சாகித்ய அகாடமி விருது சில நேரங்களில் பொருத்தமான நபர்களுக்கு விமர்சனங்கள் ஏதுமற்ற நிலையில் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படித் தான் நடந்திருக்கிறது இந்த ஆண்டும் 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது.
நீண்ட காலமாக ஆய்வுத் துறையில் ஈடுபட்டிருப்பவரான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அளிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. சாகித்ய அகாடமி குழுவில் நடுவர்களாக இடம்பெற்று இவரை தேர்வு செய்தவர்களுக்கும் சேர்த்துதான் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.
சென்னையைப் பின்புலமாகக் கொண்ட ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழ் இயக்கத்துடன் தீவிரமாகப் பங்கேற்றவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்.
புதுமைப்பித்தனைப் பற்றி ஆய்வு நோக்கத்துடன் பல தகவல்களை ஒருங்கிணைத்து, அவருடைய படைப்புகளைத் தொகுப்பாக அவர் கொண்டு வந்தபோது, புதுமைப்பித்தன் கூடுதல் கவனத்துடன் கவனிக்கப்பட்டார்.
அதேமாதிரி பாரதி பற்றிய அவருடைய ஆய்வுகளும் கூடுதல் உழைப்பையும் சிரத்தையையும் உள்ளடக்கியவை.
குறிப்பாக வாஞ்சிநாதன் குறித்த தகவல் ஒன்றுக்காக, வாஞ்சிநாதனால் சுடப்பட்டு இறந்த ஆஸ் துரை என்று அழைக்கப்படும் ஆங்கிலேயருடைய குடும்பத்தினரைத் தேடி வெளிநாட்டுக்குச் சென்று, அவரிடம் கூடுதலான தகவலைத் திரட்டி அவர் பதிவு செய்திருப்பதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
இந்த மாதிரியான நேரடியான கள ஆய்வு அனுபவங்களுடன் தொடர்புடையதாகவே அவரது நூல்கள் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. அந்த வகையில்தான் வ.உ.சி.யைப் பற்றிய விரிவான பார்வையையும் அனுபவச் செறிவையும் உள்ளடக்கியது தற்போது பரிசு பெற்றிருக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ நூல். இந்த நூலிலும் அவருடைய கூடுதல் உழைப்பு வெளிப்பட்டிருக்கிறது.
ஆய்வாளரான தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றவர்களுடைய வரிசையில் இடம்பெறத்தக்கவரான வேங்கடாசலபதியின் பெரும்பாலான நூல்களை காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.
அப்படிப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் தான் தற்போது சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிற ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தாய் இதழ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகள்.