இலக்கியத் தரமான எழுத்தின் மூலமாகவும் ஜனரஞ்சக வாசகப் பரப்பைப் பெறமுடியும் என்பதற்கு எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் ஓர் அடையாளம். அவருடான சந்திப்பின் ஒரு பகுதி.
கேள்வி:
குற்றம் புரிந்தவன் தன் அனுபவத்தின் வாயிலாகவே திருந்தாதபோது, புத்தக வாசிப்பின் வழியாக மட்டும் திருந்திவிடுவானா?
பதில்:
அனுபவங்கள் என்பது எப்போதும் எல்லோருக்கும் நடக்கக் கூடியதாகத்தான் இருக்கும். சந்தர்ப்பம் என்பது வேறு. தன்னிலையை உணர்தல் என்பது வேறு.
பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. இருக்கையில் நானும் அமர்ந்திருந்தேன். ஒரு கை மட்டும் ஜன்னலுக்கு வெளியே நீண்டு, கொய்யா வியாபாரி கூடையில் இருந்து ஒரு பழத்தை எடுத்துவிட்டது.
‘திருடன்’ என்று கத்தத் தொடங்கி, வாயில் வந்ததையெல்லாம் திட்டியபடியே, பேருந்துக்குள்ளே வந்த வியாபாரி அதிர்ந்து போனார். ஏனெனில் கொய்யாவை எடுத்தது நாலு வயது குழந்தை.
வியாபாரிக்கு பெரிய குற்ற உணர்ச்சி வந்துவிட்டது. பஸ்ஸில் இருந்த யாருமே அவரைக் குற்றம் சாட்டவில்லை. உடனே அவரே இன்னொரு கொய்யாவை குழந்தையிடம் வெட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இதுதான் தன்னிலை உணர்தல். குழந்தையைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அந்த இடத்தில் பெரிய கைகலப்பு ஏற்பட்டிருக்கும்.
இதை நான் படைப்பில் பதிவு செய்தால், அந்த வியாபாரியின் இடத்தில், வாசிப்பவன் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்வான்.
தன் குற்றத்தை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதவனும், இந்தப் பதிவின் மூலம் தன் முகத்தையும் அகத்தையும் திரும்பிப் பார்த்துக் கொள்வான். தன்னிலையை உணர்ந்து திருந்துவான்.
– நன்றி: தினமணி