தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து, முட்டி மோதி, பிறகு திரையில் முகம் காட்டி, சில காலம் கழித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த நடிப்புக்கலைஞர்கள் வெகு சிலரே.
அவர்களே அந்த புகழைத் தக்க வைக்கும் உழைப்பையும் நிதானத்தையும் அனுபவ அறிவையும் பெற்றிருப்பார்கள். சமகாலத்தில் அப்படியொரு நடிகராகத் திகழ்பவர் ஆர்யா.
ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவாவின் மூலமாக அறிமுகமாகியிருக்க வேண்டியவர். அவர் இயக்கிய ‘உள்ளம் கேட்குமே’ படம் தாமதமான காரணத்தால், அதில் இடம்பெற்ற அசின், பூஜா, ஆர்யா என்று அனைவருமே வெவ்வேறு படங்களின் வழியே தமிழில் ரசிகர்களுக்கு அறிமுகமாயினர். அந்த வகையில், ஆர்யாவின் முதல் படமாக ‘அறிந்தும் அறியாமலும்’ அமைந்தது.
அந்த படத்தில் குட்டியாக வந்து பிரகாஷ்ராஜ், நவ்தீப், சமிக்ஷா, ரவிராஜ், வில்லனாக வந்த யோக் ஜேப்பி என்று பலரிடமும் வம்பிழுத்திருப்பார். அவரது வசன உச்சரிப்புகளும், குரல் வளமும், தோற்றமும் ‘ஆள் வித்தியாசமா இருக்காரே’ என்று திரையுலகினரை எண்ண வைத்தது. கூடவே ‘இப்படியான வேடங்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பாரோ’ என்றும் யோசிக்க வைத்தது.
ஆனால், அடுத்தடுத்த படங்களில் வித்தியாசம் காட்டி அந்த கணிப்புகளைத் தவிடுபொடியாக்கினார் ஆர்யா.
கவனிக்க வைத்த படங்கள்!
அந்த வரிசையில், சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘வட்டாரம்’ அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்திருக்க வேண்டிய படமாக அமைந்தது. ‘நான் கடவுள்’ படத்திற்காகப் பாலா அவரை ‘புக்’ செய்த பிறகு, மிகக்குறுகிய காலத்தில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட படம் அது. அந்தக் குறைகள் தெரியாமல், ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக அது இருந்தது. அன்றைய காலகட்டத்தில், ஒரு நாயகன் வில்லத்தனம் செய்வது ரசிகர்களால் ஏற்கப்படவில்லை. ஆனால், அப்படம் நல்லதொரு அனுபவத்தைத் தரும் என்பதை இப்போதும் உணரலாம்.
ஓரம் போ – இயக்குனர் இணை புஷ்கர் – காயத்ரியின் முதல் படைப்பு. அதில் ஆட்டோ டிரைவராக வந்து அதகளம் செய்திருப்பார் ஆர்யா. அப்படத்தில்தான் முதன்முறையாகக் காதல் காட்சிகளிலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் தன்னியல்பை வெளிப்படுத்தியிருப்பார்.
நான் கடவுள் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை. அப்படியொரு வகைமையில் இந்தியப் படம் எதுவும் வந்ததில்லை என்பது போன்று அமைந்திருந்தது அதன் உள்ளடக்கம். ‘எச்சில் இரவுகள்’ போன்று துக்கத்தைப் பேசாமல், ஒரு அகோரியின் மூர்க்கத்தைப் பேசி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படத்தில் ஒரு இளம் அகோரியாக மட்டுமே ஆர்யா தெரிந்தார் என்பதே அவரது நடிப்புக்கான அங்கீகாரம்.
சிவா மனசுல சக்தி, காதல் சொல்ல வந்தேன் போன்று சில படங்களில் ஒரு காட்சியிலும் தலைகாட்டியது ஆர்யாவின் தனிப் பாணி. ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்று அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது.
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ முழுக்க முழுக்க ஆர்யாவின் நடிப்பு பாணியை ஒட்டி உருவாக்கப்பட்ட படம். அவரது குரலில், வசன உச்சரிப்பில் நாம் கண்டுபிடிக்கிற குறைகளையே நிறைகளாகக் காட்டிய படம். இயக்குனர் ராஜேஷ் எம்மின் முழு வீச்சையும் அப்படத்தில் உணர முடியும்.
’ராஜா ராணி’ – இயக்குனர் அட்லீயின் முதல் படம். அதில் ஆர்யா வெறுமனே நகைச்சுவை, ஆத்திரம், காதல் உணர்வை மட்டுமல்லாமல் எமோஷனல் காட்சிகளில் அழ வைக்கிற நடிப்பைத் தந்திருப்பார். அவரைப் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்த படங்களில் அதுவும் ஒன்று.
இயக்குனர் மகிழ் திருமேனியின் ‘மீகாமன்’ தமிழில் வந்த ‘அண்டர்காப்’ கதைகளில் மிகச்சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டது. பெரிதாக காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாதபோதும், நாயகனை ஒரு ரோபோ போன்று காட்டியபோதும், அத்திரைக்கதையில் நிறைந்திருக்கும் சுவாரஸ்யம் ஆய்வுக்குரியது.
இந்தப் பட வரிசையில் டெடி, சார்பட்டா பரம்பரையையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படங்கள் கொரோனா காலத்தில் ஓடிடி தளங்கள் வழியே பல மொழி ரசிகர்களைச் சென்றடைந்தன. அரண்மனை 3, எனிமி, சைந்தவ் வரை அந்த உத்தி ஆர்யாவுக்குப் பலன் தருகிறது.
தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் முகம் காட்டியிருக்கிறார் ஆர்யா. எதிர்காலத்தில் ‘பான் இந்தியா’ நட்சத்திரம் ஆகும் நோக்கம் அதன் பின்னிருக்கலாம்.
நல்லதொரு உதாரணம்!
நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தடகள வீரராகவும் ரசிகர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஆர்யா. உடலைப் பேணுவதிலும், போதைப்பொருட்கள் பயன்பாட்டில் இருந்து ஒதுங்கியிருப்பதிலும் பலர் பின்பற்றும் விதமாக இருக்கிறார். இது போகத் திரையுலக நண்பர்களோடு அவர் அடிக்கும் லூட்டிகள் தனிரகம். மேடைகளில், பேட்டிகளில் அதனைக் காணும்போது ரசிகர்களிடம் உற்சாகம் பிறப்பது நிச்சயம்.
தன்னம்பிக்கை நிறைந்திருக்கும் ஆர்யாவின் வாழ்க்கை முறை பலருக்கும் உதாரணமாகத் திகழ வேண்டும். திரையிலும் பொதுவெளியிலும் ரசிகர்களுக்கு அவர் தரும் ஆச்சர்யங்கள் தொடர வேண்டும். 45-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்யாவுக்கு நமது வாழ்த்துகள்..!
– உதய் பாடகலிங்கம்
#உள்ளம்_கேட்குமே #ஆர்யா #இயக்குனர்_ஜீவா #அறிந்தும்_அறியாமலும் #கலாபக்_காதலன் #பட்டியல் #வட்டாரம் #நான்_கடவுள் #பாஸ்_என்கிற_பாஸ்கரன் #ராஜா_ராணி #டெடி #சார்பட்டா_பரம்பரை #ullam_ketkume #arya #arinthum_ariyamalum #kalaba_kathalan #pattiyal #vattaram #naan_kadavul #boss_endra_baskaran #raja_rani #teddy #sarpatta_parambarai