சென்னையில் INTERNATIONAL CLOWN SHOW நடைபெற்றது. மகள்களுடன் போயிருந்தேன். அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, பெரு போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் கோமாளிகள் வந்திருந்தனர்.
இந்த நிகழ்வினை பிரபல இந்தியக் கோமாளி ஃபிளப்பர் தொகுத்து வழங்கினார். இரண்டு மணி நேர நிகழ்ச்சி. அரங்கம் முழுமையாக நிறைந்திருந்தது.
COMEDY IS A SERIOUS BUSINESS என்பார்கள். நேற்றைய தினம் முழுமையாக உணர முடிந்தது. அந்த எண்சான் உடலை வளைத்து, நெளித்து, மடக்கி, கொக்கியாக்கி… இப்படி என்னவெல்லாம் அந்த உடலைப் பயன்படுத்தி சிரிக்க வைக்க முடியுமோ, அத்தனையும் செய்தார்கள். குழந்தைகள் சிரித்துத் தீர்த்தார்கள்.
பார்வையாளர்களை தங்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள். அதற்கென சில நிகழ்வுகளையும் வைத்திருந்தனர்.
பேரன் பேத்திகளோடு வந்திருந்த தாத்தா பாட்டிகள் பலர் எழுந்து நின்று ரைம்சுக்கு ஆடுவதைப் போல ஆடிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
குழந்தைகளுக்கு எந்தக் கட்டுப்படும் விதிக்கக்கூடாது என்பதும், அவர்கள் கூச்சலிடத் தடையில்லை என்றும் முதலிலேயே சொல்லப்பட்டுவிட்டதால், அரங்கம் முழுவதுமே பொடிசுகள் வசம்தான்.
“விளையாடுங்கள்… விளையாட்டு போல உங்களை மகிழ்விக்கும் எதுவொன்றும் இந்த உலகில் இல்லை.. வயது ஒரு விஷயமே இல்லை.. யாரும் உங்களுக்குத் துணையாக விளையாட வேண்டாம்… நீங்களே உங்களுக்கு விளையாட்டுத் தோழனாகுங்கள்..” என்பதைத்தான் சொல்லிக்கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அரங்கம் முழுவதையும் இருட்டாக்கி, மேடையில் மட்டுமே ஒளியைக் கொடுத்தால், பார்வையாளர்கள் குழந்தைகள் போலக் கத்துவதற்கும், கூச்சலிடுவதற்கும் தடையேதும் இருந்திருக்கவில்லை. இதனை நான் கற்றுக்கொண்டிருந்த யோகா மையத்தில் செய்வார்கள்.
எல்லோருடைய கண்களையும் கட்டிவிடுவார்கள். அங்கு ஒலிக்கும் இசைக்கு ஆடலாம், பாடலாம், அழலாம், கூச்சலிடலாம்.. யாரும் நம்மைப் பார்க்கவில்லை என்றால் நமது அகமனத்தின் கட்டுகள் அவிழும்.
அதிலும் எல்லோரும் இருக்க, நாம் மட்டுமே தனிமையாய் இருப்பதைபோல நினைக்கவைப்பதும், மனதினை இலகுவாக்குவதும் ஒரு சிறந்த பயிற்சி. அன்றைய தினம் அது தான் நடந்தது.
“எல்லோரும் உங்கள் பெயரை உரக்கச் சொல்லுங்கள்” என்றதும் அவரவர் பெயரினைக் கத்தியதும், குழந்தைகள் ஆடுவது போல பெரியவர்களையும் ஆட வைத்ததும் என ஒவ்வொன்றையும் திட்டமிட்டிருந்தார்கள்.
நான் அந்தக் கோமாளிகளை குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். நாடு நாடாகப் பயணம் செய்கிறார்கள். அவர்களின் அசல் முகம் தெரிவதில்லை. கோமாளிகளாகவே அறியப்படுகிறார்கள். தங்களின் உடலை அவர்கள் பலூன் போலவும், ரப்பர் போலவும் மாற்றிக் கொள்கிறார்கள்.
எதற்காக இத்தனை செய்கிறார்கள்? ஒரே காரணம் சிரிக்க வைக்க.
இவர்கள் எல்லோருக்குமே இளிச்சவாய் போன்றதான தோற்றம் தரும் ஒப்பனை தான். எதற்காக இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று ஒவ்வொருவரையும் கேட்க வேண்டும் போல இருந்தது.
சிலருக்கு அவர்களின் அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் அப்பா என பாரம்பரிய கோமாளி பரம்பரை இருந்தது.
தன் அப்பாவைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள் என்பதைக் குழந்தையில் இருந்து பார்த்த வளர்ந்து தானும் ஒரு கோமாளியாக மாற வேண்டும் என்று நினைத்த அவர்களின் மனதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
வரும் வழியில் மயூராவிடமும் மித்ராவிடமும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், ”உங்களுக்கு இதில் ரொம்பப் பிடித்திருந்தது எது?” என்று கேட்டேன்.
“நீங்கள் இன்று எங்களை மாதிரி சிரித்துக்கொண்டிருந்தீர்கள்” என்றார்கள். “குழந்தையாவே மாறிட்டீங்கம்மா” என்றாள் மித்ரா.
குழந்தைகளைக் காரணமாக வைத்து எனக்காகவும் அங்கு போயிருந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்.
நன்றி: பேஸ்புக் பதிவு