இந்த பெரிய பாதம் (புடைப்புச் சிற்பம்) வேலூருக்கு அருகிலுள்ள பகவதி மலை என்ற குன்றில் உள்ளது. தீர்த்தங்கரரின் பாதமாக இது கருதப்படுகிறது.
“இதே போன்ற பாதங்கள் திருவண்ணாமலை மலையின் மீதும் இருக்கின்றன” என்ற குறிப்போடு இந்த படத்தை அனுப்பி வைத்திருந்தார் தியடோர் பாஸ்கரன்.
திருவண்ணாமலையிலிருக்கும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் விசாரித்தேன். பார்த்தவர்கள் ஆமாம் என்றார்கள். மற்றவர்கள் கேள்விபட்டிருக்கிறோம் என்றார்கள்.
தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் /சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.
தீபத்தூணுக்கு அருகில் இத்தகைய பாதச் சுவடுகள் சிறியதாகவே பெரிதாகவோ இருப்பதையும் சேர்த்தே காணலாம்.
பாத வழிபாடு பெளத்த – சமண மரபாகும். மணிமேகலையில் புத்தரது பாதபீடிகை பற்றி படிக்கலாம். பூம்புகார் அகழ்வாய்வில் புத்தரின் பெரிய பாத சிற்பங்கள் கிடைத்துள்ளன. ‘நெறியைத் தொடர்வது’ என்பதன் குறியீடாக பாதங்களை கொண்டதுண்டு.
தமிழகத்தில் கார்த்திகை தீபம் பற்றி எழுதப்படும் பெரும்பாலான குறிப்புகள், நூல்களை சார்ந்தோ, சுய விருப்பங்கள் சார்ந்தோ தான் அமைகின்றன.
தீபமேற்றப்படும் மலைகள், அங்கு நிலவும் வழிபாட்டு முறைகள், அவற்றில் நடந்து வந்திருக்கும் மாற்றங்கள், தொல் எச்சங்கள் என்று கள ஆய்வு நோக்கில் அமைவதில்லை.
அத்தகைய திசையில் நோக்கினால் இந்த மரபு மீதிருக்கும் பெளத்த சமண தொடர்பை சாதாரணமாகவே கண்டுகொள்ள முடியும். ஆனால் அது நடப்பதே இல்லை.
கார்த்திகை தீபம் பற்றி எல்லா தரப்பையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வு நூல் ஏதும் இதுவரையிலும் தமிழில் வரவில்லை. கூறியது கூறலையே சார்ந்திருக்கும் நம்முடைய ஆய்வு போக்கிற்கு இதுவும் ஒரு சான்று.
நம் முன் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளிலிருந்தே கவனத்திற்கு கொணரப்படாத பல செய்திகள் இருந்து விடுகின்றன. அவ்வாறு கவனத்திற்கு வராத செய்திகள் பண்பாட்டு ஏகபோகவாதிகளுக்கு நன்மையை தருமானால் அவை அப்படியே அமுக்கப்பட்டு விடுகின்றன.
நன்றி: Stalin Rajangam முகநூல் பதிவு