“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..” இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன்.
இதோ.. இன்னும் கூட பாரதி பற்றி கண்ணதாசன்…
“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமல் போனவன் பாரதி. தன் கவிதையை யார் ரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்.
காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி ரசிப்பார்கள்? என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்.
பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி.
அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.
துர்பாக்கியம் பிடித்த தமிழகமே
பாரதியைக் கொண்டாடு!
அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,
பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.”
– 1978 – செப்டம்பர் ‘கண்ணதாசன்’ இதழில் கண்ணதாசன் எழுதிய பகுதியிலிருந்து…
நன்றி: முகநூல் பதிவு.