புலம்பெயரும் சமூகங்களால் நிறையும் உலகம்!

டிசம்பர் 18 – சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் தினம்

புலம் பெயர்ந்தவர். இந்தச் சொல்லைக் கேட்டவுடன் பயமும் பதற்றமும் கொள்பவர்கள் உண்டு. இழிவும் எரிச்சலும் கொள்பவர்களும் உண்டு. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இவ்வார்த்தைக்கான அவரவர்க்குக் கிடைக்கும்.

ஆனால், இந்தச் சொல் இந்தப் பூமியில் பிறந்த அனைவருக்குமானது என்பதை அறிந்தவர்கள், தலைக்கு மேலிருக்கும் வானமும் கீழிருக்கும் நிலமும் நிரந்தரமல்ல என்பதை உணர்ந்தவர்களாக இருப்பவர்கள்.
காரணம், மனிதன் என்ற உயிரினமே இந்தப் பூமியின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து தான் இன்று எங்கும் பரந்து நிறைந்திருக்கிறது. கடந்த காலங்களில் நிகழ்ந்த பேரழிவுகள் அதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
பொதுவாக, புலம் பெயர்ந்தவர்கள் என்பது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்பவர்களையே குறிக்கிறது.
வறுமை, வசதி வாய்ப்புகளற்ற தன்மை, வேலைவாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், சிறப்பான வாழ்க்கை முறை, அமைதியான சூழல், அடையாளத்தை உதறித்தள்ள வேண்டிய கட்டாயம்,
அடுத்த தலைமுறையினர் குறித்த கவலை, வாழ்விடத்தில் நிகழும் ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் என்று அதன் பின்னே இருக்கும் காரணங்கள் பல.
அனைத்துக்கும் மேலாக சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளே முக்கியப் பங்காற்றுகின்றன. போர்ச்சூழலும் சக மனிதர்களின் வெறுப்பும் புலம்பெயர்தலுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
அப்படி ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐம்பதாண்டுகளில் பல மடங்காக அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்க கண்டம் நோக்கி அதிகளவில் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
அங்கு நிலவுகிற உள்நாட்டுப் போர் தொடர்பான பிரச்சனைகள் அதன் பின்னணியில் இருக்கின்றன.
ஆசியாவைப் பொறுத்தவரை, நமது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தானில் இருந்து வளர்ந்த நாடுகளுக்கு இடம்பெயர்வது பலகாலமாகத் தொடர்ந்து வருகிறது.
அதற்கான வாழ்விடம் மற்றும் உயிராபத்து சார்ந்த பிரச்சனைகளுக்காக மட்டுமே மக்கள் புலம்பெயர்கின்றனர் என்று நினைத்துவிட முடியாது.
தற்போதிருப்பதை விடப் பல மடங்கு வசதியான வாழ்க்கை முறையை வேண்டி, புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்து, வெளிநாடுகளில் செட்டில் ஆகிறவர்களையும் அந்த கணக்கில் கொள்ளலாம்.
அப்படிப் பார்த்தால் இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள்தொகை நாடுகளில் இருந்து ‘ஒயிட் காலர்’ வேலைகளைச் செய்வதற்காக இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை கணிசம்.
இது போக வாகன ஓட்டுநர், கட்டுமானப் பணியாளர், பொறியியல் பணிகளில் ஈடுபடுவோர் என்று உடலுழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளுக்குக் குடும்பத்தோடு இடம்பெயர்பவர்களும் உண்டு.
சில நூறாண்டுகளுக்கு முன்னர் மொரிஷியஸ், பிஜி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு நம்மூரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களும் இருந்திருக்கின்றனர்.
‘அந்த அட்டை வாங்கியாச்சு, இந்த அட்டை வாங்கியாச்சு’ என்று வெவ்வேறு நாடுகளில் முழுதாக வேருடன் தங்களை நட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டுபவர்களை, இன்றும் நாம் காண முடியும்.
ஆக, மேற்சொன்ன அனைவருமே புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் இடம்பெறுபவர்கள் தான். ஆனால், அவர்களில் சிலர் உரிய அடிப்படை உரிமைகளை, தாங்கள் கனவு கண்ட வாழ்வை அடைய முடியாமல் இடம்பெயர்ந்த நாடுகளில் கஷ்டப்படுகின்றனர்.
அவர்களது நலன்களை வலியுறுத்தவே, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று ‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
2000-வது ஆண்டு ஐநா பொதுச்சபையில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டு, 2003 முதல் ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் இத்தினம் பின்பற்றப்படுகிறது.
’புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பினை கௌரவிப்போம், அவர்களது உரிமைகளை மதிப்போம்’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
உலகமயமாக்கலுக்குப் பிறகு, ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்பவர்கள் மட்டுமல்லாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்பவர்களின் அனுபவங்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
கடந்த இருபதாண்டுகளில் தென்னிந்திய மாநிலங்களில் அதிகரித்துவரும் பீகார், மேற்குவங்காளம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் வருகையே அதற்குச் சாட்சி.
மாநிலங்கள் என்றில்லை, தான் வாழும் கிராமத்தை விட்டு அருகிலுள்ள நகரத்திற்குக் குடும்பத்தோடு செல்கிற மனிதரும் அதே போன்ற வலியையும் வேதனையையும் தான் எதிர்கொள்ள நேரிடும்.
அந்த வகையில், இந்தப் பூமியே புலம் பெயரும் சமூகங்களால் நிறைந்தது.
வாடகை வீடுகளில் வசிக்கிற சிறு குழந்தைகளுக்கு, இன்னொரு இடத்திற்குக் குடிபோவது என்பதே வேதனை தருவதாக இருக்கும்.
அங்கிருப்பவர்களோடு நட்பு பாராட்டுவது அயர்ச்சி தருவதாக இருக்கும். அப்படியிருக்க, முற்றிலும் புதிய சூழலில் ஒரு பெருமரத்தை வேரோடு பிடுங்கி நடுவதற்கு ஒப்பானதாக உள்ளது புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வு.
அதற்கு மதிப்பளிப்பதும், அடிப்படை உரிமைகளோடு அவர்களை வாழச் செய்வதும் சக மனிதர்களின் கடமை. அதனை இந்நாளில் நினைவுகூர்வோம், தினசரி வாழ்வில் செயல்படுத்துவோம்!
மாபா
Comments (0)
Add Comment