ஓவியம் குறித்த ரசனை மக்களிடம் ஏன் இல்லாமல்போனது?

ஒரு கிராமத்துப் பெண் காலையில் எழுத்தவுடன் என்ன செய்கிறாள் சொல்லுங்கள்? அவளுக்கு எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், முதல் வேலையாக வாசல் தெளித்துக் கோலம் போடுகிறாள்..
தினமும் ஒரு கலை வெளிப்பாட்டைச் செய்துவிட்டுத்தான் தன் நாளைத் தொடங்குகிறாள். இதுதான் தமிழனின் ஓவிய மரபு.
ஆனால், இந்தக் கோலங்களை ஆவணப்படுத்தி உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஷந்தால் ஜுமால் எனும் ஒரு பிரெஞ்சுக்காரப் பெண்மணிதான் வரவேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு மார்கழி மாதமும் பிரான்சிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஷந்தால் ஜுமால் பல்வேறு கோலங்களைத் தொடர்ந்து ஆவணப் படுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் பாருங்கள்? அடுக்கு மாடிகளில் கோலம் போட இடமில்லை என்று கோலம் படம் போட்ட பிளாஸ்டிக் ஸ்டிக்கரை வாங்கி வந்து வாசலில் ஒட்டி விடுவதோடு சரி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் நாம் அர்ச்சனை செய்வதோடு கோயிலை விட்டு வெளியே வந்து விடுகிறோம். தூண்களில் உள்ள சிற்பங்களின் நுணுக்கங்களை ரசிப்பதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கிறோமா?
அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மதுரை மண்டபத்தை நாம் சந்தைக் கடையாகத்தானே வைத்திருக்கிறோம்?
ஒரு கிராமதேவதைகளின் சுடுமண் சிற்பங்களின் கலை நுட்பங்களை நாம் ரசித்து இருக்கிறோமா? ‘சிற்பியின் நரகம்’ எனும் சிறுகதையில் புதுமைப் பித்தன் இந்த கேள்வியைத்தான் எழுப்புகிறார்.
ஒரு கணிதத்தைச் சொல்லிக்கொடுப்பது போல ஓவியத்தை, சிற்பத்தை ரசிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டியது இன்று அவசியமாகிறது..
எனவேதான் கலையை ரசிப்பது எப்படி என்று நான் பேசும் பல காணொளிகளை சுருதி டிவி கபிலன் தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார்.
ஓவியத்தை எப்படி ரசிப்பது என்பதை பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாக நாம் வைக்க வேண்டி இருக்கிறது.
ஒருமுறை லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் தொடக்கப்பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு வந்து மாபெரும் இங்கிலீஷ் ஓவியர்களான டர்னர், கான்ஸ்டேபுள் ஆகியவர்களின் ஓவியங்களின் முன் அமரச்செய்து அந்த ஓவியங்களை ரசிப்பது எப்படி என்று பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
– இந்திரன்: முகநூல் பதிவு

 

Comments (0)
Add Comment