், ‘இரண்டாம் பாகம் இப்படித்தான் இருக்கும்’ என்ற அனுமானத்துடன் படம் பார்க்கச் செல்வார்கள்.
அவர்களைக் கொஞ்சமும் ஏமாற்றாமல் அந்த எதிர்பார்ப்புடன் பொருந்தி நிற்கிறது ‘விடுதலை 2’. ஆனால், வெற்றிமாறன் போன்ற இயக்குனரிடம் எதிர்பார்ப்புக்கு மேலான அனுபவத்தை பெறத்தானே பார்வையாளர்கள் விரும்புவார்கள்!?
– உதயசங்கரன் பாடகலிங்கம்