ஒரு திரைப்படத்தின் வெற்றியும் தோல்வியும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரது திரை வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேநேரத்தில், திரையுலகினரும் ரசிகர்களும் ஒருசேர வாய்ப்புகள் தரும் பட்சத்தில் அவர்களது தோல்விகள் கூடப் புறந்தள்ளப்படும். தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்தும் பெரிதாகக் கவனம் பெறாமல்போய், திடீரென்று ரசிகர்களால் அரவணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு வெற்றியால் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறந்த கலைஞராக உலா வருவது வெகுசிலருக்கே நிகழும். அப்படியொருவர் தான் நடிகை ஊர்வசி.
மீண்டும் தமிழில்..!
1986-க்குப் பிறகு மெதுவாக மலையாளக் கரையோரம் ஒதுங்க ஆரம்பித்தார். ஆண்டுக்கு ஒன்று, இரண்டு என்று தமிழில் தலைகாட்டத் தொடங்கினார். பாட்டி சொல்லை தட்டாதே, மைக்கேல் மதன காமராஜன், பெண்கள் வீட்டின் கண்கள், சுப்பிரமணிய சுவாமி, மகளிர் மட்டும் எல்லாம் அப்படி அமைந்தவை தான்.
அந்த வரிசையில், தமிழில் ஊர்வசி மீண்டும் இன்னொரு சுற்று வரக் காரணமாக இருந்த படம் ‘வனஜா கிரிஜா’. இந்தப் படத்தை ஒரு ‘ட்ரெண்ட்செட்டிங்’ திரைப்படம் என்றோ, மிகப்புதுமையான அம்சங்கள் இடம்பெற்ற படம் என்றோ கூற முடியாது. ஆனால், இதில் இடம்பெற்ற செல்லம்மா எனும் பாத்திரம் நிச்சயம் அதுவரையிலான தமிழ் சினிமாவில் இருந்து வேறுபட்டிருந்தது. திரையில் அந்த பாத்திரத்தைக் காண்பித்த விதமும், இதர பாத்திரங்களோடு உறவாடிய விதமும் முற்றிலுமாக இன்னொரு உலகத்திற்கு நம்மை அழைத்துப் போயின.
’செல்லம்மா’வின் கதை!
இரண்டு சகோதரிகள். அவர்கள் தங்களது தந்தையைச் சிறு வயதில் இருந்தே பார்த்ததில்லை. ஒரு நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்துவிட்டு அவர் ஓடிப்போய்விட்டதாகத் தகவல். அதற்கும் ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், அந்த நிறுவன உரிமையாளர்தான் நடந்த சதிக்குக் காரணம் என்று நம்புகிறார் அப்பெண்களின் தாய்.
அதனால், அந்த நிதி நிறுவன அதிபரை உறவாடிக் கெடுக்க முடிவெடுக்கின்றனர் அச்சகோதரிகள். முதலில் அவரது மகன்களைத் தங்களது காதலால் வீழ்த்துகின்றனர். திருமணம் செய்கின்றனர். அவரது வீட்டுக்குள் நுழைந்தபிறகுதான், அவர்களது ‘பாச்சா’ பலிக்காது என்று தெரிகிறது.
உடனே, தங்களுக்குத் தெரிந்த ஒரு வேலைக்காரப் பெண்மணியைத் தேடிக் கண்டுபிடித்து அங்கு அழைத்து வருகின்றனர். அவர் ஒரு வெகுளிப் பெண். ‘அவரால் அந்த குடும்பத்தை என்ன செய்துவிட முடியும்’ என்று நினைப்பதே பார்வையாளர்கள் இயல்பு.
அவ்வாறில்லாமல், அந்த வேலைக்காரப் பெண் செய்யும் காரியங்கள் எப்படி அந்த சகோதரிகளின் சதிச்செயலுக்குத் துணையாக இருக்கிறது என்பதைச் சொல்லும் இப்படத்தின் இரண்டாம் பாதி.
கேட்கச் சாதாரணமாகத் தெரியும் இக்கதையைத் திரையில் சிரித்து சிரித்து மகிழும் அளவுக்குத் தந்தது திரைக்கதையாசிரியர் பஞ்சு அருணாசலம் மற்றும் இயக்குனர் கேயார் கூட்டணி. இதில் வசனம் எழுதியவர் பிரசன்னகுமார்.
ஊர்வசி உடன் இதில் குஷ்பு, மோகினி, ராம்கி, நெப்போலியன், விசு, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கார்த்திக்ராஜாவின் வண்ணமயமான ஒளிப்பதிவும் பி.லெனின் – வி.டி.விஜயனின் படத்தொகுப்போடு இளையராஜாவின் இசை ராஜாங்கமும் சேர்ந்து இப்படத்தை ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக மாற்றின.
இந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகின்றன.
பத்தாண்டுகளுக்கான வெற்றி!
வெறுமனே நான்கைந்து காட்சிகளில் வந்து போகும் செல்லம்மா என்ற வேலைக்காரப் பாத்திரத்திற்கு ‘மங்களம்’ பாடிவிடலாம் என நினைத்திருக்கின்றனர் படக்குழுவினர். ஆனால், அருவியாகக் கொட்டிய ஊர்வசியின் ‘பெர்பார்மன்ஸ்’ அதற்கான காட்சிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.
எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டோ அல்லது அழுதுகொண்டோ சொல்கிற இயல்பு கொண்ட அந்த ‘செல்லம்மா’, ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்கச் செய்தார். வெளிப்படையான, நேர்மையான, வெகுளியான அப்பாத்திரத்தின் சித்தரிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்தப் பாத்திரத்தின் தாக்கம் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் நடித்த தமிழ் படங்களில் பிரதிபலித்தது என்றால் அது மிகையல்ல.
மன்னவா, எட்டுப்பட்டி ராசா, புள்ளகுட்டிக்காரன், ஆயுதபூஜை, சிகாமணி ரமாமணி, பஞ்சதந்திரம், தமிழ், அன்பே ஆருயிரே என்று அவர் நடித்த பல படங்களில் ‘வனஜா கிரிஜா’வில் வந்த செல்லம்மாவைக் காண முடியும்.
இப்படத்தைத் தந்த குழுவினரே மீண்டும் இணைந்த ‘மாயாபஜார்’ படத்தில் இப்பாத்திரத்தின் அப்பட்டமான தழுவலைப் பார்க்கலாம்.
2000-க்கு பிறகு வந்தவற்றில் மலைக்கோட்டை, சிவா மனசுல சக்தி, வேங்கை, வணக்கம் சென்னை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்று பல படங்களில் நாயகன், நாயகியின் தாயாக அல்லது உறவினராக நடிக்கத் தொடங்கிவிட்டார் ஊர்வசி. ஆனால், அவற்றிலும் மேற்சொன்ன செல்லம்மாவின் தாக்கம் தெரிந்தது.
சமீபத்தில் ‘ஹெர்’ எனும் மலையாள ஆந்தாலஜி சினிமா குறித்த உரையாடலில், அதில் சம்பந்தப்பட்ட ஐந்து நாயகிகள் பங்கேற்றிருந்தனர். பல யூடியூப் சேனல்களில் இவர்கள் வந்து போயிருந்தனர். ஆனால், பெரும்பாலானவற்றில் தகவல்களைக் கொட்டுபவராக ஊர்வசியே திகழ்ந்தார். அவரது வெளிப்படையான பேச்சும் அதிலிருந்த சுவாரஸ்யமும் உடன் வந்த நடிகைகளால் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதிலும் கூட நம்மால் செல்லம்மாவின் இன்னொரு பரிமாணத்தைக் காண முடியும்.
கேமிராவுக்கு பின்னால், ஊர்வசி அப்பாவி வேடம் இடுவதில்லை. குழந்தைத்தனமாகப் பேசுவதில்லை. நிதானமின்மை, பதற்றம் போன்றவற்றை நிரப்பிக் கொள்வதில்லை. ஆனாலும், அவரது பேச்சுத்தொனி அடிக்கடி தமிழ் ரசிகர்களான நமக்கு ‘செல்லம்மா’வை நினைவூட்டும். அதுவே ’வனஜா கிரிஜா’ படத்தின் வெற்றி.
நாயக நாயகிகளின் கால்ஷீட் கிடைத்தவுடன், கதாசிரியரின் மனதில் இருந்த ஒரு வரிக் கதைக்கு ஒரு உருவம் தந்து, அதன்பின்னர் அதனை மேலும் மெருகேற்றி, ஒவ்வொரு பாத்திரங்களாகப் படைத்து, அதிலொன்று காலத்தால் அழியாமல் திகழ்வதெல்லாம் சாதாரண விஷயமல்ல. ஆனால், பஞ்சு அருணாசலம் – இயக்குனர் கேயார் கூட்டணி அதனைச் சாதித்தது.
அதனை உணர வேண்டுமானால், இன்றே ‘வனஜா கிரிஜா’வை பார்த்து ரசிக்கலாம்.
– உதய் பாடகலிங்கம்