ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமாகியிருக்கிறார். அவருக்கு என் அஞ்சலி.

எனக்கு அவர் ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்தவராக இருந்திருக்கிறார்.

‘தைரியமாக பேசக்கூடியவர்’, ‘துணிச்சலாக கருத்துகளை சொல்பவர்’ என்று ஒருவரைப் பற்றி சொல்கிறார்களென்றால், அது நம்மூரில் கருத்தை வெளிப்படுத்தியதற்கான துணிச்சலை மட்டும் குறிப்பதாக இருப்பதில்லை.

பொதுவெளியில் மறைந்து வரும் கருத்துகளை / பிம்பங்களை வெளிப்படுத்துவதற்கான ‘சுதந்திரத்தையும்’ சேர்த்து தான் அச்சொற்கள் குறித்து வந்திருக்கின்றன.

உண்மையில் இந்த ‘சுதந்திரத்தில்’ இருப்பதை துணிச்சல் என்று கூறுவதை விடவும், மேட்டிமைத்தனம் என்று தான் கூற வேண்டும்.

துணிச்சலானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்கிற பிம்பம் ஈவிகேஎஸ்க்கு உண்டு. ஆனால் அந்த ‘துணிச்சல்’ பிரச்சினைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.

அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த போது, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி “ஒரு கருத்தை மிகைப்படுத்திக் கூறினார்” என்பதைக் குறிப்பிட்டு விமர்சித்தபோது கருணாநிதியின் சாதி பின்புலத்தைக் குத்தலாக குறிப்பிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு மேடையில் இளையராஜாவை விமர்சித்துப் பேச முற்பட்ட போதும் மேற்கண்ட தொனியையே வெளிப்படுத்தினார்.

இதேபோல முன்பு சோனியாவின் இத்தாலி பெயரைச் சொல்லி பொது மேடையில் ஜெயலலிதா விமர்சித்த போது, “வாணிமஹால் நினைவு இருக்கிறதா?” என்றும் “கோமளவல்லி பெயர் தெரியாதா?” என்றும் கேட்டார் ஈவிகேஎஸ்.

இங்கு ஜெயலலிதாவின் அணுகுமுறையை நியாயப்படுத்த முடியாது. ஆனால் ஜெயலலிதாவிற்கும் ஈவிகேஎஸிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை மட்டும் இங்கு சொல்ல வேண்டும்.

விமர்சிக்கப்பட்ட மூவரும் தங்கள் துறைகளில் பெரிய இடங்களில் இருப்பவர்கள். அவர்களை விமர்சிக்கும் போதும் இந்த ‘பின்புல’ நினைவுகளை சுட்டாமல் பேச முடிவதில்லை என்பது தான் இங்கிருக்கும் துயரம்.

கீழிருந்து மேலே வந்தவர்கள் அதற்காக நடத்திய போராட்டத்தின் மீதான சாடல்களே இவை. எல்லா விமர்சனங்களிலும் தொடர்புடையவர்களின் கடந்த காலம் மட்டுமே திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இங்கு கவனிக்கலாம்.

அவர்களுடைய ‘கீழான’ கடந்த காலத்தை சுட்டுகிறபோது, அது தன்னுடைய கடந்த காலம் அப்படியிருந்ததில்லை என்கிற பெருமிதத்தையும் சேர்த்தே சொல்லிவிடுகிறது என்பதையும் நாம் இவற்றில் கவனிக்க வேண்டியிருக்கிறது.

ஈவிகேஎஸின் துணிச்சலான விமர்சனங்களில் இத்தகைய பிரச்சினைகள் இருந்தன.

இந்த ‘துணிச்சல்’ தான் அவர் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்க உதவியது. இது ஒருவரின் அல்லது ஒரு கட்சியின் பிரச்சினை மட்டுமல்ல. உள்ளூரில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வரை பலரும் இவ்வாறிருப்பதை தான் இன்றும் பார்க்கிறோம்.

வேண்டுமானால் ஈவிகேஎஸின் இந்த வகை விமர்சனங்கள் பற்றி இவ்வாறு சமாதானம் கூறிக் கொள்ளலாம்: மற்றவர்களைப் போல வெளியில் மறைத்துக் கொண்டு, உள்ளுக்குள் வேறாக இருப்பதை விடவும், வெளியேயும் அப்படி இருந்தவர் அவர்.

ஆனால் புறத்தில் மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் மெய்யாக இருப்பதை பற்றி தானே நாம் யோசிக்க வேண்டும்.

நன்றி: Stalin Rajangam முகநூல் பதிவு

Comments (0)
Add Comment