நாட்டுக்கு சட்டம் வகுத்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கரை, இப்போது அரசியல்வாதிகள், தங்கள் சவுகரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது, அவரைப் பின்பற்றும் அபிமானிகளை வேதனை அடையச்செய்துள்ளது.
அம்பேத்கரை மையமாகக் கொண்டு சென்னையில்தான் முதன் முதலில் சர்ச்சை உருவானது.
சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல், இந்த விழாவும் சர்ச்சையில் ஆரம்பித்து சர்ச்சையிலேயே முடிந்தது.
பல மாதங்களுக்கு முன்பாக இந்த நூல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நூலை வெளியிட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொள்வதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
வெளியீட்டு விழா தாமதமானது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட, திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என ஓர் திருத்த அறிவிப்பு வெளியானது.
இதற்கு இருவருமே ஒப்புக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் விஜய் கட்சி ஆரம்பித்திருந்தார். ஆனால் விக்கிரவாண்டி மாநாடு நடைபெற்றிருக்கவில்லை.
அந்த மாநாட்டில் விஜய், திமுகவை விமர்சனம் செய்ததோடு, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு அளிப்போம்” என பிரகடனம் செய்தார்.
மேலும் சில கருத்துக்களையும் தெரிவித்தார். இவற்றில் திருமாவளவனுக்கு உடன்பாடு இல்லை.
இதனால் கடைசியாக நாள் குறிக்கப்பட்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. ஆனாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
விழாவில் அவர், திமுகவை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்க்க, திருமாவளவனுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை. ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் திருமாவளவனுக்கு நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்பட்டது.
இரு தரப்புமே இதனை மறுத்த நிலையில் ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இதனை முதலில் ஏற்றுக்கொண்ட, ஆதவ், விசிகவில் இருந்து நிரந்தரமாக விலகி விட்டார்.
சென்னையில் இந்தப் பிரச்சினை இப்போதும், நீறுபூத்த நெருப்பாகவே இருக்கும் சூழலில் டெல்லியில் அம்பேத்கரை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் ஆடும் விளையாட்டு, தலைநகரை ரணகளம் ஆக்கியுள்ளது.
என்ன நடந்தது?
அமித்ஷா பற்ற வைத்த தீ:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 17-ம் தேதி உள்துறை அமித்ஷா, அம்பேத்கர் குறித்து தேவையே இல்லாமல் சர்ச்சையை உருவாக்கினார்.
‘அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்’ என்று சொல்வது இப்போது ‘பேஷனாகி விட்டது – கடவுள் பெயரை இப்படிக் கூறி இருந்தால், சொர்க்கத்திலாவது, அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என கொளுத்திப் போட்டார்.
டெல்லியில் அவர் வைத்த நெருப்பு நாடு முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது. இப்போது, நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும், நீயா ? நானா ? என டெல்லியில் கயிறு இழுக்கும் போட்டியை நடத்திக்கொண்டிருக்கின்றன.
இதன் உச்சமாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைதாகும் சூழலை உருவாக்கியுள்ளது.
அமித்ஷா பேச்சைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். ஆனால், காங்கிரஸ் கட்சியே அம்பேத்கரை இழிவுபடுத்தியதாகச் சொல்லி பாஜகவினர் போட்டிப் போராட்டத்தை நடத்தினர்.
இரு தரப்பினரும் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பாஜக எம்பி அனுராக் தாக்கூர் போலீசில் புகார் அளித்தார்.
டெல்லி போலீசார் ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
இதனிடையே நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் இன்று ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மோதிக்கொள்வதற்கு வாய்ப்பில்லை.
பொதுவெளியில் சண்டை போட்டுக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை.
சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே நிஜம்.
– பாப்பாங்குளம் பாரதி