பெரியாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதில் வருத்தமே!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் நெகிழ்ச்சியான நேர்காணல்

ஈரோடு கொங்கு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று. புதன், வியாழன் நாட்களில் இங்கு வந்து பார்த்தால் நகரம் ‘ஜே.ஜே.’ என்று இருக்கும். அப்போதுதான் இங்கு சந்தை.

திருப்பூர், ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் தயாராகிய விதவிதமான டர்கி டவல்களை, ஜமுக்காளங்களை, கைலிகளை எல்லாம் கொண்டு வந்து கடை பரப்புவார்கள்.

இதற்காகவே வட இந்தியாவிலிருந்து வியாபாரிகள் வந்து குவிந்துவிட இரண்டு நாட்களில் ஈரோட்டில் புரள்கிற பணமதிப்பு மட்டும் கோடிக்கணக்கில். கடந்த நாற்பது வருஷங்களுக்குள் உழைப்பின் மூலம் தன்னைத் தொழில் நகரமாகப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது ஈரோடு.

தமிழ்நாட்டில் அதிக வருமானமுள்ள சில நகராட்சிகளில் முக்கியமானது ஈரோடு. ஒரு காலத்தில் நகராட்சியின் சேர்மனாக இருந்தவர் பெரியார். அப்போது கிட்டத்தட்ட ஈரோட்டைச் சுற்றியிருக்கிற 23 கோவில்களுக்கு தர்மகர்த்தாவாகவும் இருந்தார்.

இந்த தகவல் பலருக்குக் கேட்க அதிசயமாகத் தோன்றும். இங்கு மூன்று முறை காந்தியடிகள் வந்திருக்கிறார்.

பெரியாரின் தந்தை வெங்கடப்ப நாயக்கர் அவரது ஆரம்பகாலத்தில் காவிரிப் பாலத்திற்குக் கீழே கல் உடைத்துக் கூலி வேலை செய்தவர்தான்.

பிறகு பெட்டிக்கடை வைத்து படிப்படியாக உயர்ந்து இறுதியில்தான் மஞ்சள் மண்டியைத் துவக்கினார்.

கல்கத்தா, பம்பாய், ஆந்திராவுக்கெல்லாம் இங்கிருந்து மஞ்சள் போகும். அதை வைத்துத்தான் அவர் நன்றாகச் சம்பாதித்தார். வீடும் கட்டினார்.

அந்தக் காலத்தில் வங்கிகள் கிடையாது. அதனால் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் அப்பாவிடம் பணத்தைக் கொடுத்து வைப்பார்கள். அவர் அதற்கு ஓரளவு வட்டியைச் சேர்த்துக் கொடுப்பார். வியாபாரத்தில் அவருக்கு நல்ல பெயர். 

பெரியார் ஈரோடு நகராட்சி சேர்மனாக இருந்தபோது சேலம் நகராட்சி சேர்மனாக இருந்தவர் ராஜாஜி.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஈரோடு மக்களுக்குக் குழாய் இணைப்பு மூலம் வழங்கப்பட்டதும் பெரியார் சேர்மனாக இருந்த காலத்தில்தான். அதைப் பார்வையிட ஈரோட்டிற்கு வந்திருந்தார் ராஜாஜி.

எட்டாவது வரைக்கும் படித்த பெரியாரை வீட்டில் சற்று ஒதுக்கியே வைத்திருந்தார்கள். வீட்டில் பெரியார் அவரது தாயாரைத் தொட்டால்கூட அவர்கள் உடனே குளித்துவிடுவார்கள். காரணம் பெரியாருக்கு அப்போது தாழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சமூகத்தினருடன் இருந்த பழக்கமே. அவர்கள் வீட்டில் அவ்வளவு ஆச்சாரம்.

பல சாமியார்களுக்கும், உயர் ஜாதியினருக்கும் சாப்பாடு போட்டுவிட்டுத்தான் சாப்பிடுவார்கள் அவரது வீட்டில்.

பெரியாரின் அப்பாவுக்கு அப்போதே ஊரில் நல்ல பெயர். காரை வாய்க்கால் என்று அவரது குடும்பம் இருந்த பகுதிக்கு அருகில் தான் அக்கிரஹாரம் இருந்தது.

பிராமணியத்தை பெரியார் எதிர்த்தாலும் இங்குள்ள பிராமணர்கள் அவருடன் நெருக்கமாக இருப்பார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பெரியாரும் துவேஷம் காட்ட மாட்டார்.

கஞ்சத்தனமாக பெரியார் இருப்பார் என்று சொல்வார்கள். அது தவறு. அவர் வலியுறுத்தியது சிக்கனத்தை. அனாவசியச் செலவை அவர் விரும்பமாட்டார். அதே சமயத்தில் ஈரோட்டில் மருத்துவமனை துவக்கியபோது அந்தக் காலத்திலேயே அவர் கொடுத்த நன்கொடை ஒரு லட்சம் ரூபாய்.

குடியரசு பத்திரிகை அலுவலகமும் அங்கேதான் இருந்தது. அதில்தான் அண்ணா, கலைஞர் எல்லாம் இருந்தார்கள். திராவிடர் கழகக்கொடி உருவானதும் இந்த இடத்தில்தான்.

பெரியார் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது ஈரோட்டில்தான் காங்கிரஸின் தலைமை அலுவலகம் இருந்தது. திராவிட மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் ஈரோட்டிற்கு உண்டு. 

எண்பதாம் வருஷத்தில் கோவை மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டத்தைத் தனியாகப் பிரித்த பிறகு இங்கு மளமளவென்று வளர்ச்சி. பல தொழில்கள் விருத்தியடைந்தன. ஈரோடு தொழில் நகரமானதற்குப் பலரைக் காரணமாகச் சொல்ல வேண்டும்.

கட்சி சார்பில்லாத முறையில் இதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் முன்னால் அமைச்சரான முத்துச்சாமி.

முதலில் வறட்சியாக இருந்த ஈரோடு, கீழ் பவானிப் பாசன நீர் வந்த பிறகே மாறுதல் அடைந்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் இங்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈஸ்வரன். அவர் காமராஜருடன் வாதாடி, அந்தத் திட்டத்தை அமல்படுத்தினார்.

அறுபதுகளுக்குப் பிறகே ஈரோடு, பள்ளிபாளையம் என்று பல பகுதிகளிலும் விசைத்தறிகள் பெருக ஆரம்பித்தன. ஜவுளித் தொழிலுக்கு முக்கியக் கேந்திரமானது ஈரோடு.

அதற்கு ஒரு விதத்தில் இங்கு ஓடும் காவிரி ஆறும் ஒரு காரணம். இன்னொன்று இங்குள்ள மக்களின் உழைப்பு. ஆண்களும், பெண்களும் விவசாயத்திலும், விசைத் தறியிலும் கடுமையான உழைப்பாளிகள்.

எங்க தாத்தா கிருஷ்ணசாமி நாயக்கரும், பெரியாரின் அப்பா வெங்கடப்ப நாயக்கரும் உடன்பிறந்தவர்கள்.

எங்க தாத்தா, அதாவது பெரியாரின் அண்ணன் பெரிய – பக்திமான். இருந்தாலும் அவர்தான் குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியர்.

பெரியார் தன் கொள்கைப்படி கடுமையாகப் பத்திரிகையில் எழுதிவிடுவார். அதற்காக அப்போதிருந்த அரசு வழக்குப் போட்டு கைது செய்யும்போது எங்க தாத்தாவைத்தான் கைது செய்வார்கள். எல்லோரும் அப்போது கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.

எங்க வீட்டில் கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தம், பொன்னம்பலனார் என்று பல தலைவர்கள் வருவார்கள். என்னுடைய அப்பா(சம்பத்)வும் கூட்டங்களுக்குப் போய் பெரியார் மாதிரி, ஜீவானந்தம் மாதிரிப் பேசுவார்.

அப்பாவுக்கும், அண்ணாவுக்கும் ரொம்பவும் நெருக்கம். உண்மையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்க அண்ணாவைத் தூண்டியவர்களில் முக்கியமானவர்கள் எங்க அப்பாவும், என்.வி. நடராசனும்.

பல மாநாடுகள் இங்கே நடந்திருக்கின்றன. இன்றைக்கும் பெரியார் பெயரில் மன்றங்கள் இருக்கின்றன.

என்னுடைய அரசியல், இளைஞர் காங்கிரஸ், மாவட்டத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், பிறகு தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவி வரைக்கும் வரக் காரணமும் ஈரோட்டுச் சூழல்தான்.

ரொம்பவும் மரியாதையுடன் மற்றவர்களை அழைக்கிற பண்பு ஈரோட்டு மக்களிடம் இயல்பாக இருக்கும். எடுத்ததும் ஒருமையில் அழைக்க மாட்டார்கள். பெரியாரையே எடுத்துக்கொண்டால் யாரையும் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் ‘வாங்க’ என்று மரியாதையுடன் தான் வரவேற்பார்.

எழுந்து நிற்பதில் சிரமம் இருந்தாலும் விடைபெறும்போது சேரில் இருந்து எழுந்து விடை கொடுத்து அனுப்புவார். இது ஈரோட்டுப் பண்பின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்வேன்.

அதுமாதிரி ஜாதி வித்தியாசம் இருந்தாலும், அதை வைத்து சண்டையிட்டுக்கொள்கிற மனோபாவம் இங்கு இல்லை.

ஈரோட்டிலேயே நகராட்சிக்கு எதிரே இருக்கிற மாரியம்மன் கோவில் திருவிழா ஒரு மாதத்திற்கு விசேஷமாக நடக்கும். பாரியூர் கோவில், பண்ணாரியம்மன் கோவில், ரங்கநாதர் கோவில் எல்லாம் பிரசித்தி பெற்ற கோவில்கள்.

இங்குள்ள ரங்கநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீரங்கநாதருக்குத் தலையில் கிரீடம், காலில் வெள்ளித்தகடு எல்லாம் செய்தது பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மாள்.

இன்றைக்கும் அங்கிருக்கிற கல்வெட்டில் அவர்களது பெயர் இருக்கிறது. அங்கு நடக்கிற திருவிழாவுக்கு அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து பட்டாசுகளைப் பெரியார் மூலம் வரவழைத்து வெடித்திருக்கிறார்கள்.

இதெல்லாம் பெரியார் அந்தக் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்தபோது நடந்த காரியங்கள். காங்கிரஸ் தலைவராகப் பெரியார் ஆனதுமே இதையெல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்.

ஈரோடு தொழில் நகரமாக இருந்தாலும் இதற்கு இயற்கையழகைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது காவிரி ஆறு. பக்கத்தில் பவானியில் இருக்கிற கூடுதுறை அழகான இடம்.

முன்பெல்லாம் ஈரோட்டில் சம்பாதிப்பதையெல்லாம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இப்போது சம்பாதிப்பதற்கு ஏற்ப அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்திருக்கிறது.

சனி, ஞாயிறு என்றால் உற்சாகத்துடன் வெளியே கிளம்பிவிடுகிறார்கள்.

இன்னொரு முக்கிய விஷயம், இங்குள்ளவர்கள் வரி கட்டுவதில் காட்டுகிற அக்கறை. நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் அதில் மிகச் சரியாக இருப்பார்கள். இது பல ஆண்டுகாலப் பழக்கம். 

இங்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெரிதாகக் கிடையாது. அவரவர்களுக்குச் செய்கிற வேலைக்கு ஓரளவு சரியான கூலி. மக்களும் அந்த அளவுக்கு உழைக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைத் தரம், நகரத்தில் பொதுவாக இருக்கிற சீர்திருத்தங்கள் என்று பார்த்தால் மற்ற சில நகரங்களைவிட மேல் என்றுதான் சொல்ல வேண்டும்.

எனக்கு இன்றைக்கும் ஈரோட்டில்தான் சொத்துக்கள் இருக்கின்றன. முன்பு குடியரசு அலுவலகமாக இருந்த இடம்தான் இப்போது என்னுடைய வீடு. அதனால் ஒருவிதச் சொந்தத்தை அங்கு அனுபவிக்க முடியும்.

பெரியார் பல நகரங்களுக்குச் சென்று அலைந்தாலும் கடைசியில் தன் உடல் ஈரோட்டில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றே விரும்பினார்.

இங்கு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகில்தான் பெரியாரின் அப்பா, பெரியாரின் பெரியப்பா (எங்க தாத்தா) எல்லாம் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அங்கு தன்னைப் புதைப்பதற்காக தனியிடத்தையே ஒதுக்கியிருந்தார் பெரியார். இதைப் பலரிடம் அவரே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் பெரியார் இறந்ததும் அவரைச் சென்னையிலேயே அடக்கம் பண்ணிவிட்டார்கள். இப்போது அவருக்காக ஒதுக்கியிருந்த இடத்தில் எங்களது அப்பாவின் அஸ்தி இருக்கிறது.

அந்த அளவுக்குப் பெரியாருடைய நினைவிலேயே ஈரோட்டுக்குத் தனியிடம் இருந்திருக்கிறபோது மற்றவர்களுக்கு எம்மாத்திரம்?

– பத்திரிகையாளர் மணா எழுதிய ‘ஊர் மணம்’ நூலிலிருந்து.

Comments (0)
Add Comment