நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது.
அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என்று பேசினார்.
அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, அமித்ஷா அம்பேத்கரை அவமதித்ததாக விமர்சித்த ராகுல் காந்தி, மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார் என தெரிவித்தார்.
****
இதற்கிடையே, அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுபவர்கள், புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள், அம்பேத்கர் பெயரை தான் சொல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
****
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்.
அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் “விசுவரூபம்” எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்! என கண்டனம் தெரிவித்துள்ளார் விசிக தலைவரும் எம்.பி.யுமான முனைவர் தொல்.திருமாவளவன்.
*****
அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இதுகுறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸை தாக்கல் செய்துள்ளார்.
*****
இதனிடையே, எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, மாநிலங்களவையில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.