‘ஊம்ப்’ (WOMB) என்றால் கருப்பை. ‘விமன் ஆஃப் மை பில்லியன்’ (WOMEN OF MY BILLION) என்ற சொற்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்தும் இந்த ஆவணப்படத்தின் தலைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
‘எனது நூறு கோடிகளின் பெண்கள்’ என, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் மேற்கொண்ட நடைபயணத்தின் பில்லியன் அடிகளில் சந்தித்த பெண்கள் பற்றிக் கூறுகிறார் பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர் ஷ்ருஷ்டி பாக்‘ஷி.
தில்லி காவல்துறை அதிகாரி அபூர்வா பாக்‘ஷி, திரைப்பட நடிப்புக் கலைஞர் பிரியங்கா சோப்ரா இருவருமாக இதனைத் தயாரித்திருக்கிறார்கள். அஜிதேஷ் சர்மா இயக்கியிருக்கிறார்.
சபித் டிசேகர், மனாஸ் திவாரி, பிரகார் தீப் ஜெயின், கேவல் காரியா ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்தார் ஜுனைத் இசையமைக்க, கர்ஷ் ஜாவேரி தொகுத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஹாங்காங் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தவர் ஷருஷ்டி. 2016ல் தில்லி நெடுஞ்சாலையில் ஒரு பெண்ணும் அவரது மகளும் வன்முறையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தியைப் பார்க்கிறார்.
அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தவருக்கு, இந்தியாவில் நாள்தோறும் நடைபெறுகிற பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் பற்றிய விவரங்களும், ஆணாதிக்க சமூக அமைப்பில் அந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை மறக்கப்பட்டுவிடுவது பற்றிய நிலவரங்களும் தெரிய வருகின்றன.
இதைத் தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன், வேலையிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்புகிறார். அதற்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப் பணிகளில் ஈடுபடுகிறார்.
WOMB: Women of My Billion ஆவணப்படம் விமர்சனம் Documentary – raise awareness of the rising tide of violence against women in India https://bookday.in/
அதன் ஒரு பகுதியாக, உண்மை நிலைமைகளை நேரில் விசாரித்து அறிவதற்காகவும், பயிலரங்குகளை நடத்துவதற்காகவும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு ஒரு நடைபயணத்தைத் தனது குழுவினரோடு மேற்கொள்கிறார்.
மொத்தம் 3,800 கி.மீ. தொலைவு. 240 நாட்கள். வழியில் பல கிராமங்களிலும் நகரங்களிலும், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல பெண்களைச் சந்திக்கிறார்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சமூகக் கூடங்களிலும் பயிலரங்குகளை நடத்துகிறார். அந்தச் சந்திப்புகளும், கொடுமைகளை மீறி சாதித்துக் காட்டிய மூன்று பெண்களின் அனுபவங்களும் இந்த 100 நிமிடப் படத்தில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
குடும்ப வன்முறையால் துன்புறுத்தலுக்கு உள்ளானவர், கணவனின் வரம்பில்லாத பாலியல் அத்துமீறல்களால் குலைந்து போனவர், முகத்தில் ஆசிட் வீசப்பட்டவர் ஆகிய மூவரின் கதைகள் உறைந்துபோக வைக்கின்றன.
கணவனின் கொடுமைகள் பற்றி பெற்றோர்களிடமும் அதிகாரிகளிடமும் தெரிவித்தபோது, “குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும், அனுசரித்துக்கொண்டு போக வேண்டியதுதான்,” என்று அவர்கள் சொன்னது அதைவிடவும் கொடுமை. அப்படித்தானே எங்கும் சொல்லப்படுகிறது?
திருமணத்திற்காக மருத்துவப் படிப்பைத் துறக்கிற ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறக்கிறபோது, அது தனக்குப் பிறந்ததல்ல என்று அவதூறாகப் பழி போட்டுத் துன்புறுத்தலைத் தொடர்கிறான் கணவன். அவனிடமிருந்து விலகுவதற்கும், தொடர்ந்து படிப்பதற்கும் தந்தை உறுதுணையாக இருக்கிறார்.
படித்து முடித்தபோது, ராணுவத்திற்கான மருத்துவர் பணிக்கு விண்ணப்பித்துத் தேர்வாகிறார். தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டவர், தனது மகனும் அந்தச் சீருடையும் தன்னம்பிக்கை வளரக் காரணமாக இருந்ததைப் பகிர்கிறார்.
கணவன் விட்டுவிட்டுப் போன பிறகு சிறிது காலம் நிலைமைகளோடு போராடிய ஒரு பெண், தற்போது தன்னைப் புரிந்து கொண்ட ஒருவரை மறுமணம் செய்துகொண்டு உடல் காயங்களையும் மன வலிகளையும் மறந்து வாழ்கிறார்.
ஆசிட் வீசப்பட்டு, ஒரு கண்ணை மூடவே முடியாத அளவுக்கு இமைகளை இழந்து முகத்தின் ஒரு பகுதி சிதைந்து போனவர், தொடக்கத்தில் அந்தக் குற்றவாளியைப் பிடித்து அதே தண்டனையை அளிக்கத் துடித்தார்.
பின்னர் இதே போல் ஆசிட் தாக்குதல்களுக்கு இலக்கான பெண்களுக்கென ஒரு அமைப்பைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இவர்களின் மீட்சிகள் நிச்சயம் நல்ல வழிகாட்டிகள்தான்.
WOMB: Women of My Billion ஆவணப்படம் விமர்சனம் Documentary – raise awareness of the rising tide of violence against women in India https://bookday.in/
ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ஒரு கும்பல், கத்த முடியாமல் வாயை மூடி வல்லுறவு செய்கிறது. யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறவர்களிடம், கண்டிப்பாகச் சொல்வேன் என்று சொன்ன சிறிமியின் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்திவிட்டு ஓடிவிடுகிறது அந்தக் கும்பல்.
அலறல் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள், அங்கே அவள் ஏற்கெனவே இறந்துவிட்டதைத் தெரிவிக்கிறார் மருத்துவர்.
சிறுமியின் தாயார், உறவினர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதால் தானும் ஒரு ஆண் குழந்தை பிறக்க விரும்பியதையும், ஆனால் நான்குமே பெண்ணாகப் பிறந்ததையும் கூறுகிறார்.
ஆயினும் அந்தச் சிறுமியின் மீது எல்லோருமே பாசத்துடன் இருந்ததையும் சொல்லி அழுகிறாள். மனம் உடைந்தவராக ஷ்ருஷ்டி முகத்தைக் கவிழ்த்துக்கொள்கிறபோது அந்தத் துயரம் நம்மையும் அழுத்துகிறது.
ஒரு பயிலரங்கில் பங்கேற்ற பெண்கள் அனைவரையும் கண்களை மூடிக்கொள்ளச் சொல்கிறார் ஷ்ருஷ்டி. எல்லோரும் அவர்களுடைய 11 வயதில் எப்படி இருந்தார்களோ அப்படி மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தச் சொல்கிறார்.
அந்த வயதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும், குடும்பம் எப்படியெல்லாம் கொஞ்சியிருக்கும், நண்பர்களோடு எவ்வாறெல்லாம் விளையாடியிருப்பார்கள் என்று அந்த நாட்களுக்கே போய் நினைத்துப் பார்க்கச் சொல்கிறார்.
அந்தக் கனவுகள் எப்படிக் கலைந்தன, யாரால் கலைந்தன என்று கேட்கிறார். எல்லோருடைய முகங்களிலும் கண்ணீர் வடிகிறது. கண்களைத் திறந்து கைகளை விரிக்கச் சொல்கிறார். பக்கத்தில் இருப்பவர்கள் மேல் கைகள் படுகின்றன.
அப்படியே அவர்களின் முதுகுகளில் தட்டிக்கொடுக்கச் சொல்கிறார். ஒருவர்க்கொருவர் ஆதரவாக இருப்பது முதல், இனி வரும் தலைமுறைகளின் கனவுகள் கலையாமலிருக்கத் துணையாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது வரையில் கண்களைத் திறக்க வைக்கிற நிகழ்ச்சி/காட்சி அது.
WOMB: Women of My Billion ஆவணப்படம் விமர்சனம் Documentary – raise awareness of the rising tide of violence against women in India https://bookday.in/
கைப்பேசியில் உள்ள இணையத் தொடர்பு மூலம் சமையல் குறிப்புகள் அல்லாமல் எப்படி உலகத்தையே தெரிந்துகொள்ள முடியும் என்று கூடியிருக்கும் பெண்களுக்குச் செய்துகாட்டுகிற, மாணவன்களிடமும் உரையாடி உடன் பயிலும் மாணவிகள் பற்றி இளக்காரமாக நினைத்தது பற்றிய உறுத்தலுணர்வை ஏற்படுத்துகிற காட்சிகளும் நிறையப் பேசுகின்றன.
எதிர்நீச்சல் போட்ட ஒருவர் பேசுகிறார்: “பெண்ணாக யாரும் பிறப்பதில்லை. மனுசியாகத்தான் பிறக்கிறோம். சமூகம்தான் எப்படியெப்படி இருக்க வேண்டுமென்று உபதேசித்துப் பெண்ணாக மாற்றுகிறது.” இந்தக் கருத்துக்காகவே இன்னுமுள்ள மொழிகள் அனைத்திலும் வரவேண்டிய படம் இது.
ஒரு தன்னார்வ அமைப்புக்கே உரிய இயல்புகளுடனும், வலைப்பின்னலாக உள்ள ஏற்பாடுகளுடனும் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாலினப் பாகுபாடுகளுக்கு எதிராகப் பெண்களைத் திரட்டிக் களம் காண்கிற இயக்கங்கள் பற்றியோ, பெண்ணின் சுயமரியாதையை உயர்த்திப் பிடித்த, பிடிக்கிற தலைவர்கள் பற்றியோ மேற்கோளாகக் கூட எதுவும் குறிப்பிடவில்லை. அதைச் செய்திருந்தால் படம் மேலும் சிறப்பாக உருவெடுத்திருக்கும். அவர்கள் என்னவோ இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்.
Women of My Billion review – Srishti Bakshi-led documentary shines a light on inequality
ஆயினும், படமாகவும் தனி மனிதப் பங்களிப்பாகவும் பல விருதுகள் கிடைத்திருப்பது நியாயமே என்று நிறுவுகிறது இந்தக் கருப்பை.
#WOMB_Women_of_My_Billion #WOMB #Women_of_My_Billion_Documentary #ஊம்ப் #WOMB #கருப்பை #விமன்_ஆஃப்_மை_பில்லியன்_விமர்சனம்